சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வகை வகையா எடுக்குறோம்.. வளைச்சு வளைச்சு எடுக்கிறோம்.. செல்ஃபி அட்ராசிட்டீஸ்!

Google Oneindia Tamil News

சென்னை: இந்திய பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஆகியோருடன் ஒரு சிறுவன் எடுத்துக்கொண்ட செல்ஃபிதான் இப்போ டாக் ஆஃப் த வேர்ல்ட்.

அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் நடைபெற்ற ஹவுடி மோடி நிகழ்ச்சியில் இரு நாட்டுத் தலைவர்களை வரவேற்க நின்றிருந்த சிறுவர்கள் வரிசையில் இருந்த ஒரு சிறுவன், உங்களுடன் நான் ஒரு செல்ஃபி எடுத்துக் கொள்ளட்டுமா என்று ஆசையுடன் கேட்க, இரண்டு தலைவர்களும் மகிழ்ச்சியாக ஒப்புக்கொண்டு அந்த சிறுவனின் செல்ஃபிக்கு போஸ் கொடுத்தனர். உலகின் சக்தி வாய்ந்த இரு தலைவர்கள் இப்படி ஒரு சிறுவனின் ஆசையை நிறைவேற்றி வைத்ததை உருகி உருகி புகழ்ந்துகொண்டிருக்கிறார்கள் அவர்களின் ஆதரவாளர்கள்.

முன்பெல்லாம் பிரபலங்களிடம் ஆட்டோகிராப் வாங்குவார்கள். அதை நினைவுப் பொக்கிஷம் போல பாதுகாத்து நண்பர்களிடம் காட்டி சந்தோஷப்பட்டுக் கொள்வார்கள். இந்த ஆட்டோகிராப் கலாச்சாரத்தின் நவீன வடிவம்தான் பிரபலங்களுடனான செல்ஃபி. செல்ஃபி என்ற உடன் எல்லா பிரபலங்களும் சிரித்த முகத்துடன் தோளில் கை போட்டு போஸ் கொடுத்துவிடுவதில்லை. சிலர் நடிகர் சிவகுமாரைப் போல தட்டிவிட்டுப் போய்விடுகிறார்கள், சிலர் நம்ம வைகோவைப் போல காசு கொடு, செல்ஃபி எடுன்னு கட்சி நிதி திரட்ட இதையே ஒரு புது டெக்னிக்கா பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

வைகோ போல சிலர்

வைகோ போல சிலர்

இந்த செல்ஃபி வந்த பிறகு பிரபலங்கள் படும்பாடு கொஞ்ச நஞ்சமல்ல. ஆளுக்கு ஒரு போனை தூக்கிக்கொண்டு ஓடி வந்தால் பிரபலங்களும் எவ்வளவு பேருடன்தான் சிரித்த மாதிரியே நின்று போஸ் கொடுத்துக் கொண்டிருப்பது. அண்மையில் அத்திவரதரைப் பார்க்க வந்த நமீதாவை நம்ம ஆட்கள் வழியிலேயே மடக்கி செல்ஃபியா எடுத்து பாடாய்படுத்திவிட்டார்கள். அய்யா சாமீகளா, நான் அத்திவரதரை பார்க்கணும், ஆளை விடுங்கன்னு அம்மணி தெறித்து ஓடினார். கிட்டத்தட்ட இதே நிலைதான் நயன்தாராவுக்கும். வரதராஜ பெருமாள் கோவிலில் அந்த ஐயர் எடுத்த செல்ஃபியை "நயன்தாராவை தரிசித்த அய்யர், உடன் அத்திவரதர்" என்று மீம்ஸ் போட்டு கலாய்க்கும் அளவுக்கு அது வைரலாக வலம் வந்தது.

வைரல் ஆகணும்ல

வைரல் ஆகணும்ல

நாம எடுக்கிற ஒவ்வொரு செல்ஃபியும் இப்படி கில்லி மாதிரி வைரல் ஆகணும்னுதான் செல்ஃபி எடுக்கிற எல்லாரும் ஆசைப்படுறாங்க. அதுக்காக மெனக்கெட்டு வித்தியாச வித்தியாசமா யோசிச்சு செல்ஃபி எடுக்கிறாங்க. நண்பர்கள் மத்தியில் கெத்து காட்டனும்னு செல்ஃபி எடுக்கப்போய், பல்பு வாங்கியவர்களும் ஏராளமாக இருக்கிறார்கள். செல்ஃபி எடுக்கும்போது அக்கம்பக்கம் என்ன இருக்கிறது என ஒருமுறை பார்க்க வேண்டும். அப்படி கவனிக்கத் தவறிவிட்டாலும், அந்த செல்ஃபியை வலைதளத்தில் பதிவேற்றுவதற்கு முன்பாவது பார்க்க வேண்டும். இரண்டுமே செய்யலேன்னா நண்பர்கள் ரவுண்ட் கட்டி கலாய்க்கும் போது, மூஞ்சை தொங்கப்போட்டுக்கொண்டுதான் நிற்கனும்.

