சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஜூலை 21 நினைவுநாள்: நடிகர் திலகம் சிவாஜி கணேசன் எனும் செம்மாந்த ஆளுமையின் சத்திய முகம் இது!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ் சினிமாவ்ன் அடையாளமாக காலந்தோறும் போற்றப்படும் நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் நினைவுநாள் இன்று..

1997-ம் ஆண்டு தினமணி கதிர் இதழின் பொறுப்பாசிரியராக இருந்த போது நடிகர் திலகம் சிவாஜிகணேசனிடம் தாம் எடுத்த பேட்டி குறித்த மூத்த பத்திரிகையாளர் இளையபெருமாள் (சுகதேவ்) தமது ஃபேஸ்புக் பக்கத்தில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.

Senior Journalist Elayaperumal Sugadev sahres memories with Sivaji Ganesan

நடிகர் திலகம் சிவாஜி கனேசன் எனும் அந்த ஆளுமையின்... அவரது வார்த்தைகளில் சொல்வதானால் சத்திய வாழ்க்கையை படம் பிடித்துக் காட்டுகிறது இளையபெருமாளின் ஃபேஸ்புக் பதிவு. இளையபெருமாளின் ஃபேஸ்புக் பதிவு விவரம்:

நடிகர் திலகம், யவன ராணி மற்றும் பூனை

அந்த ஆண்டு (1997) தினமணி தீபாவளி மலருக்கு, பொறுப்பாசிரியர் என்ற முறையில், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் பேட்டியை வெளியிடத் திட்டமிட்டேன். அன்றைய ஆசிரியர் இராம.திரு.சம்பந்தம் அவர்களிடம் பேசி ஒப்புதல் பெற்றேன். பிறகு, வெள்ளித்திரைச் செய்தியாளராக அப்போது பணியாற்றிய நண்பர் தமிழ்மகனிடம் இது குறித்துப் பேசினேன். உடனே அவர் சிவாஜியின் மூத்த புதல்வர் ராம்குமார் தொடர்பு எண்ணைக் கொடுத்துப் பேசுமாறு சொன்னார். ராம்குமார் சாரிடம் பேசினேன். முதலில் தயக்கம் தெரிந்தது. "அப்பா, இப்பெல்லாம் பேட்டியே தருவதில்லையே.. ஏதாவது கேட்டுட்டு வேற ஏதாவது எழுதிடறாங்க..." என்றார். ஒரு இதழாளனாக எனது பேட்டியின் முக்கியவத்தும் பற்றி அவரிடம் எடுத்துரைத்தேன். புரிந்துகொண்டார். எனினும், "உங்கள் கேள்விகளைத் தரமுடியுமா...? அப்பாவிடம் காட்டி கிளியரன்ஸ் வாங்கிடறேன்" என்று கேட்டார். ஒப்புக்கொண்டேன். மறுநாள் கணினியில் அடித்த 36 கேள்விகள் (என் நினைவு சரியெனில்) அடங்கிய பிரதியுடன் ராயப்பேட்டையிலுள்ள ராம்குமார் சார் அலுவலகத்துக்குச் சென்று நேரில் கொடுத்தேன். வரவேற்று வாங்கியவர், "லஞ்ச்ல அப்பாவ பார்ப்பேன். பேசிட்டு சொல்றேன்" என்று கூறி அனுப்பிவைத்தார்.

மாலையில் தொலைபேசியில் அழைத்தார். "அப்பா படிச்சிட்டாரு... ஓ.கே. சொல்லிட்டாரு. காலைலே பத்து மணிக்கு வரச் சொல்லிருக்கார்" என்றார். நன்றியுடன், குறித்த நேரத்தில் இருப்பேன் என்று சொன்னேன்.

