சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வடைச் சட்டியை வெளியில் எடுங்க மக்களே.. வெயில் இப்பவே வறுக்குதே.. ஆண்டவா..!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தைப் பொறுத்தவரை வழக்கமாக ஏப்ரல், மே-யில்தான் வெயில் 'வறுத்தெடுக்கத்' தொடங்கும். ஆனால் இந்த வருஷ வறுவல் மார்ச் துவக்கத்திலேயே ஆரம்பித்துவிட்டது. ''காலையில 8 மணிக்கெல்லாம் கூட ரோட்டில போக முடியல. சாயந்தரம் 5 மணியாகுது. 4 ஸ்டெப் எடுத்துவைக்க முடியல'' என்கிற புலம்பல்களை இப்போது சர்வசாதாரணமாகக் கேட்க முடிகிறது.

வெயில், மழை, இத்யாதிகள் எல்லாமே ஏதோ நாம் புதிதாகப் பார்க்கிற விஷயங்கள் அல்ல. ஆனால் ஒவ்வொரு முறையும் புதிதாகப் பார்ப்பது போல அடித்து விடுவதில் நம்மை அடிச்சிக்க ஆளே கிடையாது. ''ஸ்....ஸ்ஸ் அப்பா! வெயில் என்னா போடு போடுது! இந்த வருஷம் ரொம்...ப்ப்ப்ப கடுமை. மே மாதத்தில் ஊரை காலி பண்ணினால் கூட தேவையில்லை'' என பலரும் பரிதவிப்பதை நீங்கள் பார்த்திருக்க முடியும்.

இதில் வேடிக்கை என்னவென்றால் இதே நபர்கள் போன ஆண்டும் இதே மாதிரிதான் பரிதவித்தார்கள். உயிருடன் இருந்தால் வரும் ஆண்டும் இதே மாதிரி பரிதவிப்பார்கள். அவர்களைப் பொறுத்தவரை வெயில் என்பது சீசனுக்கேற்ற ஒரு சப்ஜெக்ட். அவ்வளவே! சரி போகட்டும்.

 மார்ச் முதல் வெயில்

மார்ச் முதல் வெயில்

மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்கள் இந்தியாவின் கோர் எஸ் டபிள்யூ மத்திய மண்டலம் என அழைக்கப்படும் வடமேற்கு, மேற்கு, மற்றும் மத்திய மாநிலங்கள், தென்னிந்தியாவின் சில பகுதிகளை விட வெப்பமாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தனது கோடைகால கணிப்பில் கூறியுள்ளது. கோர் எஸ் டபிள்யூ மத்திய மண்டலம் என்பது பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம், டெல்லி, உத்தரகாண்ட், அரியானா, ராஜஸ்தான், உத்தரபிரதேசம், குஜராத், மத்தியப் பிரதேசம், பீகார், சத்தீஸ்கர், ஜார்கண்ட், மேற்கு வங்காளம், ஒடிசா,தெலங்கானா, மகராஷ்ட்ரா மற்றும் கடலோர
ஆந்திராவின் சில பகுதிகளை உள்ளடக்கியது ஆகும்.

 அதிகபட்சம் 41 டிகிரி செல்சியஸ்

அதிகபட்சம் 41 டிகிரி செல்சியஸ்

தமிழகத்தைப் பொறுத்தவரை குறைந்தபட்சம் 0.37 டிகிரி செல்சியஸ் முதல் 0.41 செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கக் கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. வானிலையில் ஏற்படும் சிறியளவிலான மாற்றம் கூட நமது வாழ்க்கையில் எவ்வளவு பெரிய தாக்கத்தை உருவாக்கிவிடுகிறது!
தெரிந்த ஒரு நண்பர் தனது மகளுக்கு வரும் மே மாதம் திருமணத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார். பிள்ளைகளுக்கு விடுமுறை என்பதால் மே மாதம் அவரது சாய்ஸாக இருந்தது. இப்போது திடீரென ஆகஸ்ட் மாதத்திற்கு திருமண தேதியை மாற்றியிருக்கிறார். காரணம் கேட்டபோது,'' மே மாசம்ணு சொன்னாலே ஆளாளுக்கு எரிஞ்சி விழறாங்க. ஹாட் சம்மரில் எப்படி கல்யாணம் வைக்கிறேண்ணு குதிக்க ஆரம்பிச்சாங்க. அதனால வம்பே வேண்டாம்ணு ஆகஸ்ட்டுக்கு மாத்தியிருக்கிறேன்'' என்கிறார்.

ரணகளம்

ரணகளம்

பாழாய்ப்போன இந்த வெயில் பள்ளி, கல்லூரிகளையும் விட்டுவைக்கவில்லை. எல்லா பரிட்சைகளையும் ஏப்ரல் இறுதிக்குள் நடத்திமுடிக்க வேண்டும் என்கிற வேகத்தில் பள்ளி, கல்லூரிகளில் ரணகளமே அரங்கேறிக் கொண்டிருக்கிறது. அதிலும் இந்த கொளுத்தும் கோடையில் மாணவர்களும், ஆசிரியர்களும் பள்ளி, கல்லூரிகளுக்கு வந்து செல்வதே பெரும் பிரச்சனையாக இருக்கிறது. ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஆசிரியை அவர். சமீபத்தில் ஒருநாள் பள்ளிக்குச் செல்ல பேருந்தில் பயணம் மேற்கொண்டிருந்தார். முன்வரிசையில் டிரைவருக்கு எதிர்புறத்தில் 2 சீட்கள் காலியாக இருந்தன. ஆனாலும் அந்த டீச்சர் நின்றுகொண்டே பயணம் செய்தார். இதைப் பார்த்த இன்னொரு பெண், ‘'ஏன்மா இப்படி ஸ்டேண்டிங்கில் போறீங்க! சீட்டில் உட்கார்ந்தால் என்னவாம்!'' என சொல்ல, அவரும் அப்படியே செய்ய முயன்றிருக்கிறார். ஒரு நொடி கூட ஆகியிருக்காது. உட்கா! ரப் போனவர் அப்படியே திடுக்கிட்டு எழுந்துவிட்டார். எஞ்சினுக்கு அருகில் உள்ள அந்த சீட், அப்படி அனலாய் கொதித்திருக்கிறது. ‘'சம்மர் வந்திட்டாலே இதே தொல்லைதான்'' என சலிச்சிகிட்டாராம் டிரைவர்.