பேக்கிரவுண்ட் முக்கியம்ய்யா

பேக்கிரவுண்ட் முக்கியம்ய்யா

ஒரு இளம்பெண் குளியலறையில் நின்றபடி க்யூட்டாக போஸ் கொடுத்து ஒரு செல்ஃபி எடுத்தார். என்ன பிரயோஜனம் முன்னாடி கண்ணாடி இருக்கிறதை கவனிக்கலை போல. அங்கிருந்த வட்ட பூதக் கண்ணாடியில் அவரது மூக்கு மட்டும் பன்றி மூக்கைப் போல தனியாக போஸ் கொடுத்துக் கொண்டிருந்தது. இந்த போட்டோவை போட்டதும் அவரது நண்பர்கள் பாய்ந்து வந்து அம்மணியை பதம் பார்த்துவிட்டார்கள். இதேபோல இன்னொரு இளம்பெண் அசால்ட்டா உட்கார்ந்து கொண்டு, நாக்கை நீட்டி, விரலை ஆட்டி, சூப்பர் போஸ் கொடுத்து செல்ஃபி எடுத்தார். பின்னாடி அவங்க அப்பா பெரிய தொப்பையோடு நின்று பெண்ணின் செல்ஃபியில் தானும் பங்கேற்றதை அந்த பெண் கவனிக்கவில்லை. விளைவு, கலாய், கலாய் என்று கலாய்த்து எடுத்துவிட்டார்கள் அவரின் கல்லூரி நண்பர்கள். இவராவது பரவாயில்லை அப்பா நடுவில் வந்து அசால்ட் பண்ணிட்டாரு.

அக்கம் பக்கம் பாருடா சின்னராஜா

அக்கம் பக்கம் பாருடா சின்னராஜா

இன்னொரு பெண் செல்ஃபி எடுக்கும்போது, அழையா விருந்தாளியா அவரது செல்ல நாய் பின்னணியில் வந்து பின்னி பெடலெடுத்துவிட்டது. இரண்டு நாயும் அழகா இருக்கு என்ற ரேஞ்சுக்கு கமெண்ட்கள் குவிய ஆரம்பித்துவிட்டன. இதெல்லாம் பரவாயில்லை, பின்னணியை ஒழுங்கா கவனிக்காம எடுத்ததுனால் நிறைய ஆபாச படங்களுக்கு தங்களையும் அறியாமல் கண்டென்ட் கொடுத்தவர்கள் எல்லாம் இருக்கிறார்கள். இதுக்குதான் எதை செய்தாலும் அக்கம்பக்கம் பாருடா சின்ன ராஜான்னு... பாட்டே பாடி வச்சிருக்காங்க!

உயிர் போயிரும்ய்யா

உயிர் போயிரும்ய்யா

இதுபோன்ற செல்ஃபி விளையாட்டுகள் அளவோடு இருக்கும் வரை பிரச்னையில்லை. அளவை மீறும்போதுதான் ஆபத்தாகிவிடுகிறது. வித்தியாசமான செல்ஃபி எடுக்கிறேன் பேர்வழி என்று ஏடாகூடமாக எதையாவது முயன்று தன்னையே காவு கொடுத்துவிடுபவர்களை பற்றிய செய்திகள் சமீப காலமாக அதிகம் கண்ணில்படுகின்றன. தூரத்தில் வரும் ரயில் முன் நின்று செல்ஃபி எடுப்பது, மலை உச்சியின் விளிம்பில் நின்று செல்ஃபி எடுப்பது என தேவையில்லாமல் ரிஸ்க் எடுத்து உயிரையே விட்டுவிடுகின்றனர்.

