தமிழகம் பற்ற வைத்த திராவிடம்.. தெலுங்கானா, கர்நாடகாவில் அரசியல் பெருந்தலைகள் கடும் மோதல்!
தமிழகம் பற்ற வைத்த திராவிடம் எனு பெருநெருப்பு.. தெலுங்கானா, கர்நாடகாவில் அரசியல் பெருந்தலைகள் கடும் மோதல்!
சென்னை: தமிழகம் பற்ற வைத்த திராவிடம், திராவிட மாடல் என்கிற சிந்தனைகள் இப்போது கர்நாடகா, தெலுங்கானாவில் அரசியல் தலைவர்களிடையே பெரும் விவாதத்தை கிளப்பிவிட்டிருக்கிறது.
தமிழகத்தில் கடந்த ஆண்டு திமுக ஆட்சி பதவியேற்றது முதல் திராவிட மாடல் அரசு என்கிற சொல் பயன்படுத்தப்பட்டு வருகிறது அதேபோல் மத்திய அரசை ஒன்றிய அரசு என்றே முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

முதல்வர்பேச்சு
சென்னையில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி முன்னிலையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், திராவிட மாடல் அரசு என்றால் என்ன என தமிழிலும் ஆங்கிலத்திலுமாக விவரித்திருந்தார். அப்போது, தமிழ்நாட்டின் வளர்ச்சியானது பொருளாதாரம் சார்ந்தது மட்டுமல்ல; சமூகநீதி, பெண்கள் முன்னேற்றம், சமத்துவம் போன்ற அனைத்தையும் உள்ளடக்கியது தான் தமிழ்நாட்டின் வளர்ச்சி. தமிழ்நாட்டின் வளர்ச்சியே திராவிட மாடலாகும். அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிதான் தான் திராவிட மாடல் ஆட்சி என கூறியிருந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். முதல்வரின் இந்த திராவிட மாடல் விளக்கம் பெரும் வரவேற்பை பெற்றது. அத்துடன் திராவிட மாடல் குறித்த விவாதங்களும் நடைபெற்று வருகின்றன.

சித்தராமையா சீற்றம்
இப்போது திராவிட மாடல், திராவிடம் குறித்த விவாதங்கள் மீண்டும் அண்டை மாநிலங்களிலும் களைகட்டியிருக்கிறது. கர்நாடகா முன்னாள் முதல்வர் சித்தராமையா நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், ஆர்.எஸ்.எஸ். திராவிடர்களா? அவர்கள் ஆரியர்கள். அவர்கள் இந்தியர்களா?. திராவிடர்கள் தான் இந்திய நாட்டின் பூர்வ குடிகள். ஆகையால் நாட்டின் வரலாற்றை யாரும் கிளறி பார்க்க கூடாது. அம்பேத்கர், வரலாறு தெரியாதவர்களால் எதிர்காலத்தை வடிவமைக்க முடியாது என்று கூறினார். உண்மையான வரலாறு குறித்து ஆர்.எஸ்.எஸ். அமைப்பினருக்கு பயம் உள்ளது. உண்மையான வரலாற்றை உழைக்கும் வர்க்கத்தினர், திராவிடர்கள் தெரிந்து கொண்டால் என்ன ஆகும் என்பது ஆர்.எஸ்.எஸ்.அமைப்பினருக்கு தெரியும். அதனால் தான் வரலாற்றை திரிக்க பார்க்கிறார்கள் என கூறியிருந்தார்.

பாஜக கண்டனம்
சித்தராமையாவின் இந்த கருத்துக்கு பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை இது குறித்து கூறுகையில் ,சித்தராமையா ஆரியரா? திராவிடரா? இதற்கு முதலில் அவர் பதில் சொல்ல வேண்டும் என்றார். முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா கூறுகையில், சித்தராமையா நாடோடி. சோனியா காந்தியை திருப்திப்படுத்த இப்படி பேசுகிறார். ஆர்.எஸ்.எஸ். நாட்டிற்கு சேவையாற்றும், தேசபக்தியை வளர்க்கும் அமைப்பு என்றார். இப்போது சித்தாரமையா ஆரியம்- திராவிடத்தை தொடர்ந்து, ஆர்.எஸ்.எஸ். இயக்கம், பாஜகவில் உள்ளவர்கள்தான் இந்துக்களா? இந்து பெற்றோருக்கு பிறந்தவர்கள் இந்துக்கள் இல்லையா? ஆரியர்களின் பூர்வோத்திரம் எது? என மீண்டும் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஓவைசி கருத்து
இதனைத் தொடர்ந்து தெலுங்கானாவிலும் ஆரியம்- திராவிடம் விவகாரம் பேசுபொருளாகி இருக்கிறது. மஜ்லிஸ் கட்சியின் தலைவரும் எம்.பி.யுமான ஓவைசி, இந்தியா என்பது திராவிடர்களுக்கும் ஆதி குடிமக்களுக்குமே சொந்தமானது; பாஜக, ஆர்.எஸ்.எஸ். ஆகியவற்றின் சித்தாந்தங்கள் முகலாயர் ஆட்சிக்குப் பின்னர் வந்தவை. இந்த தேசம் என்பது மோடிக்கும் அமித்ஷாவுக்கும் சொந்தமானது அல்ல என்றார். தமிழகத்தில் திராவிடம் என்பது பல நூற்றாண்டு சித்தாந்தம்; கடந்த ஒரு நூற்றாண்டு அரசியல் சித்தாந்தம்; திராவிட அரசுகள் என்பது அரை நூற்றாண்டுகால வரலாறு. திராவிடத்தின் தேவையை ஆரியத்தின் எதிர்ப்பை காலந்தோறும் தமிழ் நிலம் முன்வைத்து வருகிறது. இப்போது தென்னிந்திய நிலமும் வலுவாக ஆரியர் எதிர்ப்பு நோக்கி பயணிக்கிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.