திமுகவை நம்பினோர் ஒரு போதும் கைவிடப்படார்! அடுத்தடுத்து வாய்ப்புகள் வழங்கப்படும்! ஸ்டாலின் சமாதானம்!
சென்னை: திமுகவை நம்பினோர் ஒரு போதும் கைவிடப்படார் என்றும் உண்மையாக உழைப்பவர்களை தாம் கவனத்தில் குறித்து வைத்திருப்பதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அண்மையில் திமுகவில் உள்ள பல்வேறு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமனம் நடைபெற்றுள்ள நிலையில் வாய்ப்பு கிடைக்காதவர்களை சமாதானம் செய்யும் வகையில் அவர் இந்த கடிதத்தை எழுதியுள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதம் வருமாறு;
வேக வேகமாக.. ஆளுநரிடம் எடப்பாடி தந்த ரிப்போர்ட்..

பொல்லாங்குகள்
''எதிரிகள் நமக்கு எதிராக வேண்டுமென்றே திட்டமிட்டுப் பொல்லாங்குகளையும், பச்சைப் பொய்களையும் பரப்புவார்கள். உண்மைகள் நம் பக்கமே இருப்பதால், அந்தப் பொய்களை நாம் பொடிப்பொடியாக்கித் தூக்கி எறிய வேண்டும். எதிரிகள் நமக்கெதிராக வெற்று வதந்திகளைக் கிளப்புவார்கள்; அவற்றைப் புள்ளிவிவரங்கள் மூலம் அறுத்தெறிய வேண்டும். எதிரிகள் நமக்கெதிராக அவதூறுகளைக் கட்டவிழ்த்து விடுவார்கள்; அவற்றை அடித்து நொறுக்குகின்ற வகையில் நம்மிடம் குவிந்துள்ள சாதனைத் திட்டங்களை முன் வைக்கவேண்டும்.''

ஊடகமாக மாறிட வேண்டும்
''ஊடகங்களையும், சமுக வலைத்தளங்களையும் நமக்கெதிராகத் திருப்பிட முனைவார்கள். ஒவ்வொரு உடன்பிறப்பும் சமூக வலைத்தளங்கள் வாயிலாகவும், தேநீர்க்கடை - திண்ணைப் பிரச்சாரம் மூலமாகவும் கழகக் கொள்கைகளை முழங்கும் ஊடகமாக மாறிட வேண்டும். உழைப்புக்கேற்ற வாய்ப்பு, உருவாகும் வாய்ப்புக்கேற்ற பொறுப்பு என ஒவ்வொரு நிர்வாகியின் தகுதியையும் கவனத்திலும் கருத்திலும் கொண்டே இந்த நியமனங்கள் நடைபெற்றுள்ளன.''

ஒருபோதும் கைவிடப்படார்
''இயன்ற அளவு கழகத்தின் மூத்தவர்கள் - இளையவர்கள் என அனைத்துத் தரப்பினரும் வேறுபாடு சிறிதுமின்றிப் பங்கேற்கும் வகையில் பொறுப்புகள் பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளன. இதில் ஒரு சிலருக்கு வாய்ப்பின்றிப் போயிருக்கலாம். கிடைத்திருக்கும் வாய்ப்பு போதவில்லை என ஒரு சிலர் நினைக்கலாம். கழகத்தை நம்பினோர் ஒருபோதும் கைவிடப்படார். உண்மையாக உழைப்பவர்களை உங்களில் ஒருவனான நான் என் கவனத்தில் குறித்து வைத்திருக்கிறேன். அடுத்தடுத்த வாய்ப்புகளில் உங்கள் எதிர்பார்ப்புகள் நிச்சயம் நிறைவேறும். நான் இருக்கிறேன் உங்களுக்காக!''

இலக்கு வெற்றி
''உலகக் கோப்பை கால்பந்துப் போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. முந்தைய ஆட்டத்தில் இடம்பெற்ற சில வீரர்கள் அடுத்த ஆட்டத்தில் இடம்பெறாமல் போகலாம். அதற்கடுத்த ஆட்டத்தில் அவர்களுக்கான வாய்ப்புகள் கிடைக்கின்ற சூழல் உருவாகும். சின்னச் சின்ன மாற்றங்கள் இருந்தாலும் அணியின் இலக்கு வெற்றிக் கோப்பையை வெல்வதுதான். கழக அணிகளின் நோக்கமும் அப்படித்தான் இருக்க வேண்டும். நாம் வெல்ல வேண்டிய களம், விளையாட்டுக் களம் அல்ல. கருத்தியல் போர்க்களம்!''

வீடு வீடாக
''கொள்கைகளும் சாதனைகளும்தான் நமக்கு வாளும் கேடயமுமாகும். அதனைத் தமிழ்நாட்டின் குக்கிராமங்கள்வரை வீடு வீடாகக் கொண்டு சேர்க்க வேண்டும். இனப் பகைவர்கள் இங்குள்ள அரசியல் எதிரிகளைப் பயன்படுத்திக் கொண்டு, வஞ்சகச் சூழ்ச்சிகளால் வலை விரித்து தமிழ்நாட்டுக்குள் எப்படியாவது ஊடுருவி விடலாம் என ஏங்கினாலும், அவர்களுக்குக் கிஞ்சித்தும் இங்கே இடமே இல்லை என்பதை நிரூபிக்கக் கூடிய ஆற்றல்மிக்க படையாக கழக அணிகள் செயல்பட வாழ்த்துகிறேன்!''