சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சோடி போட்டுக்கலாமா சோடி... சோஷியல் மீடியாவில் சண்டை போடுவது எப்படி?

Google Oneindia Tamil News

சென்னை: கராத்தே, குங்ஃபூ என எல்லா சண்டைக்கும் சில விதிமுறைகள், டெக்னிக்குகள் இருக்கு. அவ்வளவு ஏன், ரோட்டுல பெண்கள் போடுற குழாயடி சண்டையில கூட ஜெயிக்கணும்னா சில வழிமுறைகள் இருக்கு. உரக்க சவுண்டு விடணும், காது கூசுற மாதிரி சரமாரியா கெட்ட வார்த்தைகளை அவுத்து விடணும் என குழாயடி சண்டைக்கே பல வித்தைகள் தெரிஞ்சிருக்கணும். அப்பதான் கோதாவுல இறங்கி கெத்து காட்ட முடியும்.

இந்த தாயத்தை கட்டிக்கிட்டா நடுராத்திரியில நீங்க சுடுகாட்டுக்கு போகலாம் ரேஞ்சிக்கு சொல்றியேப்பா.. நான் ஏன்டா நடுராத்தியில சுடுகாட்டுக்கு போகணும்.. என்று நீங்கள் கேட்பது புரிகிறது. நீங்கள் கராத்தே கற்க வேண்டிய அவசியம் இல்லாமல் இருக்கலாம்.. குழாயடியில் சண்டை போட வேண்டிய சூழல் இல்லாமல் இருக்கலாம். ஆனால் நிச்சயம் சோஷியல் மீடியாவில் யாருடனாவது எப்போதாவது சண்டை போட வேண்டிய தருணம் வருவதற்கு நிறைய வாய்ப்பு இருக்கு. நீங்க சும்மா இருந்தாலும், வலிய வந்து சண்டை போடும் ஆட்கள் இணையத்தில் எக்கச்சக்கமாக இருக்கிறார்கள். அதனால் நீங்கள் வீண் சண்டைக்கு போகாவிட்டாலும், வந்த சண்டையை எதிர்கொள்ளவும், அதில் இருந்து விலகி இருக்கவும் சில விஷயங்களை காதில் வாங்கி போட்டு வைத்துக் கொள்வது, நல்லது.

திமுக தலைவர் ஸ்டாலினை தரக்குறைவா பேசிட்டாருன்னு, அமைச்சர் மாஃபா பாண்டியராஜனை திமுக ஆதரவு நெட்டிசன்கள் சமீபத்தில் இணையத்தில் வறுத்து எடுத்தார்கள். #மாமாபாண்டியராஜன் என்று ஒரு டேகை உருவாக்கி, அதை அகில இந்திய அளவில் நெம்பர் 1 டிரெண்ட் ஆக்கிவிட்டார்கள். இதுபோன்ற தனிநபர் தாக்குதல்கள் இப்போதெல்லாம் இணையத்தில் அடிக்கடி நடக்கிறது. டிரம்ப் முதல் மோடி வரை தனிநபர் தாக்குதலில் சிக்காத தலைவர்களே இன்னைக்கு கிடையாது.

அவர்தான் முக்கிய புள்ளி.. இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பயங்கரம்.. காஸாவின் போராளி குழு தலைவர் கொலை!அவர்தான் முக்கிய புள்ளி.. இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பயங்கரம்.. காஸாவின் போராளி குழு தலைவர் கொலை!

 டிவிட்டர், பேஸ்புக்

டிவிட்டர், பேஸ்புக்

சோஷியல் மீடியாவில் சண்டை ஆரம்பிக்கிற இடம் என்று பார்த்தால் பெரும்பாலும் அது ட்விட்டரும்தான், ஃபேஸ்புக்கும்தான். திடீரென ஒரு விஷயத்தை பற்றி எல்லோரும் பேச ஆரம்பிப்பார்கள். என்னடா நடக்குது அங்கே..ன்னு லேசா எட்டிப்பார்த்தா யார் தலையாயவது உருட்ட ஆரம்பிச்சிருப்பாங்க. சம்பந்தப்பட்ட ஆளுக்கு அது தெரிய வர்ரதுக்குள்ள ஊரே அங்கே கூடி கும்மியடிச்சிருக்கும். செல்ஃபி எடுக்க வந்த பையனின் செல்போனை தட்டிவிட்ட நடிகர் சிவகுமார், சோஷியல் மீடியாவில் சிக்கி என்ன பாடுபட்டார் என்பதை நாம் பார்த்திருக்கிறோம். இதில் எல்லாம் கலந்துக்காம ஆனா இதை எல்லாம் வேடிக்கை பார்த்து ரசிக்கிறதுக்குனே ஒரு பெரிய கூட்டமும் இருக்குது.

