சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மண்டையில மசாலா இருந்தா மரண மாஸ் காட்டலாம்!

Google Oneindia Tamil News

சென்னை: இந்த உலகத்துல எப்போ எது நடக்கும்னு சொல்லவே முடியாது. ஆனா எது நடந்தாலும், நமக்கு மண்டையில கொஞ்சம் மசாலா இருந்தா, அதை நமக்கு சாதகமா மாத்திக்க முடியும். இதை பத்தி விரிவா பேசுறதுக்கு முன்னாடி உங்களுக்கு ஒரு கதை சொல்றேன். அதை கேட்டீங்கன்னா நான் சொல்ல வர்ர விஷயம் உங்கள் மனசுல பச்சக்குனு ஒட்டிக்கும்.

சரி, இப்போ கதைக்கு போவோமா.. (பின்னே.. அதை விட வேற என்ன வேலை.. வாங்க வேகமாக போலாம்)

அமெரிக்காவில ஒரு வயசான பாட்டிம்மா வண்டியை எடுத்துகிட்டு சும்மா மின்னல் வேகத்துல சர்ருன்னு போயிருக்கு. இதைப் பார்த்த ரோந்து போலீஸ்காரர் ஒருத்தர், அந்த அம்மா வண்டியை விரட்டிகிட்டே போய், சில கிலோமீட்டர் தள்ளி மடக்கி பிடிச்சிருக்கார். அந்த பாட்டிம்மா பதட்டமே படாம தம்பி, உனக்கு என்னப்பா வேணும்னு கேட்டுச்சாம்.

பாட்டி, நீங்க ரொம்ப வேகமா வண்டியை ஓட்டியிருக்கீங்க, அது சட்டப்படி தப்பு. உங்கள் லைசென்சை எடுங்கன்னார் போலீஸ்காரர்.

talent will win always

லைசென்ஸ் எல்லாம் இல்லேப்பா, நான் அடிக்கடி குடிச்சிட்டு வண்டி ஓட்டினதுக்காக என் லைசென்ஸை கேன்சல் பண்ணிட்டாங்க என்றாராம் பாட்டி.
அப்படின்னா வண்டி பேப்பர்ஸை காட்டுங்கன்னாராம் போலீஸ்.

இது என் வண்டியே இல்லைப்பா, திருட்டு வண்டின்னாராம் பாட்டி.

என்னது திருட்டு வண்டியான்னு ஷாக்காயிருக்கார் போலீஸ்காரர்.

ஆமாம்பா, வழியில ஒரு ஆள் கார் பக்கத்துல நின்னு சிகரெட் புடிச்சிகிட்டு இருந்தான், அப்படியே பின்னாடி போய் மண்டையில ஒரு போடு போட்டேன். ஆள் அவுட், அவன் பாடியை தூக்கி டிக்கியில போட்டுட்டு வண்டியை ஆட்டையை போட்டுட்டேன்னு அசால்ட்டா சொன்னாராம் பாட்டிம்மா.

போலீஸ்காரருக்கு பொறி கலங்கிருச்சி. பாட்டி வெரி டேஞ்சரஸ் பார்ட்டின்னு புரிஞ்சுது. டக்குனு துப்பாக்கியை எடுத்து, "பாட்டி ஹேண்ட்ஸ் அப்"-னு சொன்னவரு, வாக்கிடாக்கியில தகவல் கொடுத்து இன்னும் நிறைய போலீஸ் வேணும்னு கேட்டிருக்கார்.

அடுத்த 5 நிமிஷத்துல நாலு அஞ்சு கார்ல போலீஸ்காரங்க பறந்து வந்துட்டாங்க. அதுல ஒருத்தர் பாட்டி கிட்டே வந்து, இங்க என்ன பிரச்னைன்னு கேட்டார். ஒரு பிரச்னையும் இல்லேப்பா, இந்த தம்பி திடீர்னு துப்பாக்கியை காட்டி என்னை இப்படி நிற்க வெச்சிருக்கார்னாராம் பாட்டி.

ஓ, அப்படியா. சரி, உங்கள் லைசென்ஸ், வண்டி பேப்பர்ஸ் எல்லாம் எடுங்கன்னாராம் புது போலீஸ். எல்லாத்தையும் ஹேண்ட் பேக்குல இருந்து சமர்த்தா எடுத்து காமிச்சாங்களாம் பாட்டி. அவருக்கு ஒண்ணும் புரியல. டிக்கியை திறங்கன்னு சொல்லி வண்டி பின்னாடி போய் பார்த்திருக்கார். டிக்கியிலும் எந்த பிணமும் இல்லை. மண்டை காய்ஞ்சிட்டாரு புது போலீஸ். என்னய்யா நடக்குது இங்கேன்னு பழைய போலீஸை புது போலீஸ் கேட்டிருக்கார். அவரும் நடந்த கதை எல்லாத்தையும் மறுபடியும் சொல்லியிருக்கார்.

talent will win always

மறுபடியும் பாட்டி கிட்ட வந்த புது போலீஸ், மன்னிக்கணும், உங்க கிட்டே லைசென்ஸ் இல்லை, வண்டி பேப்பர்ஸ் இல்லேன்னு என் சகா சொன்னார், அதான் உங்களை தொந்தரவு பண்ணிட்டோம்னாராம்.

