சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தேசிய இனங்கள்... இந்திய அளவில் ’தமிழ்நாடு வியூகம்’.. ஸ்டாலினின் அடடே கடிதம்!

Google Oneindia Tamil News

Recommended Video

    இந்திய அளவில் ’தமிழ்நாடு வியூகம்’.. ஸ்டாலினின் கடிதம்!

    சென்னை: இந்தி பேசும் மாநிலங்கள்தான் இந்தியா என கருதாமல் அனைத்து தேசிய இனங்களையும் மத்திய அரசு அரவணைத்துச் செல்ல வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

    திமுகவினருக்கு ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:

    வரலாற்றுச் சிறப்புமிக்க - நாடும் ஏடும் போற்றும் நல்ல மகத்தான வெற்றியைத் தமிழ்நாட்டு மக்கள் தி.மு.கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு மனமுவந்து வழங்கியிருக்கிறார்கள். திராவிட இயக்கத்தால், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா தலைவர் கலைஞர் ஆகியோரால் பண்படுத்தப்பட்டு - பக்குவப்படுத்தப்பட்ட தமிழ்நாட்டில் மதச்சார்பற்ற அணுகுமுறைக்கு மக்கள் மத்தியில் சீரிய இடம் உருவாக்கப்பட்டிருப்பது இந்திய அளவில் போற்றுதலுக்கு உரிய பொருள் ஆகியிருக்கிறது. ஒட்டுமொத்த நாட்டின் கவனத்தையும் தி.மு.க. கூட்டணி ஈர்த்திருக்கிறது. அத்தகைய மாபெரும் வெற்றியை அடைந்ததற்கு, தொடர்ந்து நல்லிதயங்களின் வாழ்த்துகள் பொழிந்த வண்ணம் உள்ளன. தோழமைக் கட்சிகளின் மதிப்புமிகு தலைவர்கள் கழகத் தலைமையகமான அண்ணா அறிவாலயத்திற்கு அன்புடன் வருகை தந்து வாழ்த்துகளைப் பரிமாறி மனமகிழ்ச்சி கொள்கிறார்கள்.

    தயாளுஅம்மாளிடம் ஆசி.. மெரினாவில் பேரணி.. நினைவிடங்களில் மரியாதை.. படு ஸ்பீடில் ஸ்டாலின்! தயாளுஅம்மாளிடம் ஆசி.. மெரினாவில் பேரணி.. நினைவிடங்களில் மரியாதை.. படு ஸ்பீடில் ஸ்டாலின்!

    வலுவான கூட்டணி

    வலுவான கூட்டணி

    ஊடகங்களிடம் வெற்றிச் செய்தியினைப் பகிர்ந்துகொள்ளும் தோழமைக் கட்சித் தலைவர்களும் ஆதரவு அமைப்புகளின் தலைவர்களும், "தி.மு.க.வின் தலைவர் மு.க.ஸ்டாலின் வகுத்த வியூகங்களே இந்த மகத்தான வெற்றிக்குக் காரணம். தோழமைக் கட்சிகளை உணர்வுப்பூர்வமாக ஒருங்கிணைத்து, வலுவான கூட்டணியை அமைத்து, மோடிக்கு எதிரான வெற்றியைப் பெறுவதற்கு இந்தியாவிலேயே முதன்மையானவர் என்பதை ஸ்டாலின் நிரூபித்திருக்கிறார். தனது மாநிலத்திற்குள் பா.ஜ.க. நுழைய முடியாதபடி தடுத்து, நிறுத்திய ஒரு மாநிலக் கட்சித் தலைவர் ஸ்டாலின் மட்டும்தான். தமிழ்நாட்டில் திராவிட இயக்கமும் அதன் கொள்கைகளும் வலுவாக இருப்பதால் இந்த வெற்றி கிடைத்துள்ளது" என மனம்திறந்து தெரிவித்திருக்கிறார்கள்.

    திராவிட இயக்கத்தை அழிக்க முடியாது

    திராவிட இயக்கத்தை அழிக்க முடியாது

    ஆங்கில ஊடகங்கள் - அரசியல் நோக்கர்கள் என அனைத்துத் தரப்பிலும் இதே கருத்து எங்கணும் எதிரொலிக்கிறது. திராவிட இயக்கத்தை அழிக்க, எத்தனை வித்தைகள் செய்தாலும் எத்தனை பேர் குட்டிக்கரணம் போட்டாலும் இங்கே எடுபடாது என்பதே தமிழ்நாட்டு மக்களின் தனிப் பெரும் தீர்ப்பு. தமிழகம்-புதுச்சேரியில் தி.மு.கழகமும் கூட்டணியும் 38 மக்களவைத் தொகுதிகளை வென்றிருக்கிறது. 22 சட்டப்பேரவை இடைத்தேர்தல் நடைபெற்ற தொகுதிகளில் 13 இடங்களைக் கழகம் கைப்பற்றியுள்ளது.