 வள்ளுவரே சொல்லிருக்காரு பாருங்க

வள்ளுவரே சொல்லிருக்காரு பாருங்க

இப்படி எல்லாம் நடக்கும்னு தெரிஞ்சிதான் நம்ம திருவள்ளூர் 2 ஆயிரம் வருஷத்துக்கு முன்னாடியே இதுக்கு ஏத்த மாதிரி ஒரு குறள் எழுதி வெச்சிருக்காரு.
"குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்று
உண்டாகச் செய்வான் வினை" என்பதுதான் அந்த குறள்.
அதாவது ஒருத்தன் யாரையும் சார்ந்து இல்லாம தன் உழைப்பால் உயருவது என்பது குன்று மேலே ஏறி நின்னுகிட்டு கீழே நடக்கிற யானைகள் சண்டையை வேடிக்கை பார்க்கிற மாதிரி சேஃபான மேட்டருன்னு வள்ளுவர் சொல்லியிருக்காரு.

 ஹாயா உட்கார்ந்தபடி சண்டை

ஹாயா உட்கார்ந்தபடி சண்டை

இன்னைக்கு இணையத்திலயும் இதுதான் நடக்குது. பெரிய பெரிய ஜாம்பவான் யானைகள் ட்விட்டரிலும், ஃபேஸ்புக்கிலும் மோதிக் கொண்டிருக்கும். பொதுஜனம் அதை குன்று மேல நின்னுகிட்டு வேடிக்கை பார்ப்பதுபோல, வீட்டுல ஹாயா உட்கார்ந்துட்டு லேப்டாப்புல வேடிக்கை பார்க்கும்.
பெண்கள் தங்களின் அழகான ஒரு படத்தை அப்லோடு பண்ணா, உடனே எங்கிருந்தோ ஒரு புள்ளிங்கோ வந்து துப்பட்டா போடுங்க தோழின்னு ஆரம்பிக்கும். துப்பட்டாவாடா கேட்குது துப்பட்டா.. காமாலைக் கண்ணா.. என்று பெண்ணிய கோஷ்டி அந்த புள்ளிங்கோவை பிரிச்சு பேன் பார்க்க ஆரம்பிக்கும். அப்படியே அந்த போட்டோ ஊரெல்லாம் வைரலாகிடும். நம்ம நடிகர் அருண் பாண்டியன் அண்ணன் பொண்ணு ரம்யா பாண்டியன் இப்படிதான் இடுப்பு மடிப்பு தெரியுற மாதிரி ஒரு போட்டோவை போட்டதும், அமெரிக்கா காரன் ஜப்பான்ல அணுகுண்டு போட்டா மாதிரி சோஷியல் மீடியாவே அதிரிபுரிதி ஆகிடுச்சி. இது கவர்ச்சி, இல்லே இது ஆபாசம்னு ஆளாளுக்கு வியாக்யானம் வேற. மாற்று கருத்து சொன்னவங்களை திட்டி தீர்க்கிறதுன்னு இந்த சண்டை ஓயவே சில பல நாட்கள் ஆச்சு.

 எப்படி எதிர்கொள்ளலாம்

எப்படி எதிர்கொள்ளலாம்

சரி, மேட்டருக்கு வருவோம். ஏதோ ஒரு காரணத்துக்காக இந்த சோஷியல் மீடியா வாயன்கள் நம்ம தலையை உருட்ட ஆரம்பிச்சா, அதை எப்படி எதிர்கொள்வது. வடிவேலு மாதிரி லஜக், மொஜக் என்று ஹேண்டில் செய்தால், ஒட்டுமொத்தமா சேர்ந்து மண்டையில ஒரே போடா போட்டுருவானுங்க. சமூக வலைதள எக்ஸ்பர்ட்டுகள் சொல்லும் முதல் மந்திரம். அமைதி. அட ஆமாங்க, யாராவது உங்களை சமூக வலைதளத்தில் திட்டினால், அதற்கு பதில் சொல்வதற்கு முன் முதலில் அமைதியா என்ன நடக்குது, ஏன் நடக்குதுன்னு கொஞ்சம் நிதானமா யோசிங்க என்கிறார்கள். சம்பந்தமே இல்லாத யாரோ நம்ம கருத்தையோ, நம்மையோ தவறா புரிஞ்சிகிட்டு கமெண்ட் அடிச்சால், அதுக்காக நாம ஏன் பொன்னான நேரத்தை விரயம் பண்ணி அதற்கு பதில் சொல்லணும். பல நேரங்களில் பதில்.. பதிலுக்கு பதில்.. அதுக்கு பதில்.. என இது நீண்டுகொண்டே தான் போகும். அதனால் அதை அப்படியே விட்டுவிடுங்கள். அதே ஆள் தொடர்ந்து தொல்லை கொடுத்தால், இருக்கவே இருக்கு, பிளாக், ரிப்போர்ட் போன்ற ஆப்ஷன்கள்.

