சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

Exclusive: இலங்கை பாஜக விரைவில் தொடங்கப்படும்... சிவசேனை தலைவர் சச்சிதானந்தன் தடாலடி

Google Oneindia Tamil News

சென்னை: இலங்கை பாரதிய ஜனதா கட்சி என்ற கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் அல்லாதவர்களுக்கான தனி கட்சி ஒன்று விரைவில் தொடங்கப்படும் என்று இலங்கை சிவசேனை இயக்கத்தின் தலைவர் மறவன்புலவு (காந்தளகம்) சச்சிதானந்தன் தெரிவித்துள்ளார்.

ஈழத் தமிழரான மறவன்புலவு சச்சிதானந்தன் சென்னையில் பல ஆண்டுகள் வசித்தவர். சென்னை அண்ணாசாலையில் காந்தளகம் என்ற பதிப்பகத்துக்கு சொந்தகாரர். தமிழ்நாட்டு அனைத்து அரசியல் தலைவர்களுடன் நெருங்கிய நட்பு கொண்டிருந்தார்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கை திரும்பிய சச்சிதானந்தன் சிவசேனை என்ற பெயரில் சைவர்களுக்கான தனி அமைப்பை உருவாக்கி பல்வேறு போராட்டங்களை நடத்தினார். இலங்கை என்பது தமிழருக்கும் சிங்களவருக்கும் மட்டுமே உரியது; கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் இலங்கையை விட்டு வெளியேற வேண்டும் என சச்சிதானந்தன் பேசிய பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இலங்கை, நேபாளத்திலும் பாஜக ஆட்சி அமைப்போம் என உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியதாக திரிபுரா முதல்வர் பிப்லப் தேவ் பேசியது சர்வதேச பிரச்சனையாகிவிட்டது. இந்த நிலையில் உண்மையில் இலங்கையில் "இலங்கை பாரதிய ஜனதா கட்சி"யை தொடங்கப் போவதாகவே அறிவித்துள்ளார் சிவசேனை தலைவர் சச்சிதானந்தன்.

இலங்கை பாஜக

இலங்கை பாஜக

கேள்வி: இலங்கை பாரதிய ஜனதா கட்சியை தொடங்கப் போவதாக கூறியிருக்கிறீர்களே?

பதில்: இலங்கையில் சைவ சமயத்தின் மீள் எழுச்சியை கொண்டுவருவதற்கு அரசியல் சக்தி வேண்டி இருக்கிறது. கிறித்தவர்களுக்கு இஸ்லாமியர்களுக்கு அரசியல் சக்திகள் இருக்கின்றன. சைவர்களுக்கு அரசியல் சக்திகள் இல்லை.

சைவர்கள் தங்களை தமிழர்களாக அடையாளம் கண்டனர். கிறிஸ்தவர்கள் தமிழர்கள் என்கிற அடையாளத்தை இழந்துவிட்டனர். சைவர்களின் மென்மையையும் இனிமையான பண்பாட்டையும் அடக்கத்தையும் சாதகமாகக் கொண்டு கிறிஸ்தவர்கள் எல்லா நிலைகளிலும் அரசியல் பிரதிநிதிகளாக இருக்கின்றனர்.

முஸ்லிம்கள் தனிவழியே போய்விட்டார்கள். அவர்கள் தமிழர்கள் இல்லை என்றே சொல்கிறார்கள். சைவர்களை மதமாற்றுவதும் அடக்குமுறையுமாக தாங்க முடியாத சூழ்நிலை இருக்கும் போது சைவர்கள் தங்களுக்கு அரசியல் வாக்கு வங்கியையும் அரசியல் பேச்சாளர்களையும் உருவாக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. எனவே சைவர்களாகிய நாங்கள் அண்மையில் அதே பெயரில் (பாரதிய ஜனதா கட்சி) கட்சியை தொடங்கலாம் என ஆலோசித்து கொண்டிருக்கிறோம்.

