• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

பாலு சார்.. நிலாவை பார்க்கும்பொதேல்லாம் உங்கள் ஞாபகம் வரும்.. ஆனால் நீங்க இருக்க மாட்டீங்களே!

|

சென்னை: "நான் பாடும் மவுன ராகம் கேட்கவில்லையா?" என்ற குரல் எங்கோ தொலைவில் ஒலிப்பது கேட்டுக் கொண்டே இருக்கிறது.

"எஸ்பி பாலு" என்று வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் இவரை அழைப்பார்கள்... "பாலு" என்று இசைத்துறை நண்பர்கள் கூப்பிடுவார்கள்... "பாலுகாரு" என்று ஆந்திர மக்கள் சொல்லுவார்கள்.. நமக்கு ஆல்டைம் "பாடும் நிலா பாலு"தான்!!

சாதனையின் உச்சத்திற்கும் மேல் ஏதாவது இருக்குமா என்று உலகில் நாம் தேடினால், அங்கே இந்த ஐஸ்கிரீம் குரல்காரர் ஒய்யாரமாக உட்கார்ந்து கொண்டிருப்பார். வாழ்நாளெல்லாம் ராகமும் தாளமுமாக பின்னி கிடந்தவர்.. சரணமும், பல்லவியுமாக நடமாடி கொண்டிருந்தவர்.. பாட்டும், நோட்டுமாக நன்றிகளை செலுத்தி கொண்டே இருந்தவர்!

"தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்".. சொன்னபடி திரும்பி வாருங்கள் எஸ்பிபி சார்!

கண்ணீர்

கண்ணீர்

பாலு சாதனை, குரல்வளம், விருதுகள், பட்டங்கள், பாடல்கள் எல்லாமே இந்திய மக்கள் அறிந்த ஒன்றுதான்.. ஆனாலும், இசையை விரும்பாத ஒரு சாமான்யனும் இன்று கண்ணீர் சிந்த காரணம், இவரது குணம்தான்!! மிகப்பெரிய அரிய குணநலன்களையும், பழக்கவழக்கங்களையும் தனக்குள் பொதித்து வைத்து கிடந்தவர் எஸ்பிபி!

உதவிகள்

உதவிகள்

குறிப்பாக, பெரிய ரசிகர் என்றாலும் சரி, சிறிய ரசிகர் என்றாலும் சரி, யார் ஆட்டோகிராஃப் கேட்டாலும் முகம் சுளிக்காமல் போட்டு கொடுப்பாராம்.. அடிப்படையிலேயே இளகிய மனம் கொண்டவர், தம்மிடம் யார் உதவி என்று யாரும் கேட்டு வந்தாலும் மறுக்காமல் தம்மால் முடிந்த உதவியை செய்து கொடுப்பார்.. யாரையும் வெறுங்கையால் திருப்பி அனுப்பியது இல்லையாம்.

 கட்டிப்பிடிச்சிக்கோ

கட்டிப்பிடிச்சிக்கோ

ஒருமுறை திருப்பதி கோயிலுக்கு எஸ்பிபி சென்றார்.. அவரை நேரில் பார்த்ததும் தலைகால் புரியாத ரசிகர் ஒருவர் திடீரென்று அவர் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்க முயன்றிருக்கிறார்.. அதை பார்த்த எஸ்பிபி, அவரை தடுத்து நிறுத்தி "நானும் உன்னை போல ஒரு மனுஷன்தான்..ப்பா, என் காலில் விழக்கூடாது.. வேணும்னா என்னை கட்டிப்பிடிச்சிக்கோ" என்று சொல்லவும் திக்குமுக்காடி போய்விட்டாராம் அந்த ரசிகர்!

கச்சேரி

கச்சேரி

அதுபோலவே, வெளியூருக்கு ரிக்கார்டிங் போனாலும் சரி, கச்சேரிக்கு போனாலும் சரி, தன்னுடைய டிரைவர், பிஏ-க்களை தன்னுடன்தான் சேர்ந்து சாப்பிடணும் என்று சொல்லிவிடுவாராம்.. யாரையும் காயப்படுத்தி பேசியதில்லை எஸ்பிபி.. அப்படி அவர் பேசி நாம் இதுவரை பார்த்ததும் இல்லை. இசை என்றால் இவர் சரண்டர்தான்.. சின்ன குழந்தைகள், வயதில் குறைந்தவர்கள் என்றெல்லாம் பார்க்க மாட்டார்.. சாரீரத்தை கேட்டாலே, சரீரத்துடன் சாஷ்டாங்கமாக விழுந்துவிடுவார்.

