சென்னையில் சுட்டெரிக்கும் வெயில்... வெப்பச்சலனத்தால் லேசான மழையும் பெய்யுமாம்
சென்னை: சென்னையில் 40 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்னி நட்சத்திரம் முடிவுக்கு வந்தாலும் தமிழகத்தில் பல மாவட்டங்களில் வெயில் சுட்டெரித்து வருகிறது. ஆங்காங்கே மழையில் பெய்து வருகிறது. இன்னும் 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் சேலம் மாவட்டம் வீரகானூர், கடலூர் மாவட்டம் வேப்பூரில் தலா 5 செமீ மழை பதிவாகியுள்ளது. ஸ்ரீமுஷ்ணம்,வால்பாறை, திருமயம் பகுதியில் தலா 4 செமீ மழை பதிவாகியுள்ளது. சீர்காழி, செந்துறை, கரூர், தொழுதூர், வி.களத்தூர், ஜமுனாமரத்தூர், வளத்தி, காரையூர், அருப்புக்கோட்டையில் தலா 3 செமீ மழை பதிவாகியுள்ளது. கோவிலங்குளம்,பேரையூர், கொள்ளிடம், மேலூர், பெரம்பலூர், சோலையார், கோபிசெட்டிபாளையம், கெட்டி, கிண்ணக்கோரை பகுதிகளில் தலா 2 செமீ மழை பதிவாகியுள்ளது. பல ஊர்களில் 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

இந்த நிலையில் வெப்பச்சலனம் காரணமாக இன்று முதல் ஜூன் 1ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 39-40 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும்.
இன்றைய தினம் இலங்கை மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். நாளை, நாளை மறுநாள் இலட்சதீவு, தென் கிழக்கு அரபிக்கடல், தெற்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் - தென்தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
சென்னை வேளச்சேரியில் மேகவெடிப்பு?.. 10 நிமிஷத்தில் கொட்டி தீர்த்த மழை