ஊரெல்லாம் மழை பேஞ்சு தண்ணி

ஊரெல்லாம் மழை பேஞ்சு தண்ணி

இப்போது ஊரெல்லாம் மழை பெய்து, ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த நேரத்தில் ஆற்றங்கரையில் நின்று யாரும் செல்ஃபி எடுக்கக் கூடாது என அரசு எச்சரிக்கை விடுக்கும் அளவுக்கு நம்ம ஆட்களுக்கு செல்ஃபி பைத்தியம் முத்திப்போயிருக்கிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் திருப்பதியில் சிவக்குமார் என்ற இளைஞர் மின்விசிறியில் தூக்குப் போட்டுக் கொள்வதைப் போல செல்ஃபி எடுக்க முயன்று, விளையாட்டு விபரீதமாகி, பரிதாபமாக செத்துப் போனார். இதேபோல வெளிநாட்டில் நீர்நிலை ஒன்றின் அருகில் நின்று செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்த இளம்பெண்ணை திடீரென நீருக்குள் இருந்து பாய்ந்த வந்த முதலை அப்படியே அடித்து உள்ளே இழுத்துச் சென்றது. உடன் இருந்த நண்பர்களால் அலறி துடிக்கத்தான் முடிந்ததே தவிர, அவர் உயிரை காப்பாற்ற முடியவில்லை. இதுபோன்ற சம்பவங்கள் உலகம் முழுவதும் அடிக்கடி நடக்க தொடங்கியதும்தான், செல்ஃபி மோகம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியதன் அவசியம் புரிய ஆரம்பித்திருக்கிறது.

வெட்டி ஆபீசர்

வெட்டி ஆபீசர்

பெரிய தொப்பை இருக்கிற யாரோ ஒரு ஆளுதான் பாஸ்போர்ட் சைஸ் போட்டாவை கண்டுபிடித்திருக்க வேண்டும் என்பார்கள். அதேபோல தன்னை போட்டோ எடுக்க கூட ஆள் இல்லாம ஊர் சுத்திகிட்டு இருந்த யாரோ வெட்டி ஆபிசர்தான் இந்த செல்ஃபியை கண்டுபிடிச்சிருப்பார் போல இருக்கு. இன்னைக்கு எல்லோர் கையிலும் செல்ஃபோன் வந்த பிறகு, அதுவும் எக்கச்சக்க எம்பி கேமரா, நைட் விஷன் என பல்வேறு அதிநவீன வசதிகள் வந்த பிறகு செல்ஃபி ஆர்வலர்களின் ஆட்டம் தாங்க முடியலப்பா. காலையில பல் தேய்க்குறதுல தொடங்கி, இரவு குட் நைட் வரைக்கும் செல்ஃபியா போட்டு தாக்குறாங்க.

உச்சிக்குப் போன மோகம்

உச்சிக்குப் போன மோகம்

விநாயகர் சதுர்த்தி வந்தா பிள்ளையாரோட செல்ஃபி, கிருஷ்ண ஜெயந்தி வந்தா கிருஷ்ணரோட செல்ஃபின்னு யாரையும் இவர்கள் விட்டுவைப்பதில்லை. அழகான பெண்களின் செல்ஃபிகள் சமூக வலைதளங்களில் லைக்குகளை அள்ளுவதால் அவர்கள் தங்களின் பக்கங்களை செல்ஃபிக்களால் நிறைத்துவிடுகின்றனர். இவர்களுக்கு ஈடுகொடுக்க ஆண்களும் செல்ஃபி போடுகிறார்கள். ஆனால் வெறும் செல்ஃபி போட்டால் ஒரு பயலும் லைக் போடப் போவதில்லை என்பதால் அவர்கள் வித்தியாச கான்செப்ட் பிடித்து செல்ஃபி போடுகிறார்கள். இன்றைய இளைஞர்கள் எதையும் படிப்பதை விட, பார்ப்பதையே அதிகம் விரும்புவதும் இதுபோன்ற செல்ஃபி மோகம் உச்சத்தில் இருப்பதற்கு முக்கிய காரணம்.

அடிங்க, நல்லா அடிங்க... ஆனா கையை கழுவிட்டு அடிங்கடான்னு விவேக் ஒரு படத்தில் சொல்வாரே, அதைப் போல செல்ஃபி எடுங்க, வளைச்சு வளைச்சு எடுங்க... ஆனால் உங்களுக்கும் அடுத்தவங்களுக்கும் எந்த பாதிப்பும் இல்லாத வகையில எடுங்க.

- கௌதம்

English summary
Everywhere people are obsessed with Selfie fashion and even VVIPS are interested in taking selfies.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X