சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ரணங்களின் வலி.. இதயம் வரை நனைகிறதே.. என்னுள்ளே என்னுள்ளே.. உயிரை பிரித்து போனாயே ஸ்வர்ணலதா!

பின்னணி பாடகி ஸ்வர்ணலதாவின் பிறந்த நாளினை ரசிகர்கள் நினைவுகூர்ந்து வருகிறார்கள்

Google Oneindia Tamil News

சென்னை: "எமனுக்கு எழுத படிக்க தெரியாது போலும்... அதனால்தான் ஓர் கவிதை புத்தகத்தை கிழித்து போட்டு விட்டான்!" என்று கவியரசு கண்ணதாசனின் மறைவின் போது, கவிஞர் வாலி இப்படி தெரிவித்திருந்தார்.. இதைதான் நாம் ஸ்வர்ணலதா மரணத்திலும் அந்த எமனை பார்த்து நறுக்கென கேள்வி கேட்க தோன்றுகிறது.. இன்று பின்னணி பாடகி ஸ்வர்ணலதாவின் பிறந்த நாள்.. இனிமையும், வளமும் கலந்து குழைத்து ரசிகர்களை பாடல்களால் கட்டிப்போட்ட அந்த இசை தேவதையை நினைவுகூர்வதில் "ஒன் இந்தியா தமிழ்" பெருமை கொள்கிறது!!

Recommended Video

    வலிகளின் மொத்த முடிச்சுகளுடன் வாழ்ந்து முடித்த ஸ்வர்ணலதா- வீடியோ

    ஒரு அபூர்வமான குரலை பெற்றவர் ஸ்வர்ணலதா... இப்போதெல்லாம் பின்னணி பாடல்களை பாடினால், பாடலை பாடியது யார் என்று கண்டுபிடிப்பது பெரிய கஷ்டமாகிவிடுகிறது.. சிலர் அந்த வீண் முயற்சியில்கூட இறங்குவது கூட இல்லை.

    ஆனால் சொர்ணலதா அப்படி ஒரு வாய்ப்பையே ரசிகர்களுக்கு வைக்கவில்லை... சுசிலா, ஜானகி, சித்ராவைபோலவே, இந்த பாட்டு பாடியது ஸ்வர்ணலதாவேதான் என்று கற்பூரம் அடித்து சத்தியம் செய்து விடும் அளவுக்கு உறுதியாக தெரிந்துவிடும். அப்படி ஒரு பரிச்சயம் வாய்ந்த குரல்.

    உச்சரிப்பு

    உச்சரிப்பு

    என்னே ஒரு வளமான குரல்!! அவரது உச்சரிப்பை கேட்டால், இவர் தாய்மொழி இன்னதுதான் என்று உறுதியாகவே சொல்ல முடியாது. அவ்வளவு வளம் கொழிக்கும் உச்சரிப்பு அந்த பாடல்களில்!! அவ்வளவு இனிமை செறிக்கும் அந்த குரலில்!! துள்ளலின் உணர்வும், மகிழ்ச்சியின் எல்லையும், ரணத்தின் வலிகளும், சோகத்தின் வடுக்களும், என எல்லாவித உணர்வுகளையும் பாட்டில் குழைத்து தந்தார் ஸ்வர்ணலதா. பாடிய பாட்டுக்களில் எதை சொல்ல, எதை விட?

    கருத்தம்மா

    கருத்தம்மா

    இவர்குரல் செய்த ஜாலங்கள்தான் என்னே???அதனால்தான் இளையராஜாவும் சரி, ஏஆர். ரகுமானும் சரி இருவருமே ஸ்வர்ணலதாவின் குரலை அதிகமாக மட்டுமில்லாமல், மிகச்சரியாகவும் பயன்படுத்தி கொண்டனர்... ரங்கீலாவில் ஹை ராமா என்ற பாடலாக இருந்தாலும், கருத்தம்மாவில் போறாளே பொன்னுதாயி என்ற பாடலாக இருந்தாலும் ஸ்வர்ணலதா கீதங்களில் எல்லாமே சிறப்புதான்... 23 வருட சினிமா வாழ்க்கையில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் சுமார் 7,500-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி உள்ளார்!!

    அழகியல்

    அழகியல்

    அதிலும் கீ போர்ட், ஹார்மோனியம் வாசித்து கொண்டே பாடும் அழகே அலாதிதான்.. தமிழ்நாடு, கேரளம் உள்ளிட்ட மாநில அரசுகளின் விருதுகள் இவர் வீட்டு காலிங் பெல்லை அழுத்தி கொண்டே இருந்தன.. தேசிய விருது சிவம்பு கம்பளம் விரித்து வரவழைத்தது.. ஆனால், தாய்-தந்தையரை சிறுவயதிலேயே இழந்த அவரது தனிப்பட்ட வாழ்க்கையோ மிக துயரமானது... ஆழ பூடகமானது! அமைதியான சுபாவம், எவரிடமும் பேசிக்கொள்ளாத தனிமை விரும்பி.. மிகப்பெரிய குடும்பத்தை தனது வருமானத்தால் மட்டுமே காப்பாற்ற வேண்டிய நிலைமைக்கு ஆளானார். தெரிந்ததும், அறிந்ததும், உயிருமானது பாட்டு ஒன்றுதான்.