இலங்கையில் திமுக, அதிமுக, காங்கிரஸ்

இலங்கையில் திமுக, அதிமுக, காங்கிரஸ்

கேள்வி: இலங்கையில் இதற்கு முன்னுதாரணங்கள் இருக்கின்றனவா?

பதில்: இலங்கையில் அனைத்து கட்சிகளுமே இந்திய கட்சிகளின் சாயலில்தான் இருக்கின்றன. இந்திய தேசிய காங்கிரஸ் சாயலில் இலங்கை தேசிய காங்கிரஸ், இலங்கை தமிழ் காங்கிரஸ், யாழ்ப்பாணம் மாணவர் காங்கிரஸ் என 6,7 கட்சிகள் இருந்தன. தமிழ்நாட்டில் ம.பொ.சி.யின் தமிழரசு கழகத்தின் சாயலில் தொடங்கப்பட்டதுதான் இலங்கை தமிழரசு கட்சி.

அதிமுக தொடங்கப்பட்ட அதே காலத்தில் மதிமுகராஜா என்பவர் இலங்கையில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை தொடங்கினார். திமுக தொடங்கப்பட்ட அதே காலகட்டத்தில் கொழும்பில் மணவை தம்பி, இலங்கை திமுகவை தொடங்கினார்.

சிவசேனை என்ற அமைப்பை நாங்கள் வைத்திருக்கிறோம். இது இந்திய சிவசேனையின் கிளை அல்ல. ஆனாலும் அந்த பெயர்களை நாங்கள் பயன்படுத்த தயங்குவதில்லை. இதில் சிங்களவர்களும் தயங்குவது இல்லை தமிழர்களும் தயங்குவதில்லை.

முஸ்லிம்கள் அதே இந்திய பெயரில்தான் இயங்குகின்றனர். தவ்ஹீத் ஜமாஅத் அமைப்புதான் இங்கேயும் இருக்கிறது. உலகளாவிய இஸ்லாமியர் அமைப்புகள் இங்கே இருக்கின்றன. பொதுவுடைமை கட்சிகளின் உலகளாவிய பெயர்களுடன் இங்கேயும் இருக்கின்றன.

அன்னிய நாட்டில் ஒரு பெயர் இருக்கிறது என்பதற்காக இந்த நாட்டில் அந்த பெயரை வைக்கக் கூடாது என்பது கிடையாது.

பாஜகவும் தமிழர்களும்

பாஜகவும் தமிழர்களும்

கேள்வி: இந்திய பாஜக தலைவர்களை அழைத்து கட்சியை தொடங்குவீர்களா?

பதில்: அப்படியான நோக்கம் எங்களுக்கு இல்லை

கேள்வி: பொதுவாக பாஜக என்பது தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு எதிரான கட்சி என்கிற போக்கு இருக்கிறது. ஆனால் இலங்கையில் தமிழர்கள் பாஜகவை தொடங்குகிறார்கள் என்பதை எப்படி பார்க்கிறீர்கள்?

பதில்: தமிழகச் சூழ்நிலை வேறு. இலங்கை சூழ்நிலை வேறு. தமிழகத்தில் நாத்திகம் ஒரு தவிர்க்க முடியாத சக்தி. பார்ப்பன எதிர்ப்பு ஒரு தவிர்க்க முடியாத சக்தி.

வடமொழி எதிர்ப்பு, இந்தி எதிர்ப்பு தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்துள்ளன. இதற்கு புறக் காரணங்கள் உண்டு. அகக்காரணங்கள் உண்டு. இலங்கையில் அந்த சூழ்நிலை இல்லை.

இலங்கையில் யாரும் வடமொழியை எதிர்ப்பது இல்லை. பார்ப்பனர்களை எதிர்ப்பது இல்லை. நாத்திகம் சுத்தமாக எவருமே பேசுவது இல்லை.

ஆகையால் தமிழகத்தின் சூழல் வேறு.. இலங்கை தமிழர் சூழல் வேறு. இரண்டும் ஒரே மாதிரியான சூழல் என கொள்ள முடியாது.

