• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

தெய்வீக ராகம்.. தெவிட்டாத ஜென்ஸி.. கேட்டாலே போதும்.. பல ஜென்மங்கள் வேண்டும்... இன்னிசை இளவரசி!

|

சென்னை: தேனருவி என்பார்களே அது சாட்சாத் நம்ம ஜென்ஸிதான்.. இன்று அவருக்கு பிறந்த நாள்.. காற்றில் வருடும் இந்த இன்னிசை தென்றலை நினைவு கூர்வதில் "ஒன் இந்தியா தமிழ்" பெருமை கொள்கிறது!

தமிழ் இசையுலகில் இன்றளவும் மறக்க முடியாத பின்னணி பாடகி ஜென்ஸி... மொத்த இனிமையையும் இவர் ஒருவரே குத்தகைக்கு எடுத்து கொண்டவர்.. மொத்த மென்மையையும் இழுத்து தன்னுள்ளே பூட்டி வைத்துக் கொண்டவர்!

கேரளாவில் சாதாரண குடும்பத்தில் பிறந்தவர்.. இசையில் லோயர் முதல் ஹையர் வரை பின்னி பெடலெடுத்தவர்... 13 வயதிலேயே அம்மாநிலத்தில் பாட தொடங்கிய ஜென்சியை தமிழகத்துக்கு அழைத்து வந்தது பிரபல பாடகர் ஜேசுதாஸ்தான்.. அப்போது ஜென்ஸிக்கு வயது 16!

அரசு பலமுறை எச்சரித்தது.. கோயம்பேடு வியாபாரிகள் கேட்கவில்லை.. முதல்வர் பழனிச்சாமி விளக்கம்அரசு பலமுறை எச்சரித்தது.. கோயம்பேடு வியாபாரிகள் கேட்கவில்லை.. முதல்வர் பழனிச்சாமி விளக்கம்

ஜானகி

ஜானகி

சுசிலா ஒரு பக்கம், ஜானகி ஒரு பக்கம் என 2 இசை புயல்களுக்கு நடுவே தென்றல் போல மெல்ல தவழ்ந்து படர்ந்து வீச ஆரம்பித்தார் ஜென்சி.. அதிகமில்லை.. வெறும் 4 வருடங்கள்தான், மொத்தமே 50 பாடல்கள்தான் இருக்கும்.. இதில் எதை சொல்ல? எதை விட? இந்த பாட்டு மட்டும் கொஞ்சும் சுமார் என்று சொல்லும்படியாக ஒன்றுகூட இல்லை என்பதே இவரது சிறப்பு. அத்தனையும் நல்முத்துக்கள்.

அடி பெண்ணே

அடி பெண்ணே

முள்ளும் மலரும் படத்தில்"அடி பெண்ணே" என்பது இவர் பாடிய 2வது பாடல்.. எடுத்த எடுப்பிலேயே இந்த பாடல் தமிழக மக்களின் இதயங்களில் ஆழமாக வந்து ஒட்டிக் கொண்டது.. கிழிந்த சேலையின் ஓட்டை வழியாக ஷோபாவின் கண்கள் நம்மை சுண்டியிழுத்தாலும், அழகியலை அதன் தன்மையுடன் இதயத்தில் பாய்ச்சியது ஜென்ஸியின் குரல்தான்... ஷோபாவுக்கு ஏற்படும் காதல் உணர்வு பார்க்கும் மக்களையும் பீடித்துவிடும்.. இந்த பாடலில் "பொன்னூஞ்சல் ஆடும் இளமை" என்று ஒரு வரி வருமே.. அது முற்றிலும் நிதர்சன சூழலின் நிஜம்!! நிறம் மாறாத பூக்கள் படத்தில் "இரு பறவைகள் மலை முழுவதும்" பாடலில் "எங்கெங்கு அவர் போல நான் காண்கிறேன்" என்ற வரிகளில் காதலின் அன்னியோன்யமும், புரிதலும் மேலோங்கி தழைப்பதை நம்மால் உணர முடியும்!!

தெய்வீக ராகம்

தெய்வீக ராகம்

ஜானி படத்தில் "என் வானிலே, ஒரே வெண்ணிலா" மற்றும் தெய்வீக ராகம், என்ற ரெண்டுமே ரெண்டு ரகம்.. இவைகள் தெய்வீக ராகம்தான்.. இதில் என் வானிலே பாடல் கொஞ்சம் கடினமான பாடல்.. அதில் உள்ள ஆலாபனைகளை பாட சற்று சிரமமும்கூட.. இதை மேடைகளில் துணிந்து பாட பலர் இப்போதும் தயங்குவார்கள்.. ஆனால் அப்படி ஒரு கடினமான விஷயமே அதில் இல்லாதது போல அனாயசமாக பாடியிருந்தார் ஜென்சி. 80'களின் இளசுகளுக்கு லவ் ஃபெயிலியர் பாடல் "இதயம் போகுதே" என்பதுதான்.. ஏக்கம், தவிப்பு, துடிப்பு, எப்படியும் காதலன் தன்னை கைப்பிடித்துவிடுவான் என்ற நம்பிக்கை போன்றவை அத்தனையும் கலந்து தெறித்து இழைய விட்டிருந்தார் ஜென்ஸி இந்த பாடலில்!!

