சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சும்மான்னா சும்மா இல்லேடா.. நீ சும்மாயிருந்தா தொல்லை இல்லேடா

Google Oneindia Tamil News

சென்னை: சும்மா இருக்குறது எவ்வளவு சுகம் என்று அடிக்கடி தோன்றுவதுண்டு. ஆனால் உண்மையில் சும்மா இருப்பது அத்தனை சுலபமானதா என்று சும்மா நினைச்சு பார்த்தேன்.

ஒரு படத்தில் வடிவேலு எதுவும் செய்யாமல் சும்மாவே இருப்பார். சும்மா இருப்பதெல்லாம் ஒரு பெரிய விஷயமா என்று கேட்டுவிட்டு, தானும் சும்மா இருக்க முயற்சி செய்து ஒரு ஆளு படாதபாடு படுவார். உண்மையில், நம்மால் சும்மா இருக்க முடியுமா. முடியும் என்றால் எவ்வளவு நேரம் எதுவும் செய்யாமல் சும்மா இருக்க முடியும்.

அது எப்படிங்க தெரியும்? இதெல்லாம் யாராவது செஞ்சு பார்ப்பாங்களா? என்று நீங்கள் கேட்கலாம். நம்ம ஆட்கள் எதைத்தான் செய்யாமல் இருப்பார்கள். விஜிபி வாசலில் ஒருத்தர் ஆடாமல் அசையாமல் சிலை போல் நிற்பாரே, அதேமாதிரி அசையாமல் நின்று கின்னஸ் சாதனையே செய்திருக்கிறார்கள். அட ஆமாங்க, 1967இல் முதன்முதல்ல வில்லியம் என்ற ஒருத்தர், 4.30 மணி நேரம் அப்படியே அசையாமல் நின்று கின்னஸில் இடம்பிடித்திருக்கிறார்.

 அப்படியே இருக்க வேண்டும்

அப்படியே இருக்க வேண்டும்

அசையாமல் என்றால் கை, கால்கள் எதுவும் அசையக் கூடாது. கண்கள் மட்டும் இமைக்கலாம், மூச்சு விடலாம். இதுதவிர உடலில் எந்த அசைவும் பெரிதாக இருக்கக் கூடாது. இதுதான் ரூல்ஸ். அவருக்கு அப்புறமா நிறைய பேர் இந்த சாதனையை முறியடிக்கிறேன்னு கிளம்பி பல மணி நேரம் அசையாமல் நின்னு அசத்தியிருக்காங்க.

 30 மணி நேர சாதனை

30 மணி நேர சாதனை

கடைசியா இந்த வரிசையில, 2003ஆம் ஆண்டு, இந்தியாவைச் சேர்ந்த அக்ஷின்தலா சேஷு பாபு என்பவர் 30 மணி நேரம் 12 நிமிஷம் அசையாமல் நின்று உலக சாதனை படைத்திருக்கிறார். இதே பார்ட்டி 2015ஆம் வருஷம் இன்னும் கூடுதல் நேரம் நிக்கிறேன்னு களத்தில இறங்கியிருக்கார். ஆனா இந்த முறை விதி விளையாடிருச்சி. 35 மணி நேரம் 22 நிமிஷம் ஆகும் போது, ஏதோ ஒரு பூச்சி கடிச்சி, அவருடைய புதிய உலக சாதனை முயற்சியில மண்ணை அள்ளி போட்டிருச்சி. பூச்சியால் முயற்சி பாதியில் புட்டுக்கிட்டாலும், இன்னைக்கு வரை அவர்தான் அதிக மணி நேரம் சும்மாவே நின்ன அதிசயமணி.

 சும்மா இருந்தால் நல்லது

சும்மா இருந்தால் நல்லது

நாம இப்படி எல்லாம் மணிக்கணக்கில் சும்மா இருக்கத் தேவையில்லை. இடை இடையே சில நிமிடங்களாவது எதுவும் செய்யாமல் அமைதியாக சும்மா இருக்க வேண்டும் என்கிறார்கள் உளவியல் நிபுணர்கள். ஆனால் அலுவலகம் செல்லாத விடுமுறை தினங்களில் கூட நாம சும்மா இருப்பதில்லை. எனக்குத் தெரிந்து மனிதன் தூங்கும்போது மட்டும்தான் வேறுவழியில்லாமல் சும்மா இருக்கிறான். மற்ற எல்லா நேரமும் எதையாவது உருட்டிகிட்டேதான் இருக்கான். அதனால் பயன் இருக்கா, இல்லையான்னெல்லாம் யோசிக்கிறதே இல்லை. ஏதோ நாம தான் இந்த உலகத்தையே தாங்குகிற மாதிரி நினைத்துக்கொண்டு ஓடிக் கொண்டே இருக்கிறோம்.

