"எம்ஜிஆர் உயில்" மட்டுமே ஒரே சான்ஸ்! பொது குழுவால் முடியாது.. ஒற்றை தலைமை பற்றி கு.பா.கிருஷ்ணன் பரபர
சென்னை: எம்ஜிஆர் காலத்தில் இருந்தே அதிமுகவில் இருந்து வரும் முன்னாள் அமைச்சர் கு.பா.கிருஷ்ணன் பொதுச்செயலாளர் தேர்வு குறித்து சில முக்கிய தகவல்களைத் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் இப்போது ஒற்றை தலைமை விவகாரம் சூடுபிடித்து உள்ளது. இந்த விவகாரம் தொடங்கியது முதலே எடப்பாடி பழனிசாமி மற்றும் ஒ பன்னீர்செல்வம் நேரில் சந்தித்துக் கொள்ளவில்லை.
நாளை ரொம்ப முக்கியம்.. என்ன பண்ணலாம்? விசாரித்த எடப்பாடி.. 3
இருவரில் எடப்பாடி பழனிசாமிக்கே அதிக நிர்வாகிகளின் ஆதரவு இருப்பதாகக் கூறப்படும் நிலையில், பொதுக்குழுக் கூட்டம் வரும் ஜூலை 11இல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கு.பா.கிருஷ்ணன்
இது தொடர்பாக ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் தனித்தனியாக அறிக்கைகளை வெளியிட்டும் வழக்குகளைத் தொடர்ந்தும் பரபரப்பு ஏற்படுத்தி வருகின்றனர். திமுகவிலிருந்து எம்ஜிஆர் வெளியே வந்து, எம்ஜிஆர் உடனும் அதைத் தொடர்ந்து ஜெயலலிதாவின் அமைச்சரவையில் அமைச்சராக பணியாற்றிய மூத்த அரசியல்வாதி கு.பா.கிருஷ்ணன் ஒற்றை தலைமை விவகாரம் குறித்து சில முக்கிய தகவல்களைத் தெரிவித்துள்ளார்.

எம்ஜிஆர்
திருச்சியில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "அதிமுகவில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளும் என்னைப் பெரிதும் வாட்டுகிறது. இந்த இயக்கத்தை வளர்த்தவர்களுக்குத் தான் அதன் துன்பம் தெரியும். முதன் முதலாகத் திண்டுக்கல் இடைத்தேர்தலில் போட்டியிடும் போது, நான் எம்ஜிஆர் உடன் பணியாற்றியுள்ளேன். அவர் சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் அவரோடு பயணித்துள்ளேன்.

மகிழ்ச்சி அடைந்தேன்
என்னோடு இருந்த தோழர்கள் 90 விழுக்காடு மறைந்து விட்டனர். எஞ்சிய கிழவன் நான் மட்டுமே இருக்கிறேன். நான் வாழும் வரை இந்த இயக்கத்தைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு என்னிடத்தில் உள்ளது. ஜெயலலிதா இந்த இயக்கத்தை நடத்த முற்பட்ட பொழுது திருச்சி மாவட்டத்திலிருந்து ஆதரவு தெரிவித்த ஒரே ஒரு பொதுக்குழு உறுப்பினர் நான் மட்டும்தான். அவர் இறந்ததற்குப் பின்னால் இரட்டை தலைமை வந்தது நான் மகிழ்ச்சி அடைந்தேன்.

என்ன நியாயம்
என்றாவது ஒரு தொண்டன் தலைமையேற்று நடத்துவான் என்று சொன்னால் அன்றுதான் ராமச்சந்திரன் ஆத்மா சாந்தி அடையும் என்று சொன்னார். அதை நினைவு கூர்ந்து இரண்டு தொண்டனும் இரட்டைத் தலைமையில் இருப்பதை ஏற்று நான் சந்தோசப்பட்டேன். இரட்டை தலைமை முடிவு செய்து நீங்களே. இரட்டைத் தலைமை ஏற்படுத்திப் பின்பு தற்போது ஒற்றை தலைமை வேண்டும் என்று ஒருவனை வெளியே போடா என்று சொல்வது நியாயமா.

ஒற்றை தலைமை
ஏன் உங்களுக்குள் இந்த கசப்புணர்ச்சி. இன்றைக்கு இந்த பிரிவினைக்கு என்ன காரணம். சசிகலாவை பொதுச் செயலாளர் ஆக்கியது யார்? ஜெயலலிதாவின் சமாதியில் தீர்மானம் போட்டது யார்? இந்த பொதுச் செயலாளர் பதவி காலியாகவே இருக்கும். அதனால்தான் நாங்கள் இரட்டைத்தலமை என்று வைத்துக் கொண்டோம் என்ன சொன்னீர்கள் தற்பொழுது ஒற்றைத் தலைமை வேண்டும் எனக் கூறுகிறீர்கள்.

எம்ஜிர் உயில்
ஒற்றை தலைமை என்பதை வரவேற்கிறேன். ஆனால் ஒற்றைத் தலைமை என்பது பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப் படக்கூடாது. எம்ஜிஆர் தனது உயிலில் இந்த கட்சி என்றாவது ஒரு நாள் பிளவுபடும் எனச் சொன்னால் 80 சதவீதம் ஆதரவுக்கு யாருக்கு இருக்கிறதோ அவர் பொதுச் செயலாளராகக் கட்சி அவரிடத்தில் இருக்கலாம் எனச் சொன்னார். அதன்படியே பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்பட வேண்டும்.

தேர்தல்
எம்ஜிஆர் உயிலின் படி தான் ஜெயலலிதா பொதுச்செயலாளராகப் போட்டியிட வந்தார். அவருக்கு எதிராக யாரும் போட்டியிடவில்லை எனவே அவர் பொதுச் செயலாளராக இருந்தார். கட்சியில் ஒன்றரை கோடி தொண்ட இருக்கிறார் எத்தனை தொண்டன் வேண்டுமானாலும் நிற்கட்டும் முறைப்படி தேர்தல் நடத்த வேண்டும். எல்லா உறுப்பினர்களுக்கும் அடையாள அட்டை வழங்க வேண்டும், ஓட்டுப் போடும் உறுப்பினர்களின் லிஸ்ட்-ஐ வெளியிடட்டும்.

பொதுக்குழுவால் முடியாது
நீதிமன்றம் தேர்தல் நடத்தட்டும். ஓபிஎஸ், இபிஎஸ் எம்ஜிஆரின் உயில்படி தேர்தலைச் சந்திக்கட்டும். பொதுக்குழு மூலமாக பொதுச் செயலாளர் தேர்ந்தெடுக்க முடியாது. பொதுக் குழுவில் விதியை மாற்ற முடியாது. கட்சியின் பைலாவை திருத்தலாம், ஆனால் உயிலைத் திருத்த முடியாது. அதை நடைமுறைப்படுத்துவதற்கு நீதி அரசர் பரந்தாமன் உள்ளார்" என்று அவர் தெரிவித்தார்.