சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உள்ளாட்சி தேர்தல்.. புதிய வரலாறு படைக்க போகும் தி.நகர்.. தமிழகம் முழுவதும் தீயாய் பரவுமா?

உள்ளாட்சி தேர்தலில் பிசினஸ்மேன் களமிறங்குவதாக கூறப்படுகிறது

Google Oneindia Tamil News

சென்னை: ஒவ்வொரு தேர்தலும் ஒவ்வொரு டைப்தான். அந்த வகையில் உள்ளாட்சித் தேர்தல் என்பது கிராமத்து பெரும் திருவிழா போல. இங்கு கட்சியெல்லாம் இரண்டாம் பட்சம்தான். அப்படி ஒரு தேர்தல் இதோ வரப் போகிறது.. இந்த தேர்தலில் சென்னை தியாகராய நகர் பகுதி ஒரு புதிய வரலாறு படைக்க காத்திருக்கிறது.

உள்ளாட்சி தேர்தலைப் பொறுத்தவரை (மாநகராட்சி, நகராட்சித் தலைவர்கள் தவிர்த்து) உள்ளூர் செல்வாக்குதான் பெரிதாக எடுபடும். கட்சி சின்னங்கள் கூட இரண்டாம் பட்சம்தான் இங்கு. குறிப்பாக ஊரகப் பகுதிகளில் உள்ளூரில் யாருக்கு செல்வாக்கு இருக்கோ அவர்களுக்கே வெற்றி வாய்ப்பும் கைகூடி வரும்.

இந்த நிலையில் உள்ளாட்சிதேர்தல் தொடர்பாக சென்னை தி.நகர் குடியிருப்பாளர் நலச் சங்கம் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது தனது சங்கத்தின் சார்பில் ஒரு பிரதிநிதியை சென்னை மாநகராட்சியின் 133வது வார்டில் வேட்பாளராக நிறுத்த அது தீர்மானித்துள்ளது. இது வெளியிலிருந்து பார்க்க சாதாரண ஒரு அறிவிப்பாகவே தோன்றும்தான். ஆனால் உற்று நோக்கி ஆராய்ந்தால் நிச்சயம் இது புரட்சிகரமான ஒரு தொடக்கமாக தெரியும்.

மாற்றங்கள்

மாற்றங்கள்

வழக்கமாக கட்சிகள்தான் வார்டுகளில் போட்டியிடும். கூடவே சுயேச்சைகள் களம் காண்பார்கள். ஆனால் தற்போது காலம் மாறி வருகிறது. புதிய புதிய மாற்றங்களை மக்கள் எதிர்பார்க்க ஆரம்பித்து விட்டனர். குறிப்பாக அரசியல் மாற்றத்தை அவர்கள் அதிகமாகவே எதிர்பார்க்கிறார்கள். ஆனால் அது இன்னும் தொலைவிலேயே உள்ளது.

ஏக்கம்

ஏக்கம்

மக்கள் நீதி மய்யம் மற்றும் நாம் தமிழர் கட்சிக்கு மக்களிடையே இன்றும் எதிர்பார்ப்பு அதிகரிக்க காரணமே இந்த மாற்றம் தொடர்பான ஏக்கம்தான். அந்த வகையில் உள்ளாட்சி அமைப்புகளில் கட்சிகள் பெரிய அளவில் முன்னேற்றத்தை ஏற்படுத்தவில்லை என்பது மக்களின் எண்ணமாக உள்ளது. இந்த நிலையில்தான் இந்த தி.நகர் குடியிருப்பாளர்கள் நலச் சங்கத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பிரச்சனைகள்

பிரச்சனைகள்

இவர்கள் தேர்தலில் போட்டியிடுவது என்பது புதிதல்ல. கடந்த 2011 தேர்தலிலும் கூட போட்டியிட்டுள்ளனர். இந்த முறையும் போட்டியிடப் போகின்றனர். இதுதொடர்பான தீர்மானத்தை சங்கக் கூட்டத்தில் போட்டுள்ளனர். இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருமே, தங்களது வார்டில் பல பிரச்சினைகள் வருடக் கணக்கில் தீர்க்கப்படாமல் உள்ளதை சுட்டிக் காட்டி ஆதங்கம் தெரிவித்தனர்.

வேட்பாளர்

வேட்பாளர்

இந்த பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேட்பாளரை நிறுத்துவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. சங்கத்தின் சார்பாக தொழிலதிபர் பன்னீர் செல்வம் போட்டியிடுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ரங்கன் தெருவைச் சேர்ந்த மோகன் என்பவர் கூறுகையில், நாங்கள் தனி வேட்பாளரை நிறுத்துகிறோம். இதுபோல அனைத்து குடியிருப்பாளர் சங்கங்களும் வேட்பாளர்களை நிறுத்த வேண்டும் என் விரும்புகிறோம் என்றார்.

குடியிருப்போர்

குடியிருப்போர்

இது நிச்சயம் வரவேற்கப்பட வேண்டிய ஒன்றுதான். என்னதான் அரசியல் கட்சிகள் வலுவானவையாக இருந்தாலும் கூட சம்பந்தப்பட்ட பகுதிகளில் குடியிருப்போருக்குத்தான் அந்தப் பகுதியின் பிரச்சினைகள் குறித்து நன்கு தெரியும். அதை ஆழமாக பார்த்து அனுபவிப்பவர்கள் அவர்கள்தான். எனவே அப்படிப்பட்டவர்களே தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றி பெறும்போது நிச்சயம் பிரச்சினையைத் தீர்க்க ஒரு படி தீவிரமாகவே உழைப்பார்கள் என்று தாராளமாக எதிர்பார்க்கலாம்.

என்ஜினியர்

என்ஜினியர்

இருப்பினும் பண பலம், அரசியல் பலம் போன்றவற்றை எதிர்த்து இவர்கள் போட்டியிடும்போது வெற்றி வாய்ப்பு நிச்சயம் சந்தேகமானதுதான். கடந்த 2011 உள்ளாட்சித் தேர்தலில் இந்த வார்டில் குடியிருப்பாளர்கள் சார்பாக போட்டியிட்டவர் ஸ்ரீதரன் என்ற சாப்ட்வேர் என்ஜீனியர். இவர் 900 வாக்குகளை பெற்றார். கடும் போட்டிக்கு மத்தியிலும் அவருக்கு இத்தனை வாக்குகள் விழுந்தது ஆச்சரியம்தான். இந்த முறை நிச்சயம் தங்களது வேட்பாளரை வெற்றி பெற வைப்போம் என்ற உறுதியுடன் தி.நகர் சங்கம் உள்ளதாம்.

இதேபோல தமிழகம் முழுவதும் குடியிருப்பாளர்கள் நலச் சங்கங்கள் களத்தில் இறங்கினால், கணிசமான வெற்றியையும் பெற்றால் அரசியல் கட்சிகளுக்கு நிச்சயம் திண்டாட்டம்தான்!!

English summary
t nagar residents' association has announced to field candidate in local body election
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X