    3-வாது பெரிய கட்சி

    3-வாது பெரிய கட்சி

    நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சி என்ற பெருமையையும் தி.மு.க பெறுகிறது. 1971, 2004 நாடாளுமன்றத் தேர்தல்களில் கழகம் பெற்ற வெற்றிக்கு இணையான வெற்றி இது. சட்டமன்றத்தில் நம்முடைய பலம் 101ஆக உயர்கிறது. அ.தி.மு.க.வசம் இருந்த 12 தொகுதிகளை இடைத்தேர்தலில் தி.மு.க. கைப்பற்றியிருப்பது தமிழ்நாட்டின் இடைத்தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத சாதனை அளவாகும். இவற்றை செரிமானம் செய்துகொள்ள முடியாத ஆட்சியாளர்களும்-அரசியல் எதிரிகளும், ‘தி.மு.க.வின் நோக்கம் நிறைவேறவில்லை' என தங்கள் புண்ணுக்குத் தாங்களே புணுகு தடவி புளகாங்கிதம் கொள்ளும் வேலையில் ஈடுபட்டுள்ளார்கள். அவர்களின் மிகவும் தற்காலிக இன்பத்திற்குத் தடையாக இருக்க நான் விரும்பவில்லை.

    கருணாநிதி இல்லாததால் வெற்றிடமா?

    கருணாநிதி இல்லாததால் வெற்றிடமா?

    நமக்கான பெரும்பணிகள் நிறைய காத்துக் கொண்டு இருக்கின்றன.

    மக்கள் நம் மீது அசையா நம்பிக்கை வைத்து அளித்துள்ள இந்த மகத்தான வெற்றிகளுக்காகச் சூட்டப்படும் புகழ் மாலைகள் அனைத்தும்,நம்மை நாளும் வளர்த்தெடுத்து - நல்ல வழிகாட்டி -குறைவின்றி நெறிப்படுத்திய தலைவர் கலைஞர் அவர்களுக்கு உரியவை. அவரிடம் நான் கற்றுக்கொண்டது, உழைப்பு, ஓயாத உழைப்பு. அதனால்தான் தலைவர் கலைஞர் அவர்களும், "ஸ்டாலின் என்றால் உழைப்பு.. உழைப்பு..உழைப்பு.." என்று மகிழ்ந்து பாராட்டினார். அதனைவிட பெரிய பதவியோ பட்டமோ வேறேதும் இருக்க முடியாது. தலைவர் கலைஞர் இல்லாத நிலையில், கழகத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றுச் சுமக்க வேண்டிய கடுமையான பணியுடன், தலைவர் இல்லாத காரணத்தால், தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுவிட்டதாகவும்-கழகத்திற்கு இனி எதிர்காலம் இல்லை என்றும் -வெற்றிடத்தை நிரப்புவதற்காக அவர் வருவார் இவர் வருவார் என்றும் சூழ்ச்சி எண்ணத்துடன் திட்டமிட்டு தி.மு.க.வை அழிக்க நினைத்த திரிபுவாத சக்திகளுக்கு ஜனநாயகரீதியாக கொடுக்கப்பட்ட தக்க பதிலடிதான் மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தல் களங்களில் நமக்கு மக்கள் அளித்துள்ள இந்த அருமையான வெற்றி.

