அதிமுக ஒற்றைத்தலைமை குஸ்தி.. மீண்டும் கூடும் பொதுக்குழு யாருக்கு சாதகம்?..எண் கணித நிபுணர் கணிப்பு
சென்னை: அதிமுகவில் ஒற்றைத்தலைமை விவகாரம் ஓய்ந்தபாடில்லை. ஜூலை 11ஆம் தேதி 2வது முறையாக கூடப்போகும் அதிமுக பொதுக்குழு யாருக்கு சாதகமாக இருக்கிறது யாருக்கு பாதகமாக இருக்கிறது என்று கணித்துள்ளார் பிரபல எண் கணித நிபுணர் டாக்டர் ஜெ.என்.எஸ் செல்வன்.
நான் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அதிமுக 200 ஆண்டுகள் இருக்கும் என்று சொன்னார் ஜெயலலிதா. அவர் மறைந்து சில ஆண்டுகளிலேயே கட்சியில் தலைமைப்பதவிக்கான மல்லுக்கட்டு ஆரம்பித்து விட்டது.
அதிமுகவின் தலைவர் யார் என்று தொண்டர்கள் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். இரட்டை தலைமைக்கு இடையே ஏற்பட்ட போட்டியே ஒற்றைத்தலைமையைப் பற்றி பேச வைத்திருக்கிறது. சசிகலா, எடப்பாடி பழனிச்சாமியா? ஓ.பன்னீர் செல்வமா? ஒற்றைத்தலைமை யார் என்பதே தொண்டர்கள் இடையே எழும் கேள்வி.
அதிமுகவில் யாரும் யாரையும் நீக்க முடியாது! ஒரே போடாய் போட்ட சசிகலா? ஓபிஎஸ் ஆதரவு? குழப்பத்தில் ர.ர.!

அதிமுக பொதுக்குழு
அதிமுகவில் ஜூன் 23ஆம் தேதியன்று முதலில் கூட்டப்பட்ட பொதுக்குழு ஓ.பன்னீர் செல்வத்திற்கு சாதகமாக அமைந்தது. வரும் 11ஆம் தேதி பொதுக்குழு கூட்டப்படும் என்று அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் கூறியுள்ளார்.

அதிமுக மல்லுக்கட்டு
அதிமுகவில் நடக்கும் மல்லுக்கட்டுக்களை எதிர்கட்சியாக இருந்தாலும் சரி கூர்ந்து கவனிக்கும் பாஜகவும் யார் அந்த ஒற்றைத்தலைமை என்று யோசித்துக்கொண்டிருக்கிறது. இப்போது நடக்கும் மல்லுக்கட்டுகளுக்குக் காரணம் முன்பிருந்த எம்ஜிஆர், ஜெயலலிதா தங்களுக்குப் பிறகு இரண்டாம் கட்ட தலைவர்களை வளர்த்து விடவில்லை.

எம்ஜிஆர்
அதிமுக நிறுவனர் எம்ஜிஆர் 1972ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் தேதி அதிமுக என்ற கட்சியை அறிவித்தார். அவருக்குப் பிறகு இரண்டாம் கட்ட தலைவர்களை அவர் உருவாக்கவில்லை. மூன்று முறை முதல்வராக இருந்து கட்சியை வழி நடத்தினார் 1987ஆம் ஆண்டு உடல் நலக்குறைவினால் மரணமடைந்தார். எம்ஜிஆர் மறைவிற்குப் பிறகு யார் தலைவர் என்ற போட்டியில் கட்சி பிளவு பட்டது.

ஜெயலலிதா
1989ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஜெயலலிதா தனது வலிமையை நிரூபித்து கட்சியின் பொதுச்செயலாளர் ஆனார். அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் என்று அவரது தொண்டர்களால் கொண்டாடப்பட்டார். அடுத்தடுத்த வெற்றிகள் சில சறுக்கல்கள் ஏற்பட்டாலும் கண்ணுக்கு எட்டிய தூரம் வரைக்கும் எதிரிகளே இல்லை என்று ஜெயலலிதா பேசினார். 2016ஆம் ஆண்டு உடல் நலக்குறைவினால் மரணமடைந்தார் ஜெயலலிதா.

சசிகலா
ஜெயலலிதாவிற்குப் பிறகு அவரது நிழல் போலவே இருந்த சசிகலாவை கூட அவர் வளர்த்து விடவில்லை. தானாவே பொதுச்செயலாளர் என்று அறிவிக்கச் சொல்லியும் அந்த பதவி நிலைக்கவில்லை. ஓ.பன்னீர் செல்வத்தையும், எடப்பாடி பழனிச்சாமியையும் நன்கு வளர்த்து விட்டவர் சசிகலாதான்.