    உச்சம்

    உச்சம்

    சித்ரா, ஜானகி உச்சியில் இருக்கும்போதே தனக்கெனவும் ஒரு உயரத்தை பிடித்தார்.. ஆனால் உச்சத்தை பிடிக்க தெரிந்த அவரால், கடைசிவரை திருமணம் என்ற பந்தத்திற்குள் நுழைய முடியாமலேயே போய்விட்டது. இதில் நோயும் பீடிக்க தொடங்கியது. ஆளை பார்த்து இயற்கை நோயை தருமா என்ன? நுரையீரல் பாதிப்பால் பலவாறாக அவதிப்பட்டு, சிகிச்சையும் பலன் இன்றி 37 வயதிலேயே மரணமடைந்து விட்டார். ஸ்வர்ணலதாவை நினைக்குபோதெல்லாம் ஒரு நிமிடம் கண்கலங்கி விடுகிறது.

    யார் கண் பட்டதோ?

    யார் கண் பட்டதோ?

    ஸ்வர்ணலதா இறந்தபோது புஷ்பவனம் குப்புசாமி ஒரு இரங்கற்பா எழுதி அவரே பாடியிருந்தார்.. அதில் ஒரு வரியில் "பண்பாடும் குரல் எவன் கண்பட்டு கரைந்ததோ, புண்பட்டதோ சொல் சொர்ணமே.. மறு பிறப்பிருந்தால் இந்த மண்ணில் வந்து தமிழ்மகளாய் பிறந்திடும்மா.." என்றார்.. இதைதான் இப்போதுவரை நம்மாலும் சொல்ல தோன்றுகிறது.. "மாலையில் யாரோ " பாடலின் மயக்கத்திலிருந்து நம்மில் இன்னும் பலர் மீளவே இல்லை.. மீளவும் விருப்பம் இல்லை.. சோக பாடல்களை, அவர் ஆரம்பிக்கும்போதே நம் மனசு கனத்து போய்விடுகிறது.. "என்னுள்ளே என்னுள்ளே" பாடல் ஒரு மைல் கல்லாகவே உருமாறிவிட்டது.. அதை உடைக்க எவராலும் இனி முடியாது.

    கரிசனம் - துரோகம்

    கரிசனம் - துரோகம்

    மோகத்துக்கென ஒரு வடிவம் இருக்கும் என்றால் அது ஸ்வர்ணலதாவின் குரலாகத்தான் இருக்கும்.. சோகத்துக்கு ஒரு வடிவம் இருக்கும் என்றால் அதுவும் ஸ்வர்ணலதாவின் குரலாகத்தான் இருக்க முடியும்.. தனிமையையும் இனிமையாக்கும் ஏகாந்த குரல் வளமும் திறனும் ஸ்வர்ணலதாவிடம் அபரிமிதமாக குடிகொண்டிருந்ததே அதற்கு சாட்சி... ஆனால், கலாரசனை என்பதே கிஞ்சித்தும் இல்லாமல், கரிசனம் என்பதே கொஞ்சமும் இல்லாமல் இழுத்து சென்ற அந்த காலனை என்ன சொல்வது? ரசிகர்களின் மனங்களுக்கு மாபெரும் துரோகத்தை இழைத்த விதியைதான் என்ன சொல்வது?

    வலிகள்

    வலிகள்

    ஸ்வர்ணலதா.. உனக்கு மரணமே இல்லை.. காற்று இருக்கும் திசையெல்லாம் நீ எங்களுடன் இருப்பாய்.. எவனோ ஒருவன் வாசிக்கிறான் பாடலில் "இன்னிசை மட்டும் இல்லையென்றால் என்றோ என்றோ இறந்திருப்பேன்" என்ற வரிகளின் வலிகளை எவ்வளவு கடினத்துடன் பாடி கடந்திருப்பாய் என்பதை எங்களால் உணர முடிகிறது.. ஆனால், "போறாளே பொன்னுதாயி" பாடி முடித்ததும் ரெக்கார்டிங் தியேட்டரில் எதற்காக கண்ணீர் சிந்தினாய் ஸ்வர்ணலதா? இது எங்களுக்கு இன்றுவரை பிடிபடவேயில்லை!!!

    English summary
    swarnalatha an unforgettable singer of south indian film industry
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X