கட்சி தொடங்குவது எப்போது?

கட்சி தொடங்குவது எப்போது?

கேள்வி: இதை எவ்வளவு காலத்துக்குள் தொடங்குவதாக இருக்கிறீர்கள்?

பதில்: 2016-ல் சைவசமயத்தினர் ஒன்று கூடி மதமாற்ற சிக்கல்களை, சைவ கோவில்களை ஆக்கிரமிக்கிறார்கள் என்கிற சிக்கலை, சைவர்களின் தொன்மங்களை சிக்கலை உலகுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என்பதற்கான கட்டமைப்பாக சிவசேனை உருவாக்கப்பட்டது.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் சைவ தமிழ்த் தேசிய கட்சி என்ற பெயரில் போட்டியிட்டோம். மொத்தம் 9 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இவர்கள் வெற்றிபெறவில்லை என்பது வேறு. ஆனால் அந்த கட்சிக்கான தேவை இருக்கிறது என்பதை நோக்கி சைவர்கள் முன்னேறி இருக்கிறார்கள் என்பதை அது காட்டியது.

கேள்வி: சைவ தமிழ் தேசியக் கட்சி பாஜகவுக்கான முன்னோட்டமாக பார்க்கலாமா?

பதில்: அப்படித்தான் அதை பார்க்க வேண்டும். இலங்கையில் கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் அல்லாதவர்கள் சிங்களவர் உட்பட அனைவரும் பாஜகவில் இணைவார்கள் என்றுதான் தோன்றுகிறது.

இலங்கை பாஜகவில் சிங்களவர்

இலங்கை பாஜகவில் சிங்களவர்

கேள்வி: சிங்களவர்கள் இணைவதற்கு எப்படி சாத்தியம்?

பதில்: சிங்களவர்கள் பாரதிய ஜனதா கட்சியை எதிர்க்கட்சியாக பார்க்கவில்லை. சிங்களவர்கள் இந்தியாவிலும் இலங்கையிலும் இந்து சமயத்தை எதிர்க்கவில்லை.

இந்திய மேலாதிக்கத்தைதான் சிங்களவர்கள் எதிர்க்கிறார். ஆனால் இந்தியாவை எதிர்க்கவில்லை. எல்லா இந்துக்கள் வீடுகளிலும் புத்தர் சிலை இருக்கும். புத்தரின் கொள்கைகள் பல இந்துக்களின் வாழ்வியலாக மாறி இருக்கிறது.

புத்தரின் அறவழி கொள்கையைத்தானே மகாத்மா காந்தியடிகள் பின்பற்றினார்.

சிங்களவர் எதிர்ப்பு ஏன்?

சிங்களவர் எதிர்ப்பு ஏன்?

கேள்வி: சிங்கள அரசியல் தலைவர்கள் இந்த முன்னெடுப்பை எதிர்ப்பதாக சொல்கிறார்களே?

பதில்: பல சிங்களவர் பாஜகவை எதிர்க்க காரணம் இந்திய மேலாதிக்கம் வந்துவிடும் என்பதுதான். இப்போது புத்தர் இலங்கைக்கு வந்தாலும் கூட இந்திய மேலாதிக்கம் வந்துவிடும் என புத்தரையே எதிர்க்கக் கூடியவர்கள் சிங்களவர்கள்.

உண்மையில் இந்திய மேலாதிக்கத்தின் பெறுபேறுகளை அடைந்தவர்கள் சிங்களவர் என்பதை மறந்துவிட்டார்கள். இந்திய மேலாதிக்கத்தால் உருவானவர்கள்தான் சிங்களவர்கள். ஆகையால் இப்படி அவர்கள் எண்ணுவது பேதமை என்றே நினைக்கிறேன்.

English summary
Sevanai President Maravanpulavu Sachithananthan has announced that they will launch a new political party in the name of BJP in Srilanka.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X