ஓபிஎஸ், இபிஎஸ்
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு பிளவு பட்ட கட்சி சில மாதங்களில் மீண்டும் ஒற்றிணைந்தது. சசிகலாவை ஒதுக்கி வைத்து விட்டு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியை எடப்பாடி பழனிச்சாமியும் ஓ.பன்னீர் செல்வமும் உருவாக்கினர். ஒற்றைத்தலைமை விவகாரம் இப்போது பூதாகரமாகியுள்ளது.

அதிமுக பொதுக்குழு
அதிமுகவினால் முதலில் ஜூன் 23ஆம் தேதியன்ற கூட்டப்பட்ட பொதுக்குழு ஓ.பன்னீர் செல்வத்திற்கு சாதகமாக அமைந்தது. வரும் 11ஆம் தேதி பொதுக்குழு கூட்டப்படும் என்று அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் கூறியுள்ளார். 2வது முறையாக கூடப்போகும் அதிமுக பொதுக்குழு யாருக்கு சாதகமாக இருக்கிறது என்று கணித்துள்ளார் பிரபல எண் கணித நிபுணர் டாக்டர் ஜெ.என்.எஸ் செல்வன்.

யாருக்கு சாதகம்
பொதுக்குழு நடைபெறும் ஸ்ரீவாரு வெங்கடேஸ்வரா கல்யாண மண்டபத்தின் பெயர் எண் கூட்டுத்தொகை 104. இந்த மண்டபத்தில் நடைபெறும் பொதுக்குழு ஓ.பன்னீர் செல்வத்திற்கு சாதகமாக அமைந்தது. காரணம் ஓ.பன்னீர் செல்வம் பிறந்த தேதி 14 கூட்டுத்தொகை 5. மண்டபத்தின் கூட்டுத்தெகை 104 கூட்டினால் 5 வருகிறது. இது ஓ.பன்னீர் செல்வத்திற்கு சாதகமே.

எடப்பாடி பழனிச்சாமி
ஆள் செய்யாததை நாள் செய்யும் என்று சொல்வார்கள். 11/07/2022 அன்று நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழு எடப்பாடி பழனிச்சாமிக்கு பின்னடைவைத் தரும். காரணம் எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்தநாள்
12/05/1954 கூட்டுக்தொகை 9 வருகிறது. 12 கூட்டுத்தொகை 3 வருகிறது. பொதுக்குழு கூட்டுத்தொகை உள்ள எண் 11 கூட்டுத்தொகை 2 வருகிறது. 11/07/2022 கூட்டுத்தொகை 6. இந்த எண்கள் எடப்பாடி பழனிச்சாமிக்கு சாதகமற்ற எண்களான 2,6,8ல் வருகிறது.

ஓ.பன்னீர் செல்வம்
ஓ.பன்னீர் செல்வத்திற்கு சாதகமான நாளில் பொதுக்குழு நடைபெற உள்ளது. ஓ.பன்னீர் செல்வத்தின் பெயர் எண் 6 எனவே பொதுக்குழு நடைபெறும் தேதியின் கூட்டுத்தொகையும் சாதகமாகவே உள்ளது. பல பலன்களை ஓபிஎஸ்க்கு சாதகமாக கிடைக்கப்போகிறது. இந்த சாதகம்தான் எடப்பாடி பழனிச்சாமிக்கு பாதகத்தை தரப்போகிறது என்கிறார் எண் கணித நிபுணர் ஜெ.என்.எஸ் செல்வன்.

ஜூலை 11 அதிமுக பொதுக்குழு
தமிழகத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேதி, வாக்கு எண்ணிக்கை அனைத்துமே எடப்பாடி பழனிச்சாமிக்கு சாதகமற்றதாகவே இருந்தன. இதற்குக் காரணம் அந்த எண்களின் கூட்டுத்தொகை, 6, 2 என வந்ததுதான். நடைபெற உள்ள பொதுக்குழுவும் எடப்பாடி பழனிச்சாமிக்கு சாதகமற்ற நிலையில் உள்ளது என்றும் கணித்துள்ளார் டாக்டர் ஜெ.என்.எஸ் செல்வன்.

பொதுச்செயலாளர்
பொதுக்குழுவில் எடப்பாடி பழனிச்சாமியை தற்காலிக பொதுச்செயலாளராக தேர்வு செய்ய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அது சாத்தியமாகுமா? அதற்கு ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் இடம் தருவார்களா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. ஒற்றைத்தலைமையால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது அதிமுக தொண்டர்கள்தான். எது எப்படியோ அதிமுக தொண்டர்களுக்கு நல்லது நடந்தால் சரிதான்.