மறுநாள் காலை 9.45 மணிக்கே "அன்னை இல்லம்" வாசலில். என்னுடன் தமிழ்மகன், புகைப்படம் எடுக்க "கிளாமர் சத்யா." வாயிலில் விவரம் சொல்லப்பட்டிருந்தது. கேட்டவுடன், உள்ளே போகச் சொன்னார்கள். உள்வாசலில் இன்னொருவர் கைகாட்டி, இன்னும் உள்ளே போகச் சொன்னார். பின்னணியில் யானைத் தந்தங்கள் உள்ள அந்த ஹால் அநேகமாக பலருக்குத் தெரிந்திருக்கும். சிவாஜி இல்ல புகைப்படங்களில் அது பெரும்பாலும் இடம்பெறும். அங்கே அமரச் சொன்னார்கள். ஒரு மாபெரும் கலைஞனின் மரபார்ந்த, அதே நேரத்தில் எளிமையான வாழ்விடத்தை வியப்புடன் பார்த்துக்கொண்டிருந்தோம்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மாடியிலிருந்து கதராடையில் கம்பீரமாக இறங்கிவந்தார். வணக்கம் சொன்னோம். அவரும் வணக்கம் சொல்லி எங்களை அமரச் சொன்னார். அதற்கு முன், நின்றவாக்கிலேயே "உங்களை பத்து மணிக்கு வரச் சொல்லியிருந்தேன். ஐந்து நிமிடம் தாமதமாகிவிட்டது. ஸாரி." என்றார். அவரது உயரத்துக்கு இதைச் சொல்ல வேண்டியதில்லை. அரை மணி நேரம் தாதமாக அவர் வந்தாலும் நாங்கள் காத்திருந்து பேட்டி எடுத்திருப்போம். ஆனாலும், தனது திரையுலக வாழ்நாளில் நேரம் தவறாமையின் பெரும் அடையாளமாகத் திகழ்ந்த நடிகர் திலகம், எங்களிடம் ஐந்து நிமிடத் தாமதத்துக்கு அவ்வாறு சொல்கிறார். இன்னும் வியப்புடன் அந்தப் பெரும் கலைஞனைப் பார்த்தவாறே அமர்கிறோம். வரும்போதே பாதி படித்த நிலையில், கையில் ஒரு புத்தகத்துடன் வந்தார். சாண்டில்யனின் "யவன ராணி" - பத்தாவது முறையாகப் படிக்கிறாரம்.

அவருக்கு அடுத்த இருக்கையில் அமர்ந்திருந்தேன். "என்ன சாப்பிடுகிறீர்கள்...?" நடிகர் திலகம் கேட்டார். "இல்ல, வரும்போதுதான் சாப்பிட்டோம்..." என்று மெல்லச் சொல்லி முடிப்பதற்குள், "என்ன சாப்பிடுறீங்கனுதான் கேட்டேன்...?" கறாராக ஒலித்தது சிம்மக்குரல். "காபி...." என்று இழுத்தேன். உள்ளே பார்த்தவாறு "முருகா, பிள்ளகளுக்கெல்லாம் (நாங்கள்) காபி கொண்டா. எனக்கு மாத்திரை (சர்க்கரை) போட்டு டீ கொண்டா..." உத்தரவிட்டார் நடிகர் திலகம். (முருகன் அவர் உதவியாளர் என்று புரிந்துகொண்டோம்). எல்லாம் வந்தது. காபியை சற்று குடித்த நிலையில், மெல்ல பேட்டி பற்றி ஆரம்பித்தேன். "முதல்ல காபி குடிங்க... குடிச்சுட்டு பேசலாம். அவசரமில்ல" - என்றார். காபி குடித்துவிட்டு, அந்த பீங்கான் குவளையை என் காலுக்குக் கீழ் சற்றே தள்ளி வைத்தேன். "அதை எடுங்க" என்று என்னிடமிருந்து அந்தக் குவளையை அவரே கேட்டு வாங்கி, அவரது இருக்கைக்கு பக்கத்திலிருந்த சிறிய தேநீர் மேசை மீது வைத்துவிட்டு "முருகா, இதெல்லாம் எடுத்துட்டுப் போ.." என்று மறுபடியும் உத்தரவிட்டார்.

