• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

அடி ஆத்தாடி.. தாலாட்டு, சோகம், விரகதாபம், காதல், ஏக்கம், ஊடல், குத்து.. நாம் தேடிய செவ்வந்தி பூ இது!

|

சென்னை: 60 வருடங்கள், 17 மொழிகள் 48 ஆயிரம் பாடல்கள், 4 தேசிய விருதுகள், 32 மாநில விருதுகள் என நீளும் பட்டியலை முன்வைத்து விட்டு அமைதியாக சினிமா உலகைவிட்டு ஒதுங்கியுள்ள எஸ்.ஜானகிக்கு இன்று 82-வது பிறந்த நாள். கண்களை அகல அகல விரிய செய்யும் அவரது சாதனைகளை சிலவற்றை நினைவுகூர்வதில் "ஒன் இந்தியா தமிழ்" பெருமை கொள்கிறது!!

1962-ம் ஆண்டு 'கொஞ்சும் சலங்கை' திரைப்படத்தில் 'சிங்கார வேலனே தேவா' என்ற பாடல் தயாராகிறது.. இசை எஸ்.எம்.சுப்பையாநாயுடு. அது மிகவும் கடினமான பாடலும்கூட. தொழில்நுட்பம் அவ்வளவாக இல்லாத காலகட்டம் வேறு.

எந்த பாடலானாலும் அநாயாசமாக பாடிசெல்லும் பி.சுசிலா, லீலா போன்றோரால்லேயே அப்பாடலை பாடமுடியவில்லை. யாரை பாடவைப்பது என்ற குழப்பம். பிரபலமடையாத ஒன்றிரண்டு பாடல்களை பாடிக்கொண்டிருந்த எஸ்.ஜானகியை அழைத்து வருகிறார்கள். பாடமுடியுமா என்று கேட்கிறார்கள். முடியும் என்கிறார் நம்பிக்கையோடு... கத்துக்குட்டி என்னத்த பாடபோகிறது என்று சுற்றியிருந்தோர் மனதில் ஒரு அசட்டு எண்ணஓட்டம்.

வியப்பு

வியப்பு

அனைத்து வியூகங்களையும் பொசுக்கிவிட்டு, அந்த இளம் வயதிலேயே ஒரே டேக்கில் பாடி அசத்திய ஜானகியை இன்றுவரை ஏராளமான இசை ஜாம்பவான்களே பிரமித்து பார்த்து வியக்கின்றனர். இந்த பாடலுக்கு பின் ஜானகியின் பெயர் தென்னிந்தியாவில் வெகு வேகமாக பரவ தொடங்கியது!!

 இளையராஜா

இளையராஜா

70-களின் நடுவே இசையுலகில் புயலென நுழைந்தது ஒரு புது கூட்டணி. அதிலும் வரலாற்றின் அதிசய நிகழ்வான இளையராஜாவின் வரவுக்குபின் இசையின் தடம் புதிய பாதையில் பயணிக்க தொடங்கியது. 76-ல் வெளிவந்த அன்னக்கிளி திரைப்படத்தில் "மச்சான பாத்தீங்களா" என்ற ஜானகியின் குரல் திரையின் சிம்மாசனத்தில் தூக்கி உட்கார வைத்தது.

 ஆண் குரல்

ஆண் குரல்

தனது பாடல்களில் ஜானகியின் முழு திறமையையும் பயன்படுத்தியதில் பெரும்பங்கு இளைஞானிக்குத்தான் போய் சேரும். ஜானகிக்கு அவரளித்த பாடல்களில்தான் என்னே ஒரு வெரைட்டி, என்னே ஒரு மாடுலெஷன்கள்... என்னே ஒரு வாய்ஸ் ரேஞ்ச்... பாட்டி, அம்மா, மங்கை, குழந்தை... என ஒரு உறவையும் விட்டுவைக்கவில்லை அந்த ஏகாந்த குரல்... ஏன்? ஆண் குரலைகூட விட்டுவைக்கவில்லை.

