கூட்டணியுடன் வரும் திராவிட கட்சிகள்! தனித்து களமிறக்கும் 5 முக்கிய கட்சிகள்-பரபரக்கும் தேர்தல் களம்
சென்னை: தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கான பணிகளை அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக மேற்கொள்ளத் தொடங்கியுள்ளன.
தமிழ்நாட்டில் கடந்த 2017ஆம் ஆண்டிலேயே உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டிருக்க வேண்டும். இருப்பினும், பல ஆண்டுகளாக அவை நடத்தப்படவில்லை. இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் தலையிட்ட பின்னர், கடந்த 2019இல் ஊரக உள்ளாட்சித் தேர்தல் மட்டும் நடைபெற்றது. அதிலும் கூட புதிய மாவட்டங்களுக்குத் தேர்தல் நடத்தப்படவில்லை.
இந்தியாவில் விடாமல் அதிகரிக்கும் கொரோனா.. 3 லட்சத்தை தாண்டி தினசரி கேஸ்கள்.. கேரளா, கர்நாடகா மோசம்
இந்தச் சூழலில் திமுக ஆட்சி அமைத்த உடனேயே உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், கொரோனா பரவல் காரணமாக அது சற்றே தாமதமானது.

உள்ளாட்சி தேர்தல்
அதைத் தொடர்ந்து கடந்த அக். மாதம் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இதில் திமுக கூட்டணி மாபெரும் வெற்றியைப் பெற்றது. 6 மாதங்களுக்கு முன்பு ஆளும் கட்சியாக இருந்த அதிமுக படுதோல்வியடைந்தது. இதனால் அதே சூட்டோடு இந்தாண்டு பட்ஜெட்டிற்கு முன்பு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த விரும்பியது ஆளும் தரப்பு. இருப்பினும், கொரோனா உள்ளிட்ட சில காரணங்களால் தேர்தல் தள்ளிப்போனது.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்
இந்தச் சூழலில் தான் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் குறித்த அறிவிப்பு கடந்த புதன்கிழமை வெளியிடப்பட்டது. சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என, தமிழகத்தில் உள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, வார்டு வரையறை செய்யப்பட்டபடி, ஒரே கட்டமாகத் தேர்தல் நடத்தப்பட உள்ளது. வரும் பிப்ரவரி 19இல் வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், பிப்ரவரி 22இல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. மேலும், வரும் மார்ச் 4இல் மேயர், நகர்மன்ற தலைவர்களைத் தேர்வு செய்ய மறைமுகத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

7 முனை போட்டி
தமிழ்நாடு முழுக்க தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இதையடுத்து அனைத்து தேர்தல் கட்சிகளும் வேட்பாளர்களை இறுதி செய்யும் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளன. தமிழ்நாட்டில் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த முறை பல முனை போட்டி ஏற்பட்டுள்ளது. கடந்த சட்டசபைத் தேர்தலில் 5 முனை போட்டி, நிலவிய நிலையில் இந்த முறை அது 7 முனை போட்டியாக மாறியுள்ளது.

அப்படியே இருக்கும் திமுக கூட்டணி
திமுக கூட்டணியைப் பொறுத்தவரைக் கடந்த சட்டசபைத் தேர்தலில் இருந்த அதே கூட்டணியுடன் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்கிறது. கடந்த அக். மாதம் நடைபெற்ற 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலிலும் இந்த கூட்டணி பிரம்மாண்ட வெற்றியைப் பதிவு செய்திருந்த நிலையில், இப்போது மீண்டும் அதையே நிகழ்த்த தயாராகி வருகிறது திமுக கூட்டணி. கடந்த முறையைப் போலவே மாவட்டச் செயலாளர்கள் தான் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

அதிமுக பாஜக கூட்டணி என்னவாகும்
மறுபுறம் அதிமுக - பாஜக கூட்டணி அமைத்து இந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்கிறது. பொங்கல் பரிசுப் பொருட்கள் உள்ளிட்டவற்றில் ஆளும் தரப்பினர் மீது இருக்கும் மக்கள் கோபத்தை வாக்குகளாக மாற்ற வியூகம் வகுத்து வருகிறது அதிமுக! கடந்த சில அதிமுக - பாஜக உறவில் சலசலப்பு ஏற்பட்டுள்ள போதிலும் இந்தக் கூட்டணி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் தொடரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

கூட்டணியில் இருந்து விலகிய கட்சிகள்
சட்டசபைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் 23 இடங்களில் போட்டியிட்ட பாமக, 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலிலேயே தனித்துத் தான் போட்டியிட்டது. அதேபோல இந்த முறையும் பாமக தனித்துப் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளது. அதேபோல சட்டசபைத் தேர்தலை அமமுக உடன் இணைந்து போட்டியிட்ட தேமுதிக, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் என்று கடந்த ஆண்டு நவ. மாதமே அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்திருந்தார்.

சாதிப்பரா கமல்
அதேபோல மக்கள் நீதி மய்யமும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தனித்தே களமிறங்குகிறது. மற்ற கட்சிகளைவிட முன்கூட்டியே பல இடங்களில் வேட்பாளர்களை அறிவித்து, சத்தமில்லாமல் பிரசாரத்தையும் தொடங்கிவிட்டது மநீம. கடந்த தேர்தல்களிலும் நகர்ப்புறங்களில் மக்கள் நீதி மய்யத்திற்கு வாக்குகள் அதிகமாகவே வந்தது. எனவே, அதைக் கணக்கிட்டே, இந்த முறை நகர்ப்புறங்களில் அதிக கவனம் செலுத்தி பரப்புரை செய்து வருகிறது மக்கள் நீதி மய்யம். தற்போது "விக்ரம்" ஷூட்டிங்கில் இருக்கும் கமல், விரைவில் தீவிர பிரசாரத்தில் இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாம் தமிழர்
சீமானின் நாம் தமிழர் கட்சியும் வழக்கம் போல இந்த முறையும் தனித்தே களமிறங்குகிறது. இந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அக்கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களைத் தேர்வு செய்யக் கட்சியின் பொதுச்செயலாளர் சந்திரசேகரன் தலைமையில் பணிக்குழு அமைத்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் 7 முனை போட்டியாக மாறியுள்ளது. பல முனை போட்டியாக இருந்தாலும் கூட கடந்த சட்டசபை தேரலைப் போலவே இந்த முறையும் திமுக, அதிமுக இடையே தான் கடும் போட்டி இருக்கும் எனக் கூறப்படுகிறது.