ரயில் மீது கல்வீசி தாக்குதல்.. பாமகவினர் 300 பேர் மீது தாம்பரம் ரயில்வே போலீஸ் வழக்குப் பதிவு
சென்னை: ரயில் மறியல் போராட்டத்தின் போது வண்டலூர் இரணியம்மன் கோயில் அருகே ரயில் மீது கற்களை வீசி தாக்கியதாக பாமகவினர் 300 பேர் மீது தாம்பரம் ரயில்நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் வன்னியர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு கேட்டு பாமகவினர் சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அருகே இன்று போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தனர்.
'பாமகவை தடை செய்யுங்கள்..' 'இடப்பங்கீடு அவசியம்..' டுவிட்டரில் மாறி மாறி டிரெண்ட்

இந்த நிலையில் சென்னை நோக்கி வந்த ஆயிரக்கணக்கான பாமகவினரை போலீஸார் வழிமறித்து கைது செய்தனர். இதனை கண்டித்து பாமக தொண்டர்கள் ரயில் மறியல் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

2 மணி நேரத்திற்கும் மேலாக நடத்தப்பட்ட இந்த போராட்டத்தால் முக்கிய சாலைகளில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் வண்டலூர் இரணியம்மன் கோயில் அருகே ரயில் மீது பாமகவினர் கல்வீசி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. மேலும் பேரிகாடுகளையும் உடைத்ததாக புகார் எழுந்துள்ளது.

இதையடுத்து தாம்பரம் ரயில் நிலைய அதிகாரி அன்பழகன் ரயில் மீது கற்களை வீசியதாக 300 பேர் மீது புகார் அளித்தார். அதன் பேரில் ரயில் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.