பாரதிராஜா

பாரதிராஜா

70-பிற்பகுதியிலிருந்து 90-களின் இறுதிவரை ரத்தநாளங்களில் கலந்து போனார் எஸ்.ஜானகி. பாடலில் இளையராஜா என்ன உணர்வினை எதிர்பார்க்கிறாரோ அதைவிட கொஞ்சம் அதிகமாகவே அள்ளி தெளித்துவிடுவார். இளையராஜாவின் அனைத்து இசைமுயற்சிகளுக்கும் ஜானகி பக்க பலமாக இருந்தார் என்றே சொல்லவேண்டும். அதனால்தான் பின்னணி பாடகிகளில் முன்னணி பாடகி என்ற இடத்திலிருந்த பி.சுசிலாவை பின்னுக்கு தள்ளி அந்த இடத்தில் சம்மணம் போட்டு உட்கார்ந்தார்.

 காற்று

காற்று

ஜானகி பாடிய தாலாட்டு, சோகம், விரகதாபம், காதல், வீரம், ஏக்கம், ஊடல், குத்து என ஒவ்வொன்றிலும் ராகத்தின் ஆழமும், அழகும் தென்பட்டது. நாம் எங்கு பயணப்பட்டாலும், எந்த சூழலில் இருந்தாலும், எந்த மனநிலையில் இருந்தாலும் சரி.. ஜானகியின் பாட்டு காற்றில் தவழ்ந்து வந்து நம் நெஞ்சை தேனாய் நனைத்துவிடும். 80-களில் இலங்கை வானொலி பிரியர்களை அங்குமிங்கும் நகரவிடாது செய்தவர் ஜானகி என்றால் அது மிகையல்ல!!

 மெட்டி ஒலி

மெட்டி ஒலி

டிஎம்எஸ்-பி.சுசிலா ஜோடிக் குரலின் வெற்றிக்கு பின்னர், பட்டிதொட்டியெங்கும் பிரபலமானது எஸ்பி பாலசுப்பிரமணியம்-ஜானகி ஜோடிக் குரல்கள். இதேபோல பி.பி.ஸ்ரீநிவாஸ், இளையராஜாவோடு சேர்ந்து பாடிய பாடல்கள் நம் நாடி நரம்புகளில் கலந்துவிட்டவை. குறிப்பாக இளையராஜாவுடன் சேர்ந்து பாடிய சிறு பொன்மணி அசையும், மெட்டி ஒலி காற்றோடு, நான் தேடும் செவ்வந்தி பூவிது, அடி ஆத்தாடி, தென்றல் வந்து தீண்டும்போது, பூ மாலையே தோள் சேரவா, சங்கத்தில் பாடாத கவிதை போன்ற கீதங்கள் எல்லாமே நல்முத்துச்சரங்கள்.

கதாநாயகிகள்

கதாநாயகிகள்

"செந்தூரப்பூவே" பாடலை கேட்டால் மயிலும், "ஆயிரம் தாமரை மொட்டுக்களே" பாடலை கேட்டால் மேரியும், பொத்தி வச்ச மல்லிகை மொட்டு முத்துபேச்சியும், அடி ஆத்தாடி பாடலை கேட்கும்போது ஜெனிபரையும் கண்முன்னே வந்து நிறுத்தினார் ஜானகி. இப்படி பாரதிராஜா தன்னுடைய கதாநாயகிகளுக்கு ஜானகியின் குரலை பாய்ச்சி முதல் மரியாதை கொடுத்து அவரின் புகழை ஓங்கி ஒலிக்க செய்தார். அந்தந்த கதாநாயகிகளே அந்த பாடல்களை பாடுவதுபோல ஒரு ஜால வண்ணம் சிணுங்கலும்-விசும்பலுமாய் வந்து போயின. சில்க் ஸ்மிதாவை நினைத்தாலும் நமக்கு மனதில் தோன்றுவது "நேத்து ராத்திரி யம்மா"தான்!!

 பொன்னடியான்

பொன்னடியான்

என் ராசாவின் மனசிலே படத்தில் "குயில்பாட்டு ஓ வந்ததென்ன இளமானே" போடா போடா புண்ணாக்கு, ராஜாதிராஜாவில் 'என்கிட்ட மோதாதே' போன்ற பிரபல பாடல்களை எழுதியவர் கவிஞர் பொன்னடியான்... நம் ஒன் இந்தியாவுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் ஜானகி பற்றி இவ்வாறு கூறுகிறார். "அவங்கள பற்றி சொல்ல வார்த்தையே இல்லையேம்மா... ஜானகியால் இந்த பாடலை பாட முடியாமல் போய்விட்டது என்ற சம்பவமே இதுவரை இசை வரலாற்றில் நடந்தது கிடையாது... "ஒருவர் வாழும் ஆலயம்" படத்தில் நான் எழுதிய "உயிரே உயிரே உருகாதே" பாடலாகட்டும், சிங்காரவேலனில் "தூது செல்வதாரடி" போன்ற பாடல்களையெல்லாம் ஜானகி தவிர வேற யாரெனும் உயிரூட்டியிருப்பார்களா என்பது சந்தேகம்தான்" என்று புளகாங்கிதம் அடைகிறார்.

