• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

கோபல்ல கிராமம்- நாவலில் கி.ரா. விவரிக்கும் வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு- கே.எஸ். ராதாகிருஷ்ணன்

|

சென்னை: வட இந்தியாவில் தொடங்கி மகாராஷ்டிரா வரை படையெடுத்து வந்த வெட்டுக் கிளிகள், 17-ம் நூற்றாண்டில் படையெடுத்தது தொடர்பாக தமது கோபல்லபுரம் படைப்பில் முதுபெரும் எழுத்தாளர் கி.ரா. பதிவு செய்துள்ளார்.

  17ம் நூற்றாண்டில் மதுரையை நாசம் செய்த வெட்டுக்கிளிகள்

  இது தொடர்பாக மூத்த வழக்கறிஞரும் சமூக செயற்பாட்டாளருமான கே.எஸ். ராதாகிருஷ்ணன் பதிவு செய்துள்ளதாவது:

  நாடு தற்போது எப்படி வெட்டுக் கிளிகளால் பேராபத்தை எதிர்கொண்டிருக்கிறதோ அதேபோல் 17-ம் நூற்றாண்டில் மதுரை மாநகரமும் பேரழிவையே சந்தித்திருக்கிறது.

  Tamil literature speaks on Locust attack

  கோபல்லபுரம் படைப்பில் கிரா வெட்டுக்கிளிகளை விட்டில்கள் என்கிறார். கி.ராவின் கோபல்லபுரம் படைப்பில் வெட்டுக் கிளிகள் குறித்து..

  திடீரென்று சூரிய வெளிச்சம் மங்கி இருட்டியது ...குப்பையில் கிளறிக் கொண்டிருந்த கோழிகள் எல்லாம் இருட்டத் தொடங்கிவிட்டது என்று நினைத்து கூடுகளை நோக்கித் திரும்பத் தொடங்கின..

  எங்கச்சி வளர்க்கும் கூண்டுக்கிளி திடீரென்று கீச்சுக் குரல் கொடுத்த அலறியது.

  என்னமோ ஏதோ என்று சீனி நாயக்கரும் , எங்கச்சியும் ஓடி வந்து முற்றத்தில் பார்த்தபோது திடுக்கிட்டுப் போனார்கள்.

  அவர்கள் பிரியமாக வைத்து வளர்த்த கருவேப்பிலை செடி மீது இலை தெரியாமல் விட்டில்கள் ( வெட்டுக்கிளிகள் ) மொய்த்துக்கொண்டிருந்தன.

  அவைகளை விட்டில்கள் என்று சொல்வதா அல்லது அதுக்கு வேறு ஏதாவது பெயர் உண்டா என்பது அவர்களுக்கு தெரியாது. பார்த்துக் கொண்டிருக்கும்போதே அந்த வளர்ப்புச் செடியில் ஒரு இலை கூட இல்லை!

  அதில் உட்கார்ந்திருந்த விட்டில் பூச்சியின் நீளம் முக்கால் சாண் ஒருச்சாண் என்றிருந்தது ! இதுக்கு முன்னால் அவர்கள் ஆயுளில் இப்படி , இத்தனை பெரிய விட்டிலைப் பார்த்தது கிடையாது ; கேள்விப்பட்டதும் கிடையாது .

  எங்கச்சி பயந்து போய் புருஷனை சேர்த்துக் கட்டிக் கொண்டாள்.

  என்ன இது ! உலகம் அழிவு காலத்துக்கு வந்துவிட்டதா ?

  உலகம் அழியப் போகும் போது மழை பெய்யுமாம் ; நாள்கணக்கில் நிற்காமல் சரமழை பெய்யுமாம் . அந்த மழைச்சரத்தின் கனம் யானைத் துதிக்கைத் தண்டி இருக்குமாம் . ஆனால் யாரும் விட்டில் பூச்சி வந்து உலகத்தை அழிக்கும் என்று சொல்லவில்லையே ?

  Tamil literature speaks on Locust attack

  அவர் மனைவியை உதறி விட்டுக் கோபத்தோடு போய் அந்த விட்டில்களை அடித்து விரட்டினார் . செழுமையான அந்தச் செடி இருந்த இடத்தில் ஒரு கம்பும் அதில் சில விளாருகளுமே நின்று கொண்டிருந்தது பரிதாபமாக இருந்தது .