 தண்ணீர் தட்டுப்பாடு

தண்ணீர் தட்டுப்பாடு

சுட்டெரிக்கும் வெயிலில் தண்ணீர் தட்டுப்பாடு அடுத்த பிரச்னையாக விஸ்வரூபம் எடுக்க வரிசையில் நின்றுகொண்டிருக்கிறது. குடிநீர் மட்டுமல்ல குடிமகன்களின் டாஸ்மாக் பானங்களும் வெயிலால் சில பல மாற்றங்களை சந்திக்க ஆரம்பித்துவிட்டன. கோவை கலால் மண்டலத்தில் உள்ள கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு மாவட்டத்தில் 998 டாஸ்மாக் மதுபான கடைகள் செயல்படுகின்றன. டாஸ்மாக் கடைகளில் இதுவரை தினமும் சுமார் 25 ஆயிரம் பெட்டி பீர் பாட்டில் விற்பனையாகி வந்தன. மொத்த மதுபான விற்பனையில் பீர் 3 முதல் 5 சதவீதம் அளவிற்கே இருந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் குடிமகன்கள் தாக சாந்திக்கு ஜில்லென பீர் பக்கம் தாவி விட்டார்களாம். அதனால் டாஸ்மாக்கில் பீர் பாட்டில் விற்பனை செமத்தியாக அதிகரித்துவிட்டது.

 பீர் விற்பனை உச்சம்

பீர் விற்பனை உச்சம்

ஆம்... கலால் மண்டல அளவில் இப்போது தினமும் 40 ஆயிரம் பெட்டி பீர் பாட்டில் விற்பனையாகி வருகிறது. வரும் மார்ச், ஏப்ரல், மே மாதத்தில் பீர் பாட்டில் விற்பனை 200 முதல் 300 சதவீதத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அண்டை மாநிலங்களில் வெயில் அதிகரித்து வருவதால் கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் வரத்து குறைந்து, அவற்றின் விலை மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. கோயம்பேடு சந்தைக்கு ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களில் இருந்து அதிக அளவில் காய்கறிகள் வருகின்றன. தமிழகத்தை விட இம்மாநிலங்களில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கர்நாடக மாநிலத்தில் அதிகபட்சமாக 110 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பநிலை பதிவாகி வருகிறது. இதன் காரணமாக, கோயம்பேடு சந்தைக்கு காய்கறிகளின் வரத்து குறைந்து, அவற்றின் விலை உயரத் தொடங்கியுள்ளது.

 விலங்குகள் பாவம்

விலங்குகள் பாவம்

கோடையை முன்னிட்டு ஊருக்குள் இவ்வளவு கலாட்டாக்கள் நடக்கும்போது வனப் பகுதிகளில் கேட்கவா வேண்டும்! தேனி மாவட்டம், போடி பகுதியில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலை அகமலையில் தொடங்கி இலங்காவரிசை, ஊரடி, ஊத்துகாடு, உரல்மெத்து, கொட்டகுடி, குரங்கணி முட்டம், டாப் ஸ்டேஷன், கொழுக்குமலை, முதுவாக்குடி, சென்ட்ரல் ஸ்டேஷன், போடிமெட்டு என தேக்கடி வரை பரந்து விரிந்துள்ளது. இங்கு கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே வெயில் கொளுத்தத் தொடங்கிவிட்டது. நீர்நிலைகள் வறண்டு வருகின்றன.

 காட்டுத் தீ அபாயம்

காட்டுத் தீ அபாயம்

இந்நிலையில் குரங்கணி, கொட்டகுடி, கொழுக்குமலை ஆகிய மலைப் பகுதிகளில் கோரைப்புற்கள் 6 அடி முதல் 7 அடி உயரமாக வளர்ந்துள்ளன.. கடும் வெயிலில் கோரைப்புற்கள் காய்ந்துள்ளன. சில சமயங்களில் சமூக விரோதிகள் வைக்கும் தீயால் மலைப்பகுதியில் காட்டுத் தீ பரவும் அபாயமும் உள்ளது. தேனி மாவட்டத்தில் மட்டுமல்ல,தமிழகத்தின் பிற வனப் பகுதிகளிலும் ஏறத்தாழ இதே நிலைதான் நீடித்து வருவதாகக் கூறப்படுகிறது. ஆக மொத்தத்தில் வெயில் நாடு, காடு என எல்லா பக்கமும் தன் வேலையை காட்ட ஆரம்பித்துவிட்டது. நாமும் அதற்கேற்ப கொஞ்சம் முன்னெச்சரிக்கையோடு இருந்தால்தான் இந்த கோடை கொடுமையில் இருந்து தப்பிக்க முடியும் மக்கா...

- கௌதம்

English summary
Summer season has started in Tamil Nadu as the sun is scorching.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X