Senior Journalist Elayaperumal Sugadev sahres memories with Sivaji Ganesan

மீண்டும் என்னைப் பார்த்து "பேட்டி சுவராஸ்யத்துல நீங்க பார்க்காம தட்டிட்டீங்கன்னா உங்களுக்கு கஷ்டம். தரைய க்ளீன் பண்ணனும்...." என்று லேசான சிரிப்புடன் சொன்னார். நான் வேகமாக தலையை அசைத்து ஆமோதித்தேன்.

சற்றே பக்கவாட்டில் எங்கள் பக்கம் திரும்பி அமர்ந்தவாறு "இந்த வயதில் உண்மையைத்தான் பேச வேண்டும். நான் சொல்வதில் உண்மையைத் தவிர வேறு எதுவும் இல்லை. "Nothing But Truth" என்ற பிரகடனத்தோடு பேட்டியைத் தொடங்குகிறார், நடிகர் திலகம். இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த அந்தப் பேட்டியில், அதுவரை வெளிவராத பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

ஒரு இதழாளனாக, முழு நிறைவோடு அலுவலகம் திரும்பினேன். நடிகர் திலகத்தின் அனுமதியோடு ஒலிப்பதிவு செய்திருந்தேன். மிகுந்த கவனத்துடன் கேட்டு, ஒரே நாளில் நீண்ட பேட்டியை தட்டச்சு செய்துவிட்டேன். மறுநாள் அதை மெருகேற்றிக் கொண்டிருந்தேன்.

"ஏம்ப்பா, அந்த பேட்டிய முடிச்சுட்டியா..." என்று ஆசிரியர் கேட்டார். "முடிந்த மாதிரிதான் சார். நிறைய விஷயங்கள் பேசியிருக்கார். அதான் கவனமாக அடித்துக் கொண்டிருக்கிறேன்..." என்றேன். அன்றே முடித்து, இரவு ஆசிரியரிடம் காண்பித்தேன். படித்துவிட்டு "இவ்வளவு பேசியிருக்காரா... உனக்கு முன்னாலேயே பழக்கமா?" என்று கேட்டார். "இல்லை, முதல் சந்திப்பு" என்றேன். "நல்லாருக்குப்பா..." என்று சொல்லி பிரதியைக் கையில் கொடுத்தார். பக்க வடிவமைப்புக்கு அனுப்பினேன்.

அரசியல் பற்றிய ஒரு கேள்விக்கு நடிகர் திலகம் அளித்திருந்த பதிலின் அடிப்படையில், இந்தப் பேட்டிக்கு ஒரே தலைப்புதான் யோசித்தேன். அதையே வைத்தேன். அந்தத் தலைப்பு:

"நான் சூடுபட்ட பூனை"

-----------------

அளிக்கப்பட்ட கேள்விகளின் பட்டியலைக் கையில் வைத்துக்கொண்டு, ஒவ்வொன்றாக கேட்கிறேன். எந்தவிதமான முன்தயாரிப்போ, யோசனையோ இன்றி தெள்ளத்தெளிவாகப் பதிலளிக்கிறார். பல்லாண்டுகளாக நமது வாழ்வியலோடு இணைந்து கலந்த அந்தக் குரலின் ஏற்ற இறக்கங்களையும் பாவனைகைளையும் உள்வாங்கியவாறு குறிப்பும் எடுத்துக்கொண்டிருக்கிறேன். இடையில் ஒரு கேள்விக்குப் பதிலளித்துவிட்டு, நீங்கள் கேட்கப்போகும் அடுத்த கேள்விக்கும் இதுதான் பதில் என்கிறார். அசந்துபோய், "நான் கேட்கவே இல்லையே...." என்றேன். "நான் பக்கம் பக்கமாக வசனங்களைப் பேசி நடித்தவன் என்பதை மறந்துவிட்டீர்களா?" என்று கேட்டுவிட்டு, ஒரு வாட்டி படித்தால் போதும், "இங்கே போய் விடும்..." என நெற்றியின் பக்கவாட்டில் விரல்தட்டி சொல்கிறார். எனது ஆச்சரியம் என்னவெனில், நான் 13-வது கேள்வியைக் கேட்கும்போது, அவர் 14-ம் கேள்விக்கும் இதுதான் பதில் என்கிறார். அவர் கையில் எனது கேள்விப் பட்டியல் இல்லை. எந்தக் குறிப்பும் இல்லை. எனது கேள்விப் பட்டியலை அநேகமாக முந்தைய நாள் படித்திருக்கக்கூடும். படப்பிடிப்புத் தளத்தில் மட்டுமின்றி அது கடந்தும் எதையும் செவ்வனே செய்வது அந்த மாபெரும் கலைஞனின் இயல்பாக இருந்திருக்கிறது.