 குழந்தைகள்

குழந்தைகள்

பெரும்பாலும் ஜோக்தான்.. அதிலும் குழந்தைகளுடன் சேர்ந்து கொண்டும் அவர்களுக்கு நிகராகவே இவரும் டைமிங்குடன் பேசுவார்.. பாட்டு பாடும் பிள்ளைகளை மனசார ஆசீர்வதிப்பார்.. நிறைய என்கரேஜ் பண்ணுவார்.. பயமின்றி பாடுவதற்கு ஊக்கம் தருவார்.. டிப்ஸ்களை சொல்லி தருவார்.

புகழாரம்

புகழாரம்

தன்னுடைய இசை ஆசான்களை பற்றி வாய் நிறைய புகழ்ந்து கொண்டே இருப்பது இவர் வழக்கம்.. எல்லா பெரிய இசை ஜாம்பவான்களின் சிறப்பை பற்றி சொல்லி கொண்டேஇருப்பார்.. ஒவ்வொரு மியூசிக் டைரக்டர்களிடம் உள்ள பிளஸ் பாயிண்ட்டுகளை வெகு நேர்த்தியாகவும், ரசிக்கும்படியாகவும், சொல்வதில் எஸ்பிபிக்கு நிகர் அவரே. எம்எஸ்வி பற்றியோ, இளையராஜா பற்றியோ இவர் பேசும் போது, சிலசமயம் உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிவிடும் நிகழ்வுகளும் நடந்ததுண்டு.

 செல்லப்பிராணி

செல்லப்பிராணி

ஜீவகாருண்யம் மிக்கவர் எஸ்பிபி.. வருஷந்தோறும் மாட்டுப் பொங்கல் அன்று சென்னை அருகே அலமாதியில் உள்ள அவரது பண்ணை வீட்டில் மாடுகள் மற்றும் செல்லப் பிராணிகளுடன் அன்றைய நாள் முழுவதும் நேரத்தை செலவிடுவார்.. இந்த ஒருநாளில் மட்டும் செல்போனை தொடவே மாட்டாராம்.. அந்த அளவுக்கு அந்த ஜீவன்களிடம் பேசி கொண்டும், பாடிக் கொண்டும் இருப்பாராம்.

டிராயிங்

டிராயிங்

இத்தனை உயரத்துக்கு இவர் சென்றிருந்தாலும், சினிமாக்காரகள் யாரும் இதுவரை வீட்டுக்கு வந்தது இல்லையாம்.. அதாவது வீடு வேறு, தொழில் வேறு என்பதை தனியாக வகுத்து வைத்து பயணித்து வந்துள்ளார்.. நன்றாக டிராயிங் வரைவாராம்.. நன்றாக புல்லாங்குழல் வாசிப்பாராம்.. வழக்கமாக நைட் நேரத்தில் புல்லாங்குழல் சத்தம் கேட்டாலே அது எஸ்பிபிதான் வாசிப்பார் என்று அர்த்தம்.

கமல்

கமல்

இவர் மிகச்சிறந்த டப்பிங் ஆர்ட்டிஸ்ட்.. கமலின் அனைத்து படங்களுக்குமே தெலுங்கில் இவர்தான் டப்பிங்.. கிட்டத்தட்ட கமல் போலவே இவர் டப்பிங் இருக்கும்.. கமல் நடித்த தசாவதாரம் திரைப்படத்தை தெலுங்கில் மாற்றிய போது மொத்தமுள்ள பத்து கேரக்டர்களில் ஏழு கதாபாத்திரங்களுக்கு டப்பிங் தந்துள்ளார்.. தெலுங்கு படஉலகில் நிறைய பேருக்கு எஸ்பிபி குரல்தான் கமலின் குரல் என்று இன்னமும் நினைத்து கொண்டிருக்கிறார்கள்.

 ராப் பாடல்கள்

ராப் பாடல்கள்

நன்றாக பாட்டும் எழுதுவார்.. நிறைய தெலுங்கு "ராப்" பாடல்களுக்கு எழுதியிருக்கிறார்.. யாராவது பொருத்தமான கவிஞர்கள் அமையாவிட்டால், "பேசாமல் நீங்களே எழுதிடுங்களேன் பாலு சார்" என்பார்கள் மியூசிக் டைரக்டர்கள்!

