இபிஎஸ் இடத்துக்கு வர எஸ்.பி.வேலுமணி முயற்சி.. ஓபிஎஸ் டீம் பகீர் குற்றச்சாட்டு.. உருவான புதிய புயல்!
சென்னை: எடப்பாடி பழனிசாமி இடத்திற்கு எஸ்.பி.வேலுமணி மற்றும் தங்கமணி ஆகியோர் முயற்சிப்பதாக ஓபிஎஸ் ஆதரவாளரான கொளத்தூர் கிருஷ்ண மூர்த்தி குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழ்நாட்டில் ராணுவ கட்டுப்பாடு கொண்ட இயக்கம் என்று கூறப்படும் அதிமுகவில், இப்போது ஒற்றைத் தலைமை விவகாரம் உச்சத்தை எட்டியுள்ளது. ஒற்றை தலைமை விவகாரத்தில் அதிமுக தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் யாருக்கு அதிக ஆதரவு இருக்கிறது என்று எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே கடந்த ஒருவாரமாக மிகப்பெரிய பலப்பரீட்சை நடந்து வருகிறது. இதில் எடப்பாடி பழனிசாமி எட்டி பிடிக்க முடியாத வேகத்தில் முன்னேறி செல்கிறார்.

அதிமுகவின் அனைத்து பிரிவுகளிலும் எடப்பாடி பழனிசாமிக்கு அதிக ஆதரவு இருக்கிறது. ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த மாவட்டமான தேனி மாவட்ட நிர்வாகிகள் கூட எடப்பாடி பழனிசாமியை தான் ஆதரிக்கிறார்கள். அ.தி.மு.க. மூத்த தலைவர்களில் பெரும்பாலானவர்கள் இதுவரை தங்களது நிலைப்பாட்டை வெளியில் சொல்லாமல் இருந்தனர். ஆனால் நேற்று முதல் அ.தி.மு.க. மூத்த நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகிறார்கள். இன்று 9 வது நாளாக எடப்பாடி பழனிசாமியும் ஓ. பன்னீர் செல்வமும் தனித்தனியாக தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே ஓபிஎஸ்-க்கு ஆதரவாக இருந்த ராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் முனியசாமி மற்றும் தென் கிழக்கு, தென்சென்னை மாவட்டச் செயலாளர் அசோக் ஆகியோர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர். இதற்கு ஓபிஎஸ் தரப்பில் ஒரே நிலைப்பாட்டில் இல்லை என்று கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து ஓபிஎஸ் உடன் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டிருந்த மைத்ரேயன் இபிஎஸ் பக்கம் வந்துள்ளார். இதனால் ஓபிஎஸ் ஆதரவு மாவட்டச் செயலாளர்களின் எண்ணிக்கை 6ஆக குறைந்துள்ளது.
இதனிடையே பொதுக்குழு கூட்டத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ள நிலையில், ஓபிஎஸ் ஆதரவாளரான கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, கட்சியில் யாருக்கு ஓபிஎஸ் துரோகம் செய்தார். ஓபிஎஸ் அணியில் இருந்து இப்போது இபிஎஸ் பக்கம் சென்றுள்ளவர்கள், நிச்சயம் மீண்டும் இங்கு வருவார்கள். கட்சியை ஓபிஎஸ் வென்றெடுப்பார் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து முதலமைச்சர் பதவிக்காக எஸ்.பி.வேலுமணி, எடப்பாடி பழனிசாமியுடன் மூன்று மாதங்கள் பேசாமல் இருந்தவர். இதனால் வரும் காலத்தில் எடப்பாடி பழனிசாமி இடத்திற்கு வர எஸ்.பி.வேலுமணியும், தங்கமணியும் முயற்சிப்பர். ஓபிஎஸ் ஆதரவு நிர்வாகிகளை பணம் கொடுத்து இபிஎஸ் தரப்பினர் இழுத்து வருகின்றனர். நாளை பொதுக்குழு கூட்டம் நடைபெற்றால், நிச்சயம் அனைவரும் பங்கேற்போம் என்று தெரிவித்தார்.
இபிஎஸ் கேம்பிற்கு தாவிய ஓபிஎஸ் ஆதரவாளர் வேளச்சேரி அசோக்.. அதிமுகவில் அடுத்தடுத்த ட்விஸ்ட்!