நாங்கள் பேசிக்கொண்டிருக்கும்போது, இடையில் நடிகர் திலகத்தின் பேத்தி - சிறுமி, எங்களைக் கடந்து செல்கிறாள். கையில் ஒரு தட்டு. அதில் சிப்ஸ். இதைக் கவனித்தவர், எங்கே போகிறாய் என்று கேட்கிறார். அவள் சிப்ஸை மென்றுகொண்டே பதில் சொல்கிறாள். "அங்கிளுக்கு வேணுமான்னு கேட்டியா?" குரல் கனத்து ஒலிக்கிறது. உடன் அந்தச் சிறுமி "அங்கிள்..." என்று மெல்லிய குரலில் இழுக்கிறாள். வேண்டாம் என்று மறுக்கிறேன். மறுபடியும் நடிகர் திலகத்தைப் பார்க்கிறாள். சிப்ஸ் தட்டை சற்றே சாய்வாகப் பிடித்திருந்தாள். "தட்ட நேரா பிடி. கொட்டிடாதே...போ" என்று சொல்லிவிட்டு, "நீங்க கேளுங்க..." என்கிறார். பேட்டி தொடர்கிறது.

சற்று நேரம் கழித்து, நடிகர் திலகத்தின் பேரன் - சின்னஞ்சிறு பாலகன், எங்களைக் கடந்து செல்கிறான். பேச்சினிடையே, அவன் பெயர் சொல்லி நிறுத்தியவர், "இன்னிக்கு சாமி கும்பிட்டீயா...?" என்று கேட்கிறார். அவன் "ம்" என்கிறான். அடுத்து "தாத்தாவுக்கு வணக்கம் சொன்னியா?" என்று கேட்கிறார். அவன் குனிந்து வணக்கம் சொல்கிறான். "போ" என்கிறார். எங்கள் பக்கம் திரும்பி "பசங்களுக்கு டிசிப்ளின் முக்கியம். சின்ன வயசிலிருந்தே பழக்கணும்" என்று சொல்கிறார். அவன் உள்ளே போய்விட்டான். பேட்டி தொடர்கிறது.

இடையில் நான் கேட்ட ஒரு கேள்வி:

உங்கள் திரையுலக வாழ்க்கையின் ஆரம்பத்தில், நடிப்பில் உங்களுக்கு முன்மாதிரியாக யாரையாவது கருதியதுண்டா?

"ஓ... யாரையாவது பார்த்து காப்பியடித்திருக்கிறீர்களா என்று கேட்கிறீர்கள்" என்கிறார். நான் இடைமறித்து, "இல்லை, உங்கள் "ரோல் மாடல்" ஆக என்று கேட்கிறேன்.