பணப்பற்றாக்குறை

பணப்பற்றாக்குறை

யாராவது தயாரிப்பாளர்கள், பணப்பற்றாக்குறையால் எஸ்பிபியை பாட வைக்க முடியாமல் போனால், கங்கை அமரனிடம் சொல்வார்களாம்.. அவரும் இவரிடம் "பாவம்..டா.. பாடி குடுத்துடு" என்று கங்கை அமரன் கேட்டால் உடனே பாடி தந்துவிடுவாராம்.. ஆதரவற்றோர், ஏழைகளுக்கு ஒரு பவுண்டேஷன் வைத்து தமிழகத்தில் நடத்தி வருகிறார்.. அவர் பிறந்த ஊரிலும் இதை நடத்தி வருகிறார்.. நிறைய பேரை படிக்க வைத்தவர்.

 மண்ணில் இந்த காதல்

மண்ணில் இந்த காதல்

'இத்தனை கனமான உடலை வைத்துக்கொண்டு தம் கட்டி, 'மண்ணில் இந்தக் காதலின்றி...', 'சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்..." பாடல்களை எப்படி பாடினார் என்பதே நமக்கு இன்னும் ஆச்சரியமாக இருக்கிறது... கண்மணியே காதல் என்பது கற்பனையோ என்ற பாட்டிலேயே மூச்சின் பயிற்சிகள் தென்பட்டன.. இந்த பாடல்களில் வார்த்தைகளை உச்சரிக்கும் விதம் மட்டுமின்றி, அந்த வார்த்தைகளின் ஜீவனையும், அதன் அடிநாதத்தையும், சாராம்சம் குறையாமல், ரசம் குறையாமல் நமக்குள் லாவகமாக கடத்தியிருந்தார்.

 ஹை-பிச்

ஹை-பிச்

இறுதிவரை வெரைட்டி வெரைட்டி அலப்பறையாக தந்து கொண்டே இருந்தார்.. சாதாரணமாக குரலை மாற்றி பாடிவிடலாம்.. ஆனால், ஹை-பிச்சில் குரலை மாற்றி பாடுவது இவரது ஸ்பெஷல்.. இப்படி பாடுவது ரொம்ப கஷ்டம்.. பாடிக் கொண்டே வந்து திடீரென க்ளுக்கென்று ஒரு சிரிப்பு சிரிப்பார்.. டக்கென முனகல் சத்தமும் மெல்லமாய் எழுந்து அடங்கும்!

இயற்கை

இயற்கை

இவர் பாடாத உணர்வே இல்லை.. பாடாத காதலே இல்லை.. பாடாத தமிழே இல்லை.. பின்னணியில் முன்னணியை ஒற்றை ஆளாக இத்தனை வருடம் நம்மை ஆண்டவர்... சங்கராபரணம் ஆலாபனைகளும், சலங்கை ஒலியின் ஜதிகளும் இவருக்கு தண்ணீர் பட்ட பாடு.. அவ்வளவையும் நமக்குள் கொடுத்து எடுத்ததுதான் இந்த குரல் தான்!

 ஸ்பரிசம்

ஸ்பரிசம்

எஸ்பிபியின் குரல் இயற்கையின் ஒரு பகுதி.. இசையின் மறுபகுதி.. சாமான்ய ரசிகன் வாழ்வில் கலந்த ஒரு அத்தியாயம்... ஒவ்வொரு பாட்டும் தனக்காகவே பாடப்பட்டதைபோல ஒவ்வொருவரையும் உணர வைத்ததே இவர் ஸ்பெஷல்.. அந்த உணர்வு அனைவரின் ஸ்பரிசத்தையும் தொட்டு சிலிர்க்க வைத்தது!! இனிமையும், களிப்பும் காதலும் ததும்பி நிறையும் எஸ்பிபியின் குரல், தமிழ் சினிமாவின் கம்பீரமான அடையாளம்!

நிலாவை பார்க்கும்பொதேல்லாம் உங்கள் ஞாபகம் எங்களுக்கு வராமல் இருக்காது.. இனி அந்த நிலாவை எந்த இசைவானில் போய் நாங்கள் தேடுவோம் எஸ்பிபி சார்?

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

 
 
 
English summary
SPB will be missing for long
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X