  அவருக்கு தொண்டையை அடைத்தது . எந்தப்பக்கம் எங்கே திரும்பினாலும் படபடவென்ற சத்தத்துடன் அதே விட்டில்கள் .

  கோபல்ல கிராமமே ஒரு தேன்கூடு மாதிரியும் இந்த விட்டில்கள் அதில் மொய்க்கும் ஈக்களை போலவும் காட்சி தந்தது .

  கொஞ்ச நேரத்துக்கெல்லாம் மனித அபயக் குரல்கள் கர்ண கடூரமாக ஒலிக்க ஆரம்பித்தது . ஜனங்கள் நெஞ்சிலும் வாயிலும் அறைந்து கொண்டு அழும் கூக்குரல் கேட்டது .

  காடுகளில் விளைந்த கம்மங்கதிர்களுக்கு காவலாக பரன் மேல் உட்கார்ந்து கொண்டிருந்தவர்கள் திகைத்து , இறங்கி வந்து விட்டில்களை விரட்டி பார்த்தார்கள் . கம்புகளால் அடித்துப் பார்த்தார்கள். சோ சோ என்று கூப்பாடு போட்டுப் பார்த்தார்கள்.

  கதிர்களை மறைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்து விட்டில் , பிறகு கதிர் காணாமல் விட்டில் மட்டுமே கண்ணுக்குத் தெரிந்தது ! ஒவ்வொரு பயிரின் கீழிருந்து உச்சி வரைக்கும் அவைகள் மேயும் சத்தம் நெறுக் நெறுக்கென்று காடெல்லாம் ஒன்று போலக் கேட்டது .

  எதைக் கொல்லுவது ; எப்படி கொல்வது . விட்டிலைப் பிடித்தால் அதன் ரம்பம் போன்ற பின்னத்தங்கால்களால் உதைத்துக் கையை ரணமாகி விடுகிறது .

  நல்ல மனசு திரவத்தி நாயக்கர் அவருடைய புஞ்சையில் காவல் இருந்தார் . கதிர் நன்றாக விளைந்திருந்தது . அவருக்கு மட்டுமல்ல அந்த வருஷம் கிராமம் பூராவுமே அப்படி . நாளைக்குக் கதிரைப் பிரக்கணும் என்று நினைத்திருந்த போது இப்படி ஆகிவிட்டது .

  பொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்!

  நல்ல மனசு நாயக்கர் விட்டில்களை விரட்டிப் பார்த்தார் . தன்னை மூடி இருந்த துப்பட்டியை எடுத்து அவைகளை அடித்து அடித்து விரட்டினார் . அசையவே இல்லை . அடியினால் பல விட்டில்கள் விழுந்து குற்றுயிராயின் .சிலது செத்தன . ஆனால் போகவே இல்லை . அவ்வளவு பசி அவைகளுக்கு !

  தன் கண்ணெதிரே தன் சிரமப்பட்டு உண்டுபண்ணிய மகசூல் அழிய எந்த சம்சாரி தான் சம்மதிப்பான். பக்கத்துப் புஞ்சைக்காரனை துணைக்குக் கூப்பிடலாமென்றால் அங்கேயும் இதே சோகம் . நாயக்கர் ஓடி ஓடி அலுத்துப் போனார் .

  வருசத்துக்கு ஒரு மகசூல் ; அடுத்த தை மாசத்தை இனி எப்படிப் பார்க்கிறது? மனுசருக்கு உணவு இல்லை ; கால்நடைகளுக்கு கூளம் இல்லை . எல்லாம் முடிந்தது . முடிந்தது எல்லாம் .

  " அய்யோ தேவுடா ...." என்று மண்ணில் விழுந்து அழுதார் . கைக்கு கிடைத்த தின்பண்டத்தை காக்கை பறித்துக் கொண்டு ஓட கீழே விழுந்து புரண்டு அழும் குழந்தை போலிருந்தது .

  சம்சாரிகள் ஒன்றும் செய்வதறியாது காட்டிலிருந்து ஊரைப் பார்க்க ஓடி வந்தார்கள் . அவர்கள் ஓடி வரும் பாதையெல்லாம் அவர்களுடைய புஞ்சையில் பார்த்தது போலவே இருந்தது .