நடிகர் திலகம் தொடர்கிறார்: "நீங்கள் கேட்டதற்கு அர்த்தம் அதுதான் சார். எனது குரு என்னை அவ்வாறு பழக்கவில்லை. மற்றவர்களைப் பார்த்துக் கற்றுக்கொள்ளும் நிலையில் நான் இல்லை. மேலும் நான் நடிக்க வந்த சமயத்தில் அதுமாதிரி ஆட்களும் யாரும் இல்லை. சில ஆங்கிலப் படங்களின் influence இருந்திருக்கலாம். காஞ்சி முனிவரைப் பார்த்து அப்பராக நடித்தேன். டி.வி.எஸ். கிச்சாவைப் பார்த்து கௌரவம் படத்தில் நடித்தேன். இதுமாதிரி ஒவ்வொருவரின் தாக்கம் இருக்கலாம். மற்றபடி நான் யாரையும் பார்த்து நடித்ததில்லை."

Senior Journalist Elayaperumal Sugadev sahres memories with Sivaji Ganesan

இன்னொரு கேள்வி. "உங்களுக்கு ஜோடியாக நடித்த நடிகைகளில் உங்களுக்கு இணையாக நடிப்புத் திறனை வெளிப்படுத்தியவர் யார்?"

உற்சாகத்துடன் மனம் திறக்கிறார் நடிகர் திலகம்.

"நிச்சயமாக பப்பிதான் (பத்மினி). பப்பி சிறந்த நாட்டியக்காரி மட்டுல்ல. சிறந்த அழகியும்கூட. குணச்சித்திரம், காமெடி, நடனம்...what not? எல்லாப் பாத்திரங்களிலும் ஜொலித்த நடிகை. She is an all-rounder. சின்ன வயதிலிருந்தே நானும் பத்மினியும் பழகி வருகிறோம். We are all intellectual friends. எங்களிடையே தெய்வீக நட்பு உண்டு. உலகிலேயே அதிகப் படங்களில் நடித்த ஒரே ஜோடி என்றால், அது நானும் பத்மினியுமாகத்தான் இருக்க வேண்டும்."

இதுவரை நீங்கள் நடித்த பாத்திரங்களில் உங்களுக்கே சவாலாக இருந்த பாத்திரம் எது என்று கேட்கிறேன்.

'கப்பலோட்டிய தமிழன்' தான் (1961-ல் வெளியான படம்) எனக்கு சவாலாக இருந்த பாத்திரம். அந்தப் படத்தைப் பார்த்துவிட்டு வ.உ.சி.யின் புதல்வர் என்னைக் கட்டிப்பிடித்துக் கொண்டு "ஐயாவை நேரில் பார்த்தேன்" என்று சொன்னார். நீங்கள் கேட்டீர்களே... அங்கீகாரம் எது என்று? இதைவிட ஒரு நடிகனுக்கு பெரிய அங்கீகாரம் எதுவாக இருக்க முடியும்.

இதைச் சார்ந்தே அடுத்த கேள்வியையும் தொடர்கிறேன்.

வ.உ.சி., பாரதி, கட்டபொம்மன் போன்ற வரலாற்று நாயகர்களை திரையில் அற்புதமாகச் சித்தரித்தவர் நீங்கள். அவர்களைப் பற்றிய புத்தகங்களைப் படித்ததுண்டா? அத்தகைய வேடங்களில் தத்ரூபமாக நடிக்கும் அளவுக்கு உங்களை எப்படித் தயார் செய்து கொண்டீர்கள்?

நடிகர் திலகம் இந்தக் கேள்விக்கு அளித்த பதில், இன்றைய எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள், திரையுலகப் படைப்பாளிகள் எனப் பலரின் தனிக் கவனத்துக்குரியதாகக் கருதுகிறேன்.

நடிகர் திலகத்தின் பதில்:

"எந்த வேடங்களுக்கும் பெரிதாக புத்தகங்கள் எதையும் படித்ததில்லை. வ.உ.சி.யைப் பற்றி சின்னச்சின்ன புத்தகங்கள் படித்தேன். மற்றபடி அந்தக் காலத்தில் அவரைப் பற்றிய Literature இல்லையே...! வேறு விரிவான புத்தகம் உண்டா? வ.உ.சி.யைப் படத்தில் பார்த்திருக்கிறேன். அவ்வளவுதான். மற்றபடி சுயமாகக் கற்பனை செய்துகொண்டுதான் அந்தப் பாத்திரத்தில் நடித்தேன். இதை ஒரு தமிழனுடைய வார்த்தையாக எடுத்துக்கொள்ளலாம். தமிழன் பொய் சொல்லமாட்டான். நான் சொல்வது சத்தியம். Nothing but Truth. கோர்ட்டில் சொல்வது போல உங்களிடம் சொல்கிறேன்."