ஆயிரம் மலர்களே

ஆயிரம் மலர்களே

டூயட் பாடல்களோ தனி ரகம்தான்.. என்னுயிர் நீதானே, ஆயிரம் மலர்களே மலருங்கள், மயிலே மயிலே உன் தோகை எங்கே என்ற பாடல்கள் அப்படியே திரையுலகில் சிற்பமாய் நின்றுவிட்டது.. குறிப்பாக "ஆயிரம் மலர்களே" பாடல் இன்றுவரை ஒரு அழியா காவியம்... இதில் ஷைலஜா, மலேசியா வாசுதேவனும் இணைந்து பாடியிருந்தாலும் ஜென்ஸியின் குரல் தனித்துவம் வாய்ந்தது.. ஒரு வெகுளித்தனம் அதில் வெளிப்படும்.. பின்னணியில் ஒலிப்பது இசைக்கருவிகள் அல்ல? அது மனித உணர்வுகள் போலவே புலப்படும்.. அது ஒரு சுகானுபவம்.. சோகத்தின் ஆன்மா சுழன்று நடமாடும்.. பாடுவது ஒரு குயிலின் மொழியாகவே கேட்கும்.. தமிழே தெரியாத ஜென்ஸியா இதை பாடுகிறார் என்ற ஆச்சரியங்களை குவிய வைத்திருந்தார். யாராக இருந்தாலும் சரி.. இழந்த காதலின் வசந்தத்தை இந்த பாடல் முழுவதுமாக நிரப்பிவிடும்.. அந்த பாடலின் இறுதியில், ‘என் பாட்டும், உன் பாட்டும் ஒன்றல்லவோ' என்ற வரிகளில் அனைவருமே ஒருமித்து சங்கமமாகிவிடுவோம்!

இசை ஆசிரியை

இசை ஆசிரியை

புகழின் உச்சியில் இருந்த நேரம் கேரளாவில் ஒரு அரசு பள்ளியில் மியூசிக் டீச்சராக வேலை கிடைத்தது ஜென்சிக்கு.. இதனால் பாடுவதா? வேலைக்கு போவதா என்ற பெரிய குழப்பத்துக்கு ஆளானார்.. இந்த வேலைக்காக இவர்கள் வீட்டில் ஆரம்பத்தில் இருந்தே எடுத்த முயற்சி கொஞ்சநஞ்சமல்ல.. வந்த வாய்ப்பை தவற விடாதே என்ற அழுத்தங்களும் நெருக்கி தள்ளின. "ஏன் இந்த முடிவு? போகாதே.. வேணாம்.." என்று இளையராஜாவும் தன் கருத்தை சொன்னதாக செய்திகள் அப்போது வெளிவந்தன.

அலைகள் ஓய்வதில்லை

அலைகள் ஓய்வதில்லை

இறுதியில் குடும்பத்தாரின் ஆசைப்படி பள்ளியில் டீச்சராக சேர்ந்தார்.. "ஒரு பிரபல பாடகி, டீச்சர் வேலைக்கு போறாங்களே" என்று அப்போதைய பத்திரிகைகளில் பரபரப்பான செய்திகளும் வந்தன.. இருந்தாலும் இளையராஜா அப்போதும் வாய்ப்புகளை தந்து ஜென்சியை பாட வைத்தார்.. அப்படி பாடியதுதான் அலைகள் ஓய்வதில்லை படத்தில் பாடிய "காதல் ஓவியம், பாடும் காவியம்" என்ற பாடல்.. இளையராஜாவுடன் இணைந்து பாடிய இந்த பாடல், அந்த காலகட்டங்களில் இளைஞர்களின் காதல் தேசீய கீதம் என்றே சொல்லலாம். இந்த ஒரு பாடல் மட்டுமே பல நூறு காதல்களை வளர்த்துள்ளது என்பதே இப்பாடல் ஆன்மாவின் அதிசயம்!

மன திருப்தி

மன திருப்தி

வேலை பளு காரணமாக, பாடுவதும் மெல்ல குறைந்துவிட்டது.. ஆனால், இறுதிவரை இவர் வாய்ப்பு கேட்டும் யாரிடமும் செல்லவில்லை.. ஒரு பேட்டியில் சொல்கிறார், "எனக்கு தானா போய் வாய்ப்பு கேட்கிற நுணுக்கம் தெரியல... உதவவும் எனக்கு யாரும் இல்லை... ஒரு அரசு உதவி பெறும் பள்ளியில் டீச்சரா வேலை கிடைச்சது. முழு மனசோட வேலை செய்தேன்.. ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு இசையை கற்று தந்தேன் அப்படிங்கிற திருப்தி இருக்கு" என்கிறார். இந்த மனநிறைவான வார்த்தைகளை எத்தனை பேரால் சொல்ல முடியும் என்பது தெரியவில்லை.

வாழ்த்துக்கள்

வாழ்த்துக்கள்

இப்போது வரை ரசிகர்களால் ஜென்ஸியை மறக்க முடியவில்லை.. பாடல்களே அதிக தாக்கத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், சன்னமான குரலில் இவர் பேச்சுக்களை கேட்டவர்களும் மிகக்குறைவுதான்.. எப்போது தன்னை பற்றி பேசினாலும் வாய்ப்பு தந்த இளையராஜாவை மறக்காமல் கண்ணீருடன் நினைவு கூருவார் ஜென்சி.. இவரது ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் ரசிகர்கள் மறக்காமல் வாழ்த்துக்களை கூற தவறுவதில்லை.. அந்த அளவுக்கு ரசிகர்களின் ஆன்மாவை தன்னுடைய 18 வயதிலேயே தட்டி எழுப்பி விட்டு சென்றவர் ஜென்ஸி.. திரும்பும் திசையெல்லாம் "காதல் ஓவியம், பாடும் காவியம்தான்"!! இசை பொக்கிஷங்களை திகட்டாமல் அள்ளி அள்ளி தந்த ஜென்ஸி, நீண்ட நாள் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என்பதே கடைகோடி இசை ரசிகர்களின் நெஞ்சார்ந்த விருப்பம்!

English summary
the famous playback singer jency birth day today
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X