நான் ஸ்பீடா வண்டி ஓட்டினேன்னு கூட சொல்லியிருப்பாரேன்னாராம் பாட்டி.

ஆமாம் பாட்டி, ஆனா அதை நான் நம்பலைன்னார் புது போலீஸ்.

நீங்க தாங்க புத்திசாலி ஆபிசர். உங்க நண்பரை நல்ல டாக்டர் கிட்டே காட்டுங்க, பாவம்னு சொல்லிட்டு வண்டியில ஏறி போயே போயிட்டாராம் நம்ம ஜகஜ்ஜால பாட்டி.

புத்திமான் பலவான் ஆவான்னு இதைத்தான் நம்ம பெரியவங்க சொல்லியிருக்காங்க.

எந்த மாதிரி சூழல்லயும் பதற்றப்படாம அறிவை பயன்படுத்தினா பல பிரச்னைகளில் இருந்து சுலபமா தப்பிச்சிடலாம். இந்த உலகத்துல யாருக்குத்தான் சார் பிரச்னை இல்லை. பிரச்னைகளை கண்டு பின்னங்கால் பிடறியில் அடிக்க ஓட்டம் பிடிக்காமல், அந்த பிரச்னையை பிரிச்சு பேன் பார்க்குறவன்தான் பிரபலம் ஆக முடியும்.

உங்களுக்குத் தெரிஞ்ச 10 பிரபலங்களை பட்டியல் போடுங்க. அவங்க வாழ்க்கையில எத்தனை பெரிய பிரச்னைகள் வந்திருக்கு, அதை அவங்க எப்படி எல்லாம் சமாளிச்சிருக்காங்கன்னு விசாரிச்சு பாருங்க. அப்பத்தான் தெரியும் அவங்களின் வலியும், வேதனையும். அந்த வேதனைகளை சாதனைகளா மாத்தித்தான் அவங்க இன்னைக்கு புகழின் உச்சியில் நின்னுகிட்டிருப்பாங்க.

செக்கச் செவேல்னு ரோஸ் நிறத்துல இருந்த எம்ஜிஆர் சூப்பர் ஸ்டாரா இருந்த தமிழ் சினிமாவில் அந்த இடத்தை கருப்பு ரஜினி எப்படி பிடித்தார். நடிகர்னா நல்லா கலரா இருக்கணும்ன்ற எழுதப்படாத விதியை எப்படி அவர் உடைத்தெறிந்தார். தனது வசீகர ஸ்டைல் என்ற ஆயுதத்தை ரஜினி எடுத்தபோது அதை எதிர்த்து நின்று ஜெயிக்க யாராலும் முடியவில்லை.

எந்த பலமான பின்புலமும் இல்லாத வடிவேலு, தனது அசாத்திய திறமையால் மட்டுமே இன்று மீம்ஸ்களின் எவர்கிரீன் கன்டென்ட்டாக மாறி இருக்கிறார். ஆரம்ப காலங்களில் சந்தித்த அவமானங்களையும், ஏமாற்றங்களையும் தாங்கி தாங்கித்தான் வடிவேலு வைகைப் புயலாக வடிவெடுத்திருக்கிறார்.

தமிழகத்தில் அன்றும், இன்றும் சாதி அரசியல் தவிர்க்க முடியாத அங்கமாகத்தான் இருக்கிறது. ஆனால் தமிழகத்தின் முக்கியமான மூன்று முதலமைச்சர்களான எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரை எடுத்துக்கொள்ளுங்கள். இவர்கள் மூவருமே பெரும்பான்மை ஜாதியை சார்ந்தவர்கள் அல்ல. ஆனால் தங்களின் தலைமைப் பண்பால் எத்தனையோ பிரச்னைகளை எதிர்கொண்டு தமிழகத்தின் முதலமைச்சர் நாற்காலியில் பலமுறை பலமாக உட்கார்ந்திருந்தவர்கள்.

இதில் இருந்து நாம் தெரிந்துகொள்ள வேண்டிய ஒன்லைன் என்னவென்றால், சாதனையாளர்கள் சாக்குபோக்கு சொல்வதில்லை.

ஒரு தீவட்டியை எடுத்து குடிசையின் மீது வீசினால் என்னவாகும்? இது என்ன கேள்வி, குடிசை எரிந்து சாம்பலாகும். அதே தீவட்டியை ஓடும் ஆற்றில் வீசினால் என்னவாகும்? அது அணைந்துபோய் ஆற்றோடு அடித்துக் கொண்டு போய்விடும். இப்படித்தான் வாழ்க்கை நம் மீது நிறைய தீவட்டிகளை வீசும். நாம் குடிசையாக இருந்தால் எரிந்து காணாமல் போய்விடுவோம். அதுவே ஓடும் காட்டாறாக இருந்தால் தீவட்டியை அணைத்துவிட்டு பயணத்தை தொடர்ந்து கொண்டே இருப்போம். நாம் குடி சையா? கட்டற்ற காட்டாறா? என்பது நம் கையில்தான் இருக்கிறது.

- கௌதம்

English summary
If you have brilliance and talent you can win any challenge.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X