கலை அறம் நிறைந்த ஓர் உன்னதக் கலைஞன்தான் இவ்வாறாக வெளிப்பட முடியும்.

பேட்டி முடிந்தது. காலியாய் வந்த பெட்டியில் கொள்ளாமல் தளும்பும் வரை நடிகர் திலகம் நிறைத்து அனுப்பியது போன்ற உணர்வு. புறப்படத் தயாராகி, எழுந்து நின்றோம். அவரும் எழுந்தார். எதுவும் சொல்லாமல் இன்னொரு பக்கம் நடந்து சென்றார். புரியாமல் விழித்திருந்தோம். நாங்கள் அமர்ந்திருந்த இடத்தில் சுழன்ற மின்விசிறியின் ஸ்விட்சை நிறுத்திவிட்டு வந்தார். "உங்க வேலை முடிஞ்சுது... நானும் மாடிக்கு போய்டுவேன். தேவையில்லாம ஓடிக்கிட்டிருக்கும்ல..." என்றார். பெரும்பாலும், நடிகர்கள் மனிதர்களாய் வேறாயிருப்பார்கள், அல்லது வேறாய் காட்டிக்கொள்வார்கள். நடிகர் திலகம்-- கலைஞன். மகா கலைஞன். இரண்டும் ஒன்றுமாய் இருந்தார்.

இன்றும் பார்க்கிறோம். நிறைய மின்விசிறிகள் தேவையற்றுச் சுழன்று கொண்டிருக்கின்றன.
-----------------
நடிகர் திலகத்துக்கு சிறப்பாக நடிக்க மட்டுமே தெரியும், அது கடந்து கோடிட்டுக் காட்ட ஏதும் இல்லை என்பதாக, கடந்தகாலம் ஒரு பொதுவான சித்திரத்தை விட்டுச் சென்றிருக்கிறது. அதுவல்ல அவர். இதோ, இந்தக் கேள்விக்கான பதில் அதைப் புலப்படுத்தும்:

பெரியார் வேடத்தில் நடிப்பதுதான் லட்சியம் என்று கூறியிருக்கிறீர்கள்... அது பெரியாரின் கொள்கை மீது உள்ள ஈடுபாட்டிலா அல்லது தனிப்பட்ட முறையில் பெரியார் மீது நீங்கள் கொண்டுள்ள மரியாதைதான் காரணமா?

"பெரியார் கொள்கை மீதுள்ள ஈடுபாடுதான் காரணம். சின்ன வயதிலிருந்தே ஐயாவின் கொள்கையில் எனக்குப் பிடிப்பு உண்டு. 1954-க்குப் பிறகுதான் எனக்கு கோயில் தெரியும். அதற்கு முன்பெல்லாம் நான் கோயிலுக்குச் சென்றதில்லை. நான், கலைஞர், கரந்தை சண்முகவடிவேல் போன்றவர்கள் கோயில் பக்கம் செல்வோம். காற்றாட பேசிவிட்டுத் திரும்புவோம். பக்தியெல்லாம் கிடையாது. என்னை தி.மு.க.விலிருந்து வெளியேற்றினார்கள். அந்தச் சமயத்தில் மிகவும் மனம் உடைந்திருந்தேன். அப்போது இயக்குநர் பீம்சிங்தான் என்னை முதல் முறையாக கோயிலுக்கு அழைத்துச் சென்றார். "நாஸ்திக கணேசன் ஆஸ்திகரானார். திருப்பதி கணேசா, கோவிந்தா!" என்றெல்லாம் என்னை விமர்சனம் செய்தார்கள். ஆனால் என்னை அவ்வாறு கேலி பேசியவர்களின் வீட்டுப் பெண்கள் திருப்பதி சென்று அங்கப்பிரதட்சணம் செய்தார்கள். அது வேறு விஷயம். தி.மு.க.விலிருந்து என்னைத் தூக்கணும்னு முடிவு பண்ணிட்டாங்க. தூக்கிட்டாங்க. அவ்வளவுதான்.