 இப்படித்தான் புத்தர் ஒருமுறை

இப்படித்தான் புத்தர் ஒருமுறை

புத்தர் ஒருமுறை காட்டு வழியாக போய்க்கொண்டிருந்தாராம். அவருடன் அவரது சீடர் ஒருவரும் உடன் சென்று கொண்டிருக்கிறார். திடீரென புத்தருக்கு தாகம் எடுக்கிறது. தனது சீடரை அழைத்து, நாம் வரும் வழியில் அந்த பெரிய புளியமரத்தின் பக்கத்தில் மண்சாலையில் சிறிது தண்ணீர் தேங்கி இருப்பதைப் பார்த்தேன். அதில் இருந்து குடிக்க கொஞ்சம் நீர் கொண்டு வான்னு சொன்னாராம். உடனே சீடர் வந்த வழியே திரும்பிப் போறார். அவர் போய் பார்த்தால் அப்போதுதான் அந்த சாலையில் ஏதோ மாட்டு வண்டி சென்றிருக்கிறது. அதனால் தண்ணீர் கலங்கி குடிப்பதற்கு ஏற்றதாகத் தெரியவில்லை. எனவே வெறுங்கையோடு திரும்பி வந்து, வேறு எங்காவது நீர் இருக்கிறதா என்று பார்த்து வருகிறேன், சிறிது நேரம் பொறுத்துக் கொள்ளுங்கள்னு புத்தர்கிட்டே சொன்னாராம்.

 நிராகரித்த புத்தர்

நிராகரித்த புத்தர்

ஆனால் புத்தர் இதை ஏத்துக்கல. நான் சொன்ன இடத்திலேர்ந்துதான் தண்ணீ வேணும்னு கண்டிப்பா சொல்லிட்டாராம். வழக்கமா புத்தர் இப்படி எல்லாம் அடம்பிடிக்க மாட்டாரேன்னு யோசிச்ச சீடர், சரின்னு மறுபடியும் அந்த இடத்துக்கே திரும்பி போனாராம். அப்போது அந்த தண்ணீர் முன்பு இருந்தை விட கொஞ்சம் தெளிந்து இருந்தது. இன்னும் கொஞ்சம் தெளியட்டும்னு சீடர் அங்கேயே சும்மா உட்கார்ந்துகிட்டாராம். கொஞ்சம் நேரம் ஆனதும் தண்ணி மெல்ல தெளிஞ்சு, நல்லா பளிங்கு மாதிரி ஆயிடுச்சாம். அதில் இருந்து ஒரு சுரக்குடுக்கை நிறைய தண்ணீரை எடுத்துக்கொண்டுபோய் புத்தரிடம் கொடுத்தாராம் சீடர். அப்போது புத்தர் சொன்னாராம், மனசும் இப்படித்தான் கலங்கியிருக்கேன்னு கவலைப்படக் கூடாது, கொஞ்சம் நேரம் சும்மா இருந்தா, தானா தெளியும். ஆனா நாமதான் பிரச்னையை சரி பண்றோம் பேர்வழின்னு, எதையாவது செய்து, இன்னும் பெரிய பிரச்னையா அதை மாற்றிவிடுகிறோம்.

 டென்ஷன் எதுக்கு

டென்ஷன் எதுக்கு

இன்னைக்கு யாரைப் பார்த்தாலும் ஒரே டென்ஷனா இருக்குங்க, ஸ்ட்ரெஸ் தாங்க முடியலை என்கிறார்கள். வேலைப் பிரஷர் ஒருபக்கம் என்றால் வீட்டிலும் பிரஷர் என்று அலுத்துக் கொள்கிறவர்கள்தான் அதிகமாக இருக்கிறார்கள். இந்த ஸ்ட்ரெஸை ரிலீஸ் பண்றேன்னு இவங்க பண்ற அட்டகாசம் கொஞ்சம் நஞ்சமல்ல. ஸ்ட்ரெஸ் எனப்படும் மன இறுக்கத்தை குறைக்க முன்னாடி எல்லாம் மக்கள் கோவிலுக்கு போவாங்க, குடும்பத்தோட வெளி இடங்களுக்கு போய் நேரம் செலவிடுவாங்க, அதுக்கு மேல பெருசா எதுவும் செய்ய மாட்டாங்க. இப்போ ஸ்ட்ரெஸ் பஸ்டர் பேக்கேஜ் எல்லாம் வந்துவிட்டது. ஸ்ட்ரெஸ் குறையனும்னா இதெல்லாம் செய்யுங்க, இதெல்லாம் செய்யாதீங்க என்று ஸ்ட்ரெஸ் பஸ்டர் வல்லுநர்கள் கொடுக்கும் நீண்ட பட்டியலை பார்த்தாலே இருக்குற ஸ்ட்ரெஸ் இன்னும் உச்சியில ஏறி உட்கார்ந்துக்கும்.