உச்சரிப்புகள்

உச்சரிப்புகள்

17 மொழிகளில் வெவ்வேறு குரல் சார்ந்த பாடல்களை அட்சர சுத்தமாகப் பாட ஜானகியால் மட்டுமே முடியும். இவரது பாடல் உச்சரிப்புகளால், ஒவ்வொரு மாநிலத்தவரும் ஜானகி எங்களுக்கானவர் என்று தூக்கிவைத்து உரிமையை கொண்டாடினர். ருசி கண்ட பூனை படத்தில் "கண்ணா நீ எங்கே வா வா நீ எங்கே". என்று மழலைக் குரலாக மாறிப் பாடிய பாடலை அவரே எழுதியது பலரும் அறியாத உண்மை. உதிரிப் பூக்கள் படத்தில் ‘போடா போடா பொக்க; என்ற பாடலை பாட்டி குரலில் வசனமும் பேசி 1.26 நிமிடத்தில் அசத்தி இருப்பார்.

 கமல்ஹாசன்

கமல்ஹாசன்

உதட்டை தவிர உடலில் வேறெந்த பாகமும் அசையாமல் பாடுவது இவரது சிறப்பு. இதனை கமலஹாசன் ஒருமுறை நகைச்சுவையாக கூறினாராம், "இவர் என்னமோ பின்னணிப் பாடகிதான். ஆனால் இவர் பாடும்போது பார்த்தால் இவருக்கே யாரோ பின்னணி பாடுவது போல தோன்றும். அந்த அளவிற்கு உதடு அசைகிறதா இல்லையா என்பது கூட தெரியாது" என்றாராம். கமலஹாசனுடன் இணைந்து பாடிய அத்தனை பாடல்களும் ஹிட்!!

துணிச்சல்

துணிச்சல்

"இந்தியக் கலைஞர்களே விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். தென்னிந்திய கலைஞர்கள் புறக்கணிக்கப்படுவது வருத்தம் அளிக்கிறது. இதனால் எனக்குக் கொடுக்கப்பட பத்மபூஷன் விருதை வாங்க மாட்டேன்" என்று 2013ம் ஆண்டு அறிவித்த ஜானகியின் துணிச்சல் எத்தனை பேருக்கு வரும் என தெரியவில்லை. தென்னிந்திய கலைஞர்களுக்கு இழைக்கப்படும் மறைமுக அநீதி மற்றும் அந்நியப்படுத்துதலை கண்டித்து, தமது விருதினை தூக்கியடித்த இந்த இசைகுயிலின் கோபம் நியாயமே!!

 நீடூடி வாழ்க

நீடூடி வாழ்க

பாடுவதில் இருந்து என்றோ விலகி விட்டார் ஜானகி.. ஜானகியின் குரலை இனி கேட்க முடியவில்லை என்ற வருத்தம் ஒரு பக்கம் இருந்தாலும், அவர் பாடிய பாடல்களை கேட்டு முடிக்கவே நமக்கு ஆயுசு பத்தாதே என நினைக்கும்போது மனசு சிலிர்க்கிறது... எஸ்.எம்.எஸ் தொடங்கி, ரகுமான், அனிருத் வரை நெடிய பயணத்தை இனிமையாக முடித்து கொடுத்துள்ளார் ஜானகி... இயற்கையை வணங்கக்கூடிய குரல் இந்த குரல் காலங்கள் கடந்தாலும் நம்மைவிட்டு துளியும் நீங்காது.. கரையாது.. குறையாது!! எஸ்.ஜானகி ஆரோக்கியத்துடன் நீடூடி வாழ வேண்டும் என்பதே அவரது இசை அடிமைகள் ஒவ்வொருவரின் நெஞ்சார்ந்த விருப்பம்!!!

English summary
South India celebrates the birth day of singer S Janaki
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X