"கோயிலுக்கு போகாததுதானா பெரியார் கொள்கை? கலைஞர் எழுதிய வசனத்தையே சொல்கிறேன்... கோயில் கூடாது என்பதல்ல. கோயில் கொடியவர்களின் கூடாராமாகிவிடக் கூடாது. பக்தி, பகல் வேஷமாகிவிடக் கூடாது என்பதுதான் எனது எண்ணம்.

"எனக்கு இரண்டு, மூன்று தலைவர்கள் மேல் அபிமானம் உண்டு, பெயரைச் சொன்னால் பிரச்சினை வரும். ஐயா (பெரியார்) மீது நான் மிகுந்த மதிப்பு வைத்திருக்கிறேன். தமிழ் மக்களுக்கு மறதி அதிகம். காந்தி, காமராஜர் போன்ற தலைவர்களையே ஞாபகப்படுத்த வேண்டியிருக்கிறதே... அதுபோல ஐயாவையும் ஞாபகப்படுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது. ஐயா, ஒரு தங்கவிளக்குதான். எவ்வளவுதான் ஒளி தந்தாலும் அந்த வெளிச்சத்தைப் பார்ப்பதற்கு மக்களைத் தூண்ட வேண்டுமல்லவா? அதனால்தான் ஐயா வேடத்தில் நடிக்க விரும்புகிறேன். இப்போது தொழில்நுட்ப ரீதியாக திரைப்பட உலகம் பெரிய அளவில் முன்னேறியிருக்கிறது. ஐயா மாதிரி மேக் அப் போட்டு தத்ரூபமாக நடிக்கக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. காமராஜர் வேடத்தில்கூட நடிக்க ஆசைதான். அவர் வாட்டசாட்டமாக இருப்பார். பெரிய உருவம். அவருக்குள்ள ஆகிருதி எனக்கு இல்லை. எனக்கு அதுபோன்ற உடல்வாகு கிடையாது. ஆனால், ஐயா வேடம் எனக்குப் பொருந்துமென்று நினைக்கிறேன். எனது ஆயுளுக்குள் அதைச் செய்ய வேண்டுமென்று நினைக்கிறேன். அதற்குப் பிறகு இயற்கைவிட்ட வழி.

ஐயா கொடுத்த பட்டத்தை வைத்துதானே இன்றைக்கும் காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கிறேன்..!"

சமகாலத்தில் தமிழக மக்களிடையே வெவ்வேறு விதமாகத் தாக்கத்தை ஏற்படுத்திய இருபெரும் ஆளுமைகள் நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரும். பின்னாளில், எம்.ஜி.ஆர். அரசியலில் மிகப் பெரும் சக்தியாக உருவெடுத்தார். மிகத் தாமதமாக நேரடி முயற்சியில் இறங்கி, பின்வாங்கியவர் நடிகர் திலகம். ஆனால், எம்.ஜி.ஆர் பற்றியும் அரசியல் பற்றியும் அவர் தெளிவாகவே புரிந்து வைத்திருக்கிறார். பின்வரும் கேள்விக்கான பதில் அதை உணர்த்தும்:

நீங்கள் அரசியலில் செல்வாக்கு பெற்றிருந்த (காங்கிரஸ் கட்சியில் இருந்தபோது) காலத்திலாவது, எம்.ஜி.ஆர். போல நாமும் "நல்ல" பாத்திரங்களிலேயே நடிக்க வேண்டும் என்று நினைக்கவில்லையா என்று கேட்டேன்.