 பந்தை அமுக்குங்க

பந்தை அமுக்குங்க

என் நண்பர் ஒருத்தர் எப்போ பார்த்தாலும் கையில ஒரு பந்தை வெச்சி அமுக்கிட்டே இருப்பார். அப்படி செஞ்சா மன இறுக்கும் குறையும்னு சொன்னாங்களாம். அந்த பந்தை அடிக்கடி எங்கேயாவது வெச்சிட்டு பதறி அடிச்சு தேடிக்கிட்டு இருப்பார். இது தேவையா? இன்னொரு பார்ட்டி, பள்ளிக்கூட பசங்க வெச்சி விளையாடுற மூன்று ஒட்டைகள் கொண்ட சக்கரம் ஒண்ணை கையில வெச்சி சுத்திகிட்டிருப்பார். இதுவும் ஸ்ட்ரெஸ் பஸ்டராம். நிறைய ஐடி கம்பெனிகள் தங்கள் ஊழியர்களுக்கு ஸ்ட்ரெஸ் பஸ்டர் கேம்ப் எல்லாம் நடத்துகிறார்கள். தாங்கள் ஏற்றும் மனச்சுமையை தாங்களே குறைக்க பிராயச்சித்தம் மாதிரி இதை செய்றாங்க போல. இதெல்லாம் தவிர, நம்ம ஆட்கள் ஜிம், ஸூம்பா டான்ஸ், தியானம், இசை நிகழ்ச்சி, ஏதோ ஒரு ஹாபி, பார் என ஸ்ட்ரஸை குறைக்க ஆளாளுக்கு ஒரு வழி வெச்சிருக்காங்க.

 அதுக்கு பேசாம சும்மா இருக்கலாம்

அதுக்கு பேசாம சும்மா இருக்கலாம்

இது எல்லாத்தையும் விட சிறந்த, எளிய வழி ஒண்ணு இருக்கு. அதுதான் "சும்மா இருக்கிறது". சும்மா இருந்தா எப்படிங்க ஸ்ட்ரெஸ் குறையும் என்று கேட்கலாம். நீ கைய, கால வெச்சிகிட்டு சும்மா இருந்தாலே எந்த பிரச்னையும் வராது என்று வீட்டில் அடிக்கடி சொல்வார்கள் இல்லையா. அதுதான் இது. சும்மா இருப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல. மெல்ல மெல்ல பழகினால்தான் வரும். அதேபோல சும்மா இருப்பது என்பது சோம்பேறித்தனமும் அல்ல. சும்மா இருப்பது என்பது ஓய்வாக இருப்பது. யார் ஓய்வெடுக்க முடியும்? கடினமாக உழைத்தவர்தான் ஓய்வெடுக்க முடியும்.

 மனசு ஓய்வெடுக்க வேண்டும்

மனசு ஓய்வெடுக்க வேண்டும்

நடந்து ஒரு இடத்திற்கு சென்று அமர்கிறோம். அமர்ந்த பிறகும் கால் செயல்பட்டுக் கொண்டே இருந்தால் எப்படி இருக்கும்? வேலை முடிந்ததும் கால் தானே ஓய்வெடுப்பதைப் போல, மனமும் ஓய்வெடுக்க வேண்டும். அப்போதுதான் நம் மனம் நீண்டகாலம் ஆரோக்கியமாக இருக்க முடியும். ஆனால் நாம் மனதிற்கு ஓய்வு கொடுப்பதே இல்லை. கண்டதையும் அதுபாட்டுக்கு அசை போட்டுக்கொண்டே இருக்கிறது. இதை கொஞ்சம் நிறுத்தி, ஒருநாளில் ஒரு சில நிமிடங்களாவது போனை நோண்டாமல், பராக்கு பார்க்காமல், அமைதியாக சும்மா இருக்க வேண்டும். இப்படி இருந்து பாருங்கள், அப்புறம் புரியும் அதன் அருமையும், பெருமையும்.

- கௌதம்

English summary
Experts advise to stay peace and keep calm for some hours to lead a happy life.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X