    பொய் நெல், புரளி சோறு

    பொய் நெல், புரளி சோறு

    பொய் நெல்லைக் குத்தி, புரளிச் சோறு பொங்க நினைத்தவர்களை, வாக்கு எனும் அகப்பைக்கரண்டியால் வாக்காளர்கள் துரத்தியடித்திருக்கிறார்கள். என்றும் தங்கள் நம்பிக்கைக்குரிய இயக்கம் - எப்போதும் நம்பிக்கையைக் காப்பாற்றும் இயக்கம் தி.மு.கழகம்தான் என்பதை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றி பெற வைத்து நிரூபித்திருக்கிறார்கள். பெருவெற்றியையும் படுதோல்விகளையும் சமமாகவே பாவித்து எதிர்கொண்டு எத்தகைய நெருக்கடி நெருப்பாற்றிலும் எதிர்நீச்சல் போட்டு கரையேறும் அரிய ஆற்றல் கொண்டது தி.மு.கழகம். அதனால்தான், அதிகாரத்தில் இருக்கும் ஆட்சியாளர்களின் கூட்டணியை எதிர்த்து, தேர்தல் ஆணையத்தின் ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகளை எதிர்கொண்டு, மதநல்லிணக்கம்-சமூகநீதி- அனைவர்க்குமான வளம், நலன் ஆகிய கொள்கைகளில் உறுதியுடன் நின்று, மக்களை மட்டுமே நம்பி அவர்களின் நல்லெண்ணத்தைச் சார்ந்து நமது கூட்டணியின் இலட்சியப் பயணம் தொடர்ந்தது. மத்திய-மாநில ஆட்சியாளர்களால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு துன்பத்தில் உழலும் தமிழ்நாட்டு மக்கள் நம்மை நம்பினர். பொதுக்கூட்டங்களில், நடைப்பயணங்களில், திண்ணைப் பிரச்சாரத்தில், தேநீர்க்கடை உரையாடலில் என நான் சென்ற இடமெல்லாம் தங்கள் வீட்டுப் பிள்ளையாக - சகோதரனாக - குடும்பத்தில் ஒருவனாகக் கருதி ஓடோடி வந்து அரவணைத்து அன்பைப் பொழிந்தனர். ஆதரவை உறுதி செய்தனர்.

    அவதூறுகள்

    அவதூறுகள்

    தமிழ்நாட்டு மக்களின் வற்றாத அன்பும் வாஞ்சைமிகு ஆதரவுமே வாக்குகளாக மாறி இந்த வெற்றியைத் தந்துள்ளது. மகத்தான இந்த வெற்றிக்கு நிச்சயமாக நான் மட்டுமே சொந்தம் கொண்டாட முடியாது. நம்மை ஆளாக்கிய தலைவர் கலைஞர் அவர்கள் வகுத்தளித்த வழியில், தேர்தல் களப் பணியில் தேனீக்களை மிஞ்சும் சுறுசுறுப்புடன் ஓயாமல் உழைத்த கழகத்தின் அனைத்து நிர்வாகிகளும் தொண்டர்களாம் அன்பு உடன்பிறப்புகளும் இல்லாமல், இந்த வெற்றி இந்த அளவுக்குச் சாத்தியமாகியிருக்காது. ஆட்சியாளர்களின் அதிகார வரம்புமீறல்களை எதிர்கொண்டு, சரியான - தெளிவான - உறுதியான வியூகத்தை வகுத்து, அதனைக் கிஞ்சிற்றும் பிசகாமல் களத்தில் செயல்படுத்திய கழகத்தினரும் தோழமைக் கட்சியினரும் இந்த வெற்றியின் முக்கிய பங்குதாரர்கள். அறிவியல் வளர்ச்சி பெற்ற இந்த நவீன உலகத்தில், தேர்தல் களத்திற்கு இணையாக சமூக வலைத்தளங்கள் இடையறாமல் செயலாற்றிக் கொண்டிருக்கும் நிலையில், அதில் நமக்கு எதிராகப் பரப்பப்பட்ட வஞ்சக அவதூறுகளை நஞ்சினும் கொடிய அக்கிரமங்களை முறியடித்து, கழகத்தின் சாதனைகளையும் அதனால் தமிழ்நாடு பெற்ற நன்மைகளையும் உடனுக்குடன் ஆழமாகப் பதிவு செய்து, எதிரிகளின் முகத்தில் கரிபூசிய கழகத்தின் தகவல் தொழில்நுட்ப அணியினரும், எவ்வித எதிர்பார்ப்புமின்றி சமூக வலைத்தளங்களில் கழகத்திற்கு ஆதரவாகச் செயல்பட்டு வருவோரும் வெற்றிப்பாதையை அமைப்பதில் துணை நின்றார்கள்.

