திடீரென மாறிய அரசியல் கிளைமேட்.. எடப்பாடியை "சுற்றிலும்" வைக்கப்படும் குறி.. என்ன நடக்கிறது?
சென்னை : அதிமுக தலைமைப் பதவியைக் கைப்பற்றுவதில் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாகவே தொடர்ந்து பல விஷயங்கள் நடந்து கொண்டிருந்த சூழலில், அந்த நிலைமை மெதுவாக மாறி, ஈபிஎஸ்ஸுக்கு நெருக்கடி அதிகரித்து வருகிறது.
எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கொடநாடு கொலை கொள்ளை வழக்கு விசாரணை சூடுபிடித்துள்ள நிலையில், ஓபிஎஸ் தரப்பினர் பலரும் திடீரென கொடநாடு விவகாரத்தைக் கையிலெடுத்து பிரச்சனையைக் கிளப்பி வருகின்றனர்.
அதேநேரத்தில் ஈபிஎஸ்ஸுக்கு நெருக்கமானவர்கள் மீதான ஐடி ரெய்டு, ஜெயக்குமார் மீதான பாலியல் புகார் விவகாரம் குறித்து ஓபிஎஸ் தரப்பினர் பேசி வருவது என தொடரும் சம்பவங்கள் எடப்பாடி பழனிசாமிக்கு 'சுத்துப் போட்டுட்டாங்க' எனச் சொல்வதுபோல இருக்கிறது.
பன்னீருக்கு கை கொடுத்த டெல்லி? எடப்பாடிக்கு கட்டம் கட்ட.. அடுத்தடுத்த சம்பவம்.. அதிர்ந்துபோன ஈபிஎஸ்!

நாற்காலியை நோக்கி எடப்பாடி
அதிமுகவில் பொதுச் செயலாளர் பதவியைக் கைப்பற்றி, கட்சியை முழுமையாக தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர படிப்படியாக காய் நகர்த்தி இன்று கிட்டத்தட்ட அந்த இடத்தை அடைந்து விட்டார் எடப்பாடி பழனிசாமி. ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களாக இருந்த பலரும் இன்று ஈபிஎஸ் பக்கம் இருக்கின்றனர். கட்சியில் கிட்டத்தட்ட 90 சதவீத நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்களை தன் பக்கம் வைத்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. போதாக்குறைக்கு, இன்று உச்சநீதிமன்றமும் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமான தீர்ப்பை அளித்துள்ளது. ஜூலை 11ஆம் தேதி பொதுச் செயலாளராக முடிசூட்டுவது தான் பாக்கி என உற்சாகமாக இருக்கின்றனர் ஈபிஎஸ் ஆதரவாளர்கள்.

எடப்பாடிக்கு குறி
ஆனால், அந்த மகிழ்ச்சியை நீடிக்க விடாத வகையில் இன்று தொடர் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. திடீரென எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமான புள்ளிகள் குறிவைக்கப்பட்டுள்ளனர். கோடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமியும் குறிவைக்கப்பட்டுள்ளார். நாளுக்கு நாள் கோடநாடு விவகாரம் சூடுபிடித்து வரும் நிலையில், இதுவரை பெரிதாக குரல் கொடுக்காத அதிமுகவினர் பலரும் கோடநாடு மர்ம முடிச்சை கையில் எடுத்துள்ளனர். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

ஜெயபிரதீப்
ஈபிஎஸ் - ஓபிஎஸ் மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், கோடநாடு கொலை கொள்ளை வழக்கை ஓபிஎஸ் தரப்பினர் கிளறி வருவது பல்வேறு சந்தேகங்களைக் கிளப்பியுள்ளது. இதுவரை நேரடியாக பொதுவெளியில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக எதுவுமே பேசாத ஓ.பி.எஸ்ஸின் மகன் ஜெயபிரதீப் திடீரென, ஒன்றரை கோடி தொண்டர்களையும் தனது பிள்ளையாக கருதிய எனது ஜெயலலிதா வீட்டில் இந்த அநீதி நடந்திருக்கிறது. இதற்கு நியாயம் கேட்க எங்கள் ஜெயலலிதாவின் பிள்ளையாக எனக்கு கடமை இருக்கிறது. இந்த வழக்கை விரைவாக முடித்து உண்மை குற்றவாளிகளை கண்டறிந்து தமிழக மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்கிறார்.

ஓபிஎஸ் ஆதரவாளர்கள்
இத்தனை ஆண்டுகாலமாக கோடநாடு வழக்கு விசாரணை நடந்தும் அமைதியாக இருந்த அதிமுகவினர் பலரும் வழக்கு விசாரணை சூடுபிடித்துள்ள நிலையில் அந்த வழக்கு குறித்து பேச்சுகளை கிளறிவிட்டுள்ளனர். அவர்கள் அனைவருமே எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான ஓபிஎஸ் தரப்பினர் என்பதுதான் முக்கியமான விஷயம். ஓபிஎஸ் ஆதரவாளரான மருது அழகுராஜ், ‘நமது அம்மா' நாளிதழ் ஆசிரியர் பொறுப்பிலிருந்து விலகி, கோடநாடு மர்மம் தொடர்பாக கவிதை வடிவில் ட்வீட் செய்தார். கோடநாடு அரக்கனை கைது செய்ய வேண்டும் என பொடி வைத்துப் பேசுகிறார். v

திடீரென கிளம்பிய வைத்திலிங்கம்
இன்று ஓபிஎஸ்ஸின் வலதுகரமான அதிமுக துணை பொதுச் செயலாளர் வைத்திலிங்கம், கொடநாடு விவகாரத்தில் பலரும் உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்க வேண்டும் என்று சொல்லி வருகிறார்கள். தமிழக அரசு உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைக்கிறார்கள். எங்களை வளர்த்து அரசியலில் ஆளாக்கிய அம்மாவின் வீட்டில் நடந்த கொலை, கொள்ளை சம்பவத்தில் குற்றவாளியை கண்டுபிடித்து தண்டிக்கப்பட வேண்டும் என்பதுதான் ஒவ்வொரு அதிமுக தொண்டனின் எண்ணமாக இருக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.

