ஐய்யப்ப பக்தர்கள் சபரிமலைக்கு செல்ல தமிழகத்தில் இருந்து ஜன.16 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்
சென்னை: சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காக தமிழகத்தில் இருந்து தினமும் 64 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். இன்று வெள்ளிக்கிழமை முதல் ஜனவரி 16 ஆம் தேதி வரை சென்னை, திருச்சி, மதுரை மற்றும் புதுச்சேரி, கடலூர் ஆகிய இடங்களிலிருந்து பம்பைக்கு, அதி நவீன சொகுசு பேருந்துகள் சிறப்புப் பேருந்துகளாக இயக்கப்படவுள்ளன.
கொரோனா தொற்று பரவல் காரணமாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளில் சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்தது. அதன்படி கடந்த 1 ஆம் தேதி முதல் தமிழகத்திலிருந்து கேரள மாநிலத்திற்கு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, கேரள மாநிலத்தில் மிகவும் பிரசித்திபெற்ற சபரிமலையில் உள்ள ஐய்யப்பன் ஆலயத்திற்கு, ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு ஆகிய திருவிழாக்களின் போது, தமிழகத்திலிருந்து ஐய்யப்ப பக்தர்கள் சென்று வர ஏதுவாக, தமிழகத்தின் முக்கிய நகரங்களிலிருந்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் ஆண்டுதோறும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
சபரிமலை: 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு முன்பதிவு தேவை இல்லை - தேவஸ்தானம் அறிவிப்பு

பம்பைக்கு சிறப்பு பேருந்துகள்
இந்த வருடம் கேரளாவிற்கு இயக்குவதற்கு 64 சிறப்புப் பேருந்துகளுக்கு உரிமம் பெறப்பட்டுள்ளது. இன்று வெள்ளிக்கிழமை முதல் ஜனவரி 16 ஆம் தேதி வரைக்கும், சென்னை, திருச்சி, மதுரை மற்றும் புதுச்சேரி, கடலூர் ஆகிய இடங்களிலிருந்து பம்பைக்கு, அதி நவீன சொகுசு பேருந்துகள் சிறப்புப் பேருந்துகளாக இயக்கப்படவுள்ளன.

கூடுதல் பேருந்துகள்
மேலும் பக்தர்களின் வசதிக்கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் எனவும், 30 நாட்களுக்கு முன்னதாக இச்சிறப்புப் பேருந்துகளுக்கு www.tnstc.in, உள்ளிட்ட தனியார் பேருந்து முன்பதிவு செயலிகள் மூலம் முன்பதிவு செய்துகொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஆன்லைன் மூலம் முன்பதிவு
30 நாட்களுக்கு முன்னதாக சிறப்பு பஸ்களுக்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யலாம். www.tnstc.in, www.redbus.in, www.busindia.com, www.paytm.com, www.makemytrip.com, www.goibgo.com ஆகிய வலைதளங்கள் மூலமாகவும் முன்பதிவு செய்துகொள்ள வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

விபரங்கள் அறிய செல்போன்
மேலும், பேருந்துகளின் விவரம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களுக்கு, 9445014412, 9445014450, 9445014424, 9445014463, மற்றும் 9445014416 ஆகிய கைப்பேசி எண்களைத் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம் எனவும் தமிழ்நாடு அசு விரைவு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.பக்தர்களின் வருகைக்கு ஏற்ப இந்த பஸ்கள் இயக்கப்படும்.