    அன்பழகன்

    அன்பழகன்

    ஒட்டுமொத்த ஒருங்கிணைப்புடன் - கொள்கை உறுதியுடன் - தோழமை உணர்வுடன் வகுத்த வியூகங்களும், அவற்றைச் செயல்படுத்துவதில் சுணக்கமின்றி ஆற்றிய சிறப்பான உழைப்புமே இன்று வெற்றியாக மலர்ந்திருக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து, வாக்கு எண்ணிக்கை முடியும்வரை உண்ணாமல் உறங்காமல் ஓய்வு கொள்ளாமல் உழைத்த உடன்பிறப்புகள் அனைவரின் முயற்சியாலும் கிடைத்த இந்த வெற்றியை உச்சி மோந்து மெச்சிப் பாராட்டிட தலைவர் கலைஞர் நம்மிடம் இல்லாதபடி இயற்கை சதி செய்துவிட்டதே என்ற ஏக்கத்துடன், அவரது நினைவிடத்தில், இந்த மகத்தான வெற்றியைக் காணிக்கையாக்குவதே எனது கடமை! தலைவர் கலைஞரின் தலைவர் பேரறிஞர் அண்ணா, அண்ணாவின் தலைவர் தந்தை பெரியார் என திராவிட இயக்கத்தின் முப்பெரும் தலைவர்களின் நினைவிடங்களில் வணக்கம் செலுத்தி, தி.மு.கழகக் கூட்டணிக்கு மக்கள் அளித்த மகத்தான வெற்றியைக் காணிக்கையாக்கியிருக்கிறேன். அந்த முப்பெரும் தலைவர்களிடமும் கொள்கை உறவுடன் நெருங்கிப் பழகி, திராவிட இயக்கத்தின் வரலாற்றில் முக்கால் நூற்றாண்டு காலமாகத் தன்னுடைய அரும்பெரும் பணியை ஆற்றி வரும் கழகத்தின் பொதுச்செயலாளர் - கலைஞர் இல்லாத நிலையில் தந்தையின் இடத்திலிருந்து வழிகாட்டும் பெருந்தகையாளர் -உடல் நலிவுற்றிருந்தாலும் உள்ளம் வலிமையான இனமானப் பேராசிரியர் அவர்களை நேரில் சந்தித்து, "உங்களைப் போன்றவர்கள் அரும்பாடுபட்டு வளர்த்த இயக்கத்தை அழிக்க நினைத்த எதிரிகளுக்கு இடம் கொடுக்காமல் கட்டிக் காப்பாற்றி வெற்றியுடன் வந்திருக்கிறேன்" என்பதைத் தெரிவித்து, அவரின் வாழ்த்துகளையும் பெற்றுள்ளேன்.

    தமிழ்நாடு வியூகம்

    தமிழ்நாடு வியூகம்

    தேர்தல் களத்தின் வெற்றியுடன் நிறைவுகொள்பவர்கள் நாமல்ல. நம்மை அப்படி தலைவர் கலைஞர் அவர்கள் உருவாக்கவும் இல்லை. எதற்காக இந்த வெற்றியைத் தமிழக மக்கள் நமக்கு வழங்கினார்களோ, என்ன வாக்குறுதிகளை நாம் மக்களிடம் அளித்தோமோ, அவர்களின் உத்தரவினைப் பெற்று நம் கடன் தொண்டூழியம் செய்வதே எனக் கொண்டு,நிறைவேற்றுகிற பெரும் பொறுப்பு நமக்கு இருக்கிறது. நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் மக்கள் நலன் காக்கும் உரிமைக்குரலாக தி.மு.கழகம் ஓங்கி ஒலிக்கும். மக்களுக்கெதிரான பிளவு சக்திகள் தமிழ்நாட்டில் தலையெடுக்காதவாறு விழிப்புடன் காவல்காக்கவேண்டிய கடமையும் பொறுப்பும் கொண்ட கொள்கைத் தோழமையுடன் ஒருங்கிணைந்து செயல்படுவோம். மாநில நலன்களும் உரிமைகளும் பறிபோகாமல் தடுக்கவும் - பறிபோனவற்றை மீட்டெடுக்கவும்-ஜனநாயகம் காக்கவும் அமைதியான அறவழியிலான போராட்டம் அயராமல் தொடரும். மதநல்லிணக்க சக்திகளை ஒருங்கிணைக்கும் ‘தமிழ்நாடு வியூகத்தை' பிற மாநிலங்களிலும் செயல்படுத்திட தி.மு.கழகம் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

    தேசிய இனங்கள்

    தேசிய இனங்கள்

    இனி வரும் காலம், மாநிலங்களை மையப்படுத்தும் ஆக்கபூர்வ அரசியலுக்கான காலம். மத்தியில் எந்த அரசு அமைந்தாலும் எந்தவொரு மாநிலத்தையும் அலட்சியம் செய்துவிட முடியாது. அனைத்து தேசிய இனங்களையும் ஆதரித்து அரவணைத்துச் செல்ல வேண்டிய நேரம் இது.இந்தி பேசும் மாநிலங்களே இந்தியா என்ற காலமெல்லாம் மலையேறிவிட்டது. பேரறிஞர் அண்ணா அவர்களும், தலைவர் கலைஞர் அவர்களும் கண்ட இனம்-மொழிக்கான கனவு நனவாகும் காலம் நெருங்கி வருகிறது. தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - தலைவர் கலைஞர் ஆகியோரின் அடிச்சுவட்டில், மக்களின் நலன் காக்கும் தி.மு.கழகத்தின் முற்போக்கு வெற்றிப் பயணம் தொடரும்!

    இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    English summary
    DMK President MK Stalin has warned to Centre, Hindi speaking states only not India and Centre should respect the all nations.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X