நடிகர் திலகம் பல்முனைப் பொருள் பொதிந்த பதிலைத் தருகிறார்:

"இல்லை. நடிப்புக்கும் அரசியலுக்கும் சம்பந்தம் இல்லையென்று நான் நினைத்தேன். ஆனால், சம்பந்தம் உண்டு என மக்கள் நிரூபித்துவிட்டார்கள். அதனால்தான் எம்.ஜி.ஆர். அரசியலில் வெற்றி பெற்றார். He did it. I missed the bus. எனக்கு அரசியல் இரண்டாம்பட்சம்தான். நான் குடிகாரனாக, பெண் பித்தனாக, கொலைகாரனாக, ரவுடியாக பல பாத்திரங்களில் நடித்தேன். அதனால்தான் 300 படங்களில் நடிக்க முடிந்தது.

இந்த இடத்தில் நான் ஒரு உண்மையைச் சொல்லித்தான் ஆக வேண்டும். மக்கள் என்னை அரசியல்வாதியாகப் பார்க்க விரும்பவில்லை என்பதைப் பின்னாளில்தான் புரிந்துகொண்டேன். அவர்கள் என்னை நடிகனாக மட்டும்தான் பார்க்க விரும்பியிருக்கிறார்கள். எத்தனையோ நடிகர்கள் அரசியலுக்கு வந்திருக்கிறார்கள்...அத்தனை பேருமா தலைவராக முடிந்தது? சிலபேர் நடிப்பிலே வெற்றி அடையவில்லையென்றால், அரசியல்வாதியாக மாறிவிடுவார்கள்...."

இவ்வாறு முடித்துவிட்டு உரக்கச் சிரிக்கிறார், நடிகர் திலகம்.

தொடர்ந்து நான் கேட்ட கேள்வி:

இது கடந்த கால அரசியல் பற்றிய உங்கள் விமர்சனம் போல் இருக்கிறதே...?

"கடந்தகால வரலாற்றை ஏன் சொல்றீங்க... நிகழ்கால, எதிர்கால வரலாற்றைப் பாருங்கள். அதுவும் இப்படித்தான் நடக்கிறது. நடக்கப் போகிறது...!"

இந்த பதிலுக்குப் பிறகு அவரை எவ்வாறு புரிந்துகொள்வதென்பது உங்கள் பொறுப்பு.

பி.பி.சி., சி.என்.என். போன்ற உலகத் தொலைக்காட்சிகளைப் பார்க்கும் வழக்கமுடையவராக இருந்திருக்கிறார், நடிகர் திலகம். உலகப் பொருளாதார மாற்றங்கள், இந்தியப் பொருளாதரச் சிக்கல்கள், ரூபாய் மதிப்பு சரிவு, புதிய அரசியல் கலாசாரம் உள்ளிட்ட இன்றைய சமகால வாழ்வின் அனைத்து முக்கியப் புள்ளிகளையும் அதுசார்ந்த அசைவுகளையும் உன்னிப்பாகக் கவனித்து வந்திருக்கிறார். அவருக்கெனத் தனிப் பார்வையும் இருந்திருக்கிறது. அது தெளிவாகவும் இருந்திருக்கிறது என்பதை பல கேள்விகளுக்கு அவர் அளித்த பதிலிலும் உரையாடலின் ஆழத்திலும் புரிந்துகொண்டேன்.

நாள்தோறும் தெளிவை விதந்தோதும் சமூகம் இது. ஆனால், யாரேனும் தெளிந்திருந்தால், நெல்லிக்காயை பவானி ஜமுக்காளம் போட்டு மூடுவது போல மூடிவிடும் இதே சமூகத்தின் பொதுமனம்.

Recommended Video

    Amitabh Bachchan Abhishek bachchan ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு

    நடிகர் திலகம் உள்பட பல்வேறு ஆளுமைகளுக்கு நேர்ந்ததும் அதுதான்.

    English summary
    Senior Journalist Elayaperumal Sugadev sahred his memories with Actor Sivaji Ganesan.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X