கோவை செல்வராஜ் அட்டாக்
இது ஒரு புறம் என்றால், எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களான, சமீபகாலமாக ஓபிஎஸ்ஸை கடுமையாக விமர்சித்து வருபவர்களுமான ஜெயக்குமாரையும், சி.வி.சண்முகத்தையும் குறி வைத்துள்ளார் ஓபிஎஸ் ஆதரவாளரான கோவை செல்வராஜ். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தகுதி தராதாரம் இல்லாதவர். அவர் சர்க்கஸ் கம்பெனி கோமாளி, ஓபிஸ் பற்றி தேவையின்றி பேசி வருகிறார்கள் எனப் பேசியுள்ளார் கோவை செல்வராஜ்.

ஜெயக்குமார் பாலியல் புகார் விவகாரம்
மேலும், ஜெயக்குமார் மீது கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இளம்பெண் ஒருவர் பாலியல் புகார் சுமத்தியது குறித்தும் பேசியுள்ள கோவை செல்வராஜ், ஜெயக்குமார் எப்போதோ போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டிருக்க வேண்டியவர். உதவி கேட்டு வந்த பெண்களை மானபங்கம் செய்தவர் ஜெயக்குமார். எடப்பாடி பழனிசாமி ஆட்சி இருந்ததாலும், ஜெயக்குமார் அமைச்சராக இருந்ததாலும் அவர் மீது வழக்குப் போடவில்லை. தொடர்ந்து இதுபோன்று பேசினால் சிறைக்கு அனுப்பப்படுவார், இதை அவருக்கு எச்சரிக்கையாக சொல்கிறோம் எனப் பேசியுள்ளார். திடீரென எடப்பாடி ஆதரவாளர்களுக்கு எதிரான புகார்கள் பூதாகரமாக்கப்படுவது இதில் கவனிக்கத்தக்க அம்சமாக உள்ளது.

ஐடி ரெய்டு வலை
இன்னொரு புறம் இருப்பதுதான் இதில் உச்சகட்டம். அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமான வடவள்ளி சந்திரசேகருக்கு தொடர்புடைய இடங்களில் இன்று வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். கோவை அதிமுக புறநகர் தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர் பொறுப்பில் இருக்கும் சந்திரசேகர் அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான ‘நமது அம்மா' நாளிதழின் வெளியீட்டாளராகவும் இருந்து வருகிறார். வேலுமணியின் கண்ணசைவுக்கு கட்டுப்பட்டவரான சந்திரசேகரும் வலையில் சிக்கியுள்ளார். வடவள்ளியில் உள்ள சந்திரசேகர் வீடு, அவரின் தந்தை வீடு உள்ளிட்ட 6 இடங்களில் அதிகாரிகள் 6 குழுக்களாக பிரிந்து சோதனை நடத்தி வருகின்றனர்.

எடப்பாடிக்கு நெருக்கமான புள்ளி
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த செய்யாதுரை மீதும் குறி வைத்துள்ளது வருமான வரித்துறை, செய்யாதுரை மற்றும் இவரது மகன் நாகராஜன் ஆகியோர் நடத்தும் நிறுவனம் எஸ்பிகே அண்ட் கோ. முந்தைய அதிமுக ஆட்சியில் எஸ்பிகே நிறுவனம் தான் பெரும்பாலான சாலை மற்றும் கட்டுமான ஒப்பந்தப் பணிகளை மேற்கொண்டு வந்தது. செய்யாதுரை எடப்பாடி பழனிசாமிக்கு மிகவும் நெருக்கமானவர் எனக் கூறப்பட்டு வந்த நிலையில், சொந்தமான வீடு அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

சுத்துப் போட்டாச்சா?
எடப்பாடி பழனிசாமி கோடநாடு கொலை கொல்லை வழக்கில் குறிவைக்கப்பட்டுள்ள நிலையில், ஓபிஎஸ் தரப்பினர் தொடர்ந்து கோடநாடு வழக்கு தொடர்பாக பேசி வருகின்றனர். இது எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி கொடுக்கும் நிகழ்வாகவே பார்க்கப்படுகிறது. ஈபிஎஸ்ஸின் ஆதரவாளரான ஜெயக்குமார் பற்றிய பாலியல் புகார் மீண்டும் ஓபிஎஸ் தரப்பினரால் கிளப்பப்படுகிறது. மேலும், எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமான இருவர் மீது வருமான வரித்துறை ரெய்டு நடத்தப்பட்டுள்ளது. எஸ்.பி.வேலுமணி மீதான லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையும் நடைபெற்று வருகிறது. ஜூலை 11ஆம் தேதி பொதுச் செயலாளராக மகுடம் சூடக் காத்திருக்கும் எடப்பாடி பழனிசாமி, சக்கர வியூகத்திற்குள் தள்ளப்பட்டு வருகிறாரா எனும் சந்தேகங்கள் எழுந்துள்ளன.