சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழுக்கு தீங்கு.. அக்கினி நட்சத்திர வீதிகளில் இறங்கி போராடுவோம்.. அரசுக்கு வைரமுத்து எச்சரிக்கை

Google Oneindia Tamil News

சென்னை: தமிழுக்கு தீங்கு வந்தால், அக்கினி நட்சத்திர வீதிகளில் இறங்கி போராடுவோம் என்று கவிஞர் வைரமுத்து அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பாடத் திட்டங்களில் மாற்றம் கொண்டுவந்து தமிழ் அல்லது ஆங்கிலம் ஆகிய இரு மொழிப் பாடங்களில் ஏதாவது ஒன்றை மட்டும் எடுத்தால் போதும் என்று பள்ளிக் கல்வித்துறை, அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.

மேலும், தமிழ் 2ம் தாள் மற்றும் ஆங்கிலம் 2ம் தாள் ஆகியவற்றையும் நீக்கிவிட முடிவு செய்ததுள்ளதாகவும், அந்த தகவலில் கூறப்பட்டது.

கவலையோடு கண்டிப்பு

கவலையோடு கண்டிப்பு

இந்த நிலையில், வைரமுத்து ஒரு பரபரப்பு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அவர் கூறியுள்ளதாவது: 11 மற்றும் 12ஆம் வகுப்பு மொழிப் பாடத்தில் தமிழ் அல்லது ஆங்கிலம் ஏதேனும் ஒரு மொழியைத் தேர்வு செய்து தேர்வு எழுதினால் போதும் என்ற பள்ளிக் கல்வித்துறையின் பரிந்துரையை நான் கவலையோடு கண்டிக்கிறேன்.

விதை நெல்

விதை நெல்

தமிழ்ப் பயிர் ஆயிரமாயிரம் ஆண்டுகள் செழிப்பதற்கு நாங்கள் விதைநெல்லாக நம்பி இருப்பது பள்ளித் தமிழைத்தான். இப்போது விதை நெல்லை ஏன் வேக வைக்கப் பார்க்கிறீர்கள்? தமிழ்நாட்டில் தமிழ் கட்டாயம்; பிறமொழிதான் விருப்பம் என்பதே தாய்மொழி நியாயம். ஒரு மனிதனுக்குத் தாய் என்பவள் கட்டாயம்; மனைவி என்பவள்தான் விருப்பம்.

இருமொழிக் கொள்கை

இருமொழிக் கொள்கை

தமிழோடு ஆங்கிலம் என்ற அண்ணாவின் இருமொழிக் கொள்கைதான் தமிழர்களின் காலத்தேவையாக இருக்கிறது. தமிழை விருப்பப் பாடப்பட்டியலில் விட்டுவிட முடியாது. சுமையைக் குறைப்பதற்கான வழிமுறை மொழியைக் குறைப்பதுதான் என்கிறது பரிந்துரை. தலை கனமாக இருக்கிறது என்பதற்காகத் தலையைக் குறைக்க முடியுமா? தொழிற்கல்வியிலேயே தமிழுக்கு இடம் வேண்டும் என்று போராடுகிற நாம் பள்ளிக் கல்வியிலும் தமிழை இழந்துவிட வேண்டுமா?

ரத்த அழுத்தம்

ரத்த அழுத்தம்

இந்தச் செய்தி கேட்ட நேரத்திலிருந்து என் இரத்த அழுத்தம் கூடியிருப்பதாய் என் இதயத் துடிப்பு உணர்த்துகிறது. வேண்டாம்; இந்த விஷச்செடி முள்ளாவதற்கு முன்பே முறித்துவிடுங்கள். தமிழில் இரண்டாம் தாள் வேண்டாம் என்பதையும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஒரு மாணவனின் கற்பனையும் படைப்பாற்றலும் மொழித்திறனும் இரண்டாம் தாளில்தான் வினைப்படுகின்றன. கண்களில் ஒன்றுபோதும் என்று ஒன்றைக் களைந்துவிடுவீர்களா? பள்ளிக் கல்வியில் தமிழைத் தழைக்க வைப்பதற்கு மாறாக அதன் அடிவேரில் அமிலம் ஊற்றுவதை அனுமதிக்க முடியாது.

நட்சத்திர வீதிகளில் ஆர்ப்பாட்டம்

நட்சத்திர வீதிகளில் ஆர்ப்பாட்டம்

தமிழக அரசு இந்தப் பரிந்துரையை நிராகரிக்க வேண்டும். அதை வற்புறுத்தித் தமிழ் அறிஞர்களையும், ஆர்வலர்களையும், அமைப்புகளையும் திரட்டி முதலமைச்சரை முதன்முதலாய்ச் சந்திக்க விழைகிறேன். தீர்வு கிட்டாவிடில் அக்கினி நட்சத்திர வீதிகளில் நாங்கள் ஆர்ப்பாட்டப் போர்ப்பாட்டுப் பாடவும் தயங்க மாட்டோம்.

English summary
Poet Vairamuthu warns Tamilnadu government for removing Tamil language subject from plus 1 and plus 2.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X