  வரும்போதே கம்மாய்க் கரையின் உயரமான மரங்களின் மீதெல்லாம் அதே விட்டில்கள் . இலைகள் தெரியாமல் உட்கார்ந்து கொண்டிருப்பதைப் பார்க்க முடிந்தது .

  வீட்டின் கூரைகளிலெல்லாம் விட்டில்கள் !

  பெரும்பாலானவர்கள் பயந்துபோய் வீட்டுக்குள் இருந்து கொண்டு கதவை பூட்டிக் கொண்டார்கள்.

  வந்த விட்டில்கள் , வந்தபடியே போய்விட்டது .

  அவை வந்து போனதற்கு முதல் அடையாளம் கரை மரங்களுக்குக் கீழே தரையில் அவைகளின் கழித்த எச்சங்கள் . இரண்டாவது அடையாளம் எங்கு நோக்கினும் பசுமை நீக்கம் . பச்சை என்கிற பிறப்பையே கண்ணில் காண முடிவதில்லை . தரையினுள்ளிருந்து எட்டிப்பார்த்த சிறு புல் நுனியைக்கூட அவை விட்டுவைக்கவில்லை . பனைமரங்களும் இலைகளை பறிகொடுத்துவிட்டு ராட்சத உலக்கைகளைப் போல மொட்டையாக நின்றன . கல்யாணக் கொட்டகையைப் பிரித்த வீடு மாதிரி ஊரே வெறீச் என்று களை இழந்து இருந்தது .

  யாவருக்கும் முதலில் ஒரு வியப்பும் பயமுமாக இருந்தது ; அப்புறம் தாங்கமுடியாத துக்கம் . யாருக்கு யார் ஆறுதல் சொல்ல ? யாரை இதுக்கு குற்றம் சொல்ல ?

  கிராமத்தின் துக்கம் நெஞ்சைப் பிழிவதாக இருந்தது . கோட்டையார் சகோதரர்களின் இதயம் இளகியது . அவர்கள் அனைவரையும் கூப்பிட்டு ஆறுதல் சொன்னார்கள் . அப்படிச் செய்தது அவர்களுக்கும் ஆறுதலாக இருந்தது ! தங்கள் வீட்டின் தானியக் களஞ்சியங்களை கிராமத்துக்காகத் திறந்துவிட்டார்கள் .

  " விதைக்காக , நமக்கும் , கிராமத்துக்கும் போக பாக்கி எல்லாத்தையும் எல்லாரையும் கூப்பிட்டு அளந்து கொடுத்திருங்க " என்றார் தனது சகோதரர்களிடம் கோவிந்தப்ப நாயக்கர் .

  அதோடு , கிராமத்தின் கால்நடைகளுக்காக. , பல வருஷங்களாக பிடுங்கப் படாத பெரிய பெரிய பல தட்டைப் படப்புகளையும் ,நாத்துப் படப்புகளையும் கொடுத்தார்கள் .

  17-ம் நூற்றாண்டில் மதுரை மீது வட இந்தியாவில் இருந்து படையெடுத்து சர்வநாசமாக்கிய வெட்டுக் கிளிகள்!

  எங்கட்ராயலு சொன்னார் " கோயிந்தப்பா , இந்த வருஷம் நாங்க கம்மஞ்சோத்தை கட்டியாய் சாப்பிடுறதுக்குப் பதிலா ,கரைச்சியாவது குடிக்கிறோம் உங்க புண்ணியத்திலெ " என்றார் .

  " அதெப்படி ; எங்கள்ட்டெ இருந்தா மட்டும் அது எங்களது ஆயிருமா ? அந்த நாள்ளெ எல்லாருடைய பெரியாட்களும் சேர்ந்துதான் இந்தக் கள்ளிக்காட்டை திருத்தி நிலமாக்கினாக '' என்றார் கோவிந்தப்ப நாயக்கர் அடக்கத்தோடு.

  " விட்டில் பஞ்சம் " ஏற்பட்ட போது கோட்டையார் செய்த உதவி கிராமத்துக்கு ஓரளவு நிவாரணம் தந்ததே தவிர அவர்களின் பெருங்கஷ்டத்தை நீக்குவதாக இல்லை.

  இவ்வாறு கே.எஸ். ராதாகிருஷ்ணன் பதிவிட்டுள்ளார்.

   
   
   
  English summary
  Tamil literatures registered the Locust attack in 17 A.D.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more