 பதிலுக்கு திட்டாதீங்க

பதிலுக்கு திட்டாதீங்க

அதுவே உங்களின் கருத்துக்கு எதிர்கருத்து கொண்ட நபர் சண்டைக்கு வருகிறார் என்றால் உடனே அவரை திட்டி பதில் போடாதீர்கள். அவர் சொல்லும் கருத்து எப்படி தவறு என்பதை அக்குவேறு ஆணிவேராக அலசி காயப்போடும் பதிவுகளை போடுங்கள் என்கிறார்கள். இதற்காக நீங்கள் கொஞ்சம் ஹோம் வொர்க் செய்ய வேண்டி இருக்கும். ஆனால் இந்த பதிலே பயங்கர வைரலாகி உங்கள் கெத்தை உயர்த்த உதவும். சரியான நேரத்தில் சொல்லப்படும் சிறப்பான பதிலைப் போல உங்களுக்கு மரியாதையை பெற்றுத் தரக் கூடியது வேறு எதுவும் கிடையாது.

 யோசிச்சுப் போடுங்க

யோசிச்சுப் போடுங்க

ஆண்கள்தான் குடும்பத்தின் தலை போன்றவர்கள் என்று கெத்தாக போஸ்ட் போட்டாராம் ஒரு ஆணாதிக்கவாதி. ஆமாங்க, நீங்க தலைதான், ஆனால் பெண்கள் கழுத்து போன்றவர்கள். அந்த கழுத்து நினைத்தால் தலையை எப்படி வேண்டுமானாலும் திருப்பிவிடும்னு பதில் போட்டாராம் ஒருத்தர். எப்படி நெத்தியடி. இப்படி இருக்கணும் உங்க பதில்கள். சரியான பதிலடி திரும்பி வரும் என்று புரிய வைத்துவிட்டாலே, பலர் உங்கள் வம்புக்கு வர மாட்டார்கள்.
இன்னொரு முக்கியமான விஷயம், கமெண்ட்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காதீர்கள் என்பது. ஆண்டவனே வந்தாலும் அனைவரையும் திருப்திப்படுத்த முடியாது என்பார்கள். அதனால் நீங்க என்ன செய்தாலும் அதில் குற்றம் குறை சொல்பவர்கள் இருக்கத்தான் செய்வார்கள். அவர்களின் கருத்தில் ஏதேனும் உபயோகமான விஷயம் இருந்தால் எடுத்துக்கொள்ளுங்கள். அப்படி எதுவும் இல்லாமல் வெறும் வசவுகளாக இருந்தால் அதை மண்டைக்குள்ளேயே ஏற்றாதீர்கள். உங்கள் போஸ்டுக்கு கீழ் இருக்கும் கமெண்ட்கள் அதை பதிந்தவர்களின் தரத்தை தான் வெளிப்படுத்துகின்றன என்பதை மறந்துவிடாதீர்கள்.

 பண்பட்ட விதத்தில்

பண்பட்ட விதத்தில்

இணையத்தில் நீங்கள் யாருடனாவது முரண்பட்டாலும், அதை பண்பட்ட விதத்தில் தெரியப்படுத்த பழகுங்கள். இது எல்லாவற்றையும் மிக மிக முக்கியமானது, உங்களின் இணைய செயல்பாட்டை மற்றவர்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை எப்போதும் நினைவில் வைத்திருப்பது எக்காலத்திற்கும் நன்மை பயக்கும். மற்றபடி முடிந்த வரை ஸ்போர்டிவாக எடுத்துக்கொண்டு போனால் சமூக வலைதள சண்டைகளில் நாம் அதிகம் சிக்காமல் தப்பித்துக் கொள்ளலாம்.

- கௌதம்

English summary
Social media fights are very common nowadays and here is the story about it.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X