மக்களிடம் வருமானம் இல்லை.. சுங்கச்சாவடி கட்டண உயர்வு வேண்டாம்: மத்திய அரசுக்கு ஜி.கே.வாசன் கோரிக்கை
சென்னை: தமிழ்நாட்டிலுள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணத்தை உயர்த்த வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியான நிலையில், சுங்கக் கட்டணத்தை உயர்த்தக் கூடாது என்று, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் கேட்டுக் கொண்டுள்ளார்.
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய அரசு தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களின் நலன் கருதி சுங்கச்சாவடிகளில் வாகனங்களுக்கான சுங்கக் கட்டணம் உயராமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்நாட்டின் இந்த 9 மாவட்டங்களில்.. 2 நாட்களுக்கு மழை கொட்ட போகுது.. வானிலை மையம் ஜில்லென்ற செய்தி!
தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் தமிழகத்தில் உள்ள 14 சுங்கச்சாவடிகளில் வருகின்ற செப்டம்பர் 1ம் தேதி முதல் சுங்கக்கட்டணத்தை உயர்த்த இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அதாவது 8 சதவீதம் வரை கட்டணம் உயரலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

வருவாய் பிரச்சினை
கடந்த ஒன்றரை ஆண்டுக்கும் மேலாக கொரோனா தொற்றுநோயின் தாக்கத்தால் தொழில்கள் பாதிக்கப்பட்டு, வேலைவாய்ப்பை இழந்து, அனைத்துதரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். வருமானம் ஈட்ட முடியாமல் சிரமப்படுகின்றனர். இந்நிலையில் சுங்கச்சாவடிகளை கடந்து செல்லும்போது வாகனங்களுக்கு சுங்கக்கட்டணம் வசூல் செய்வதால் வாகன உரிமையாளர்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படுகிறார்கள்.

கால நேரத்தை பார்த்து செய்யுங்கள்
சுங்கக்கட்டண உயர்வு வழக்கமான ஒன்றாக இருந்தாலும் கூட கொரோனா பேரிடர் காலத்தை கவனத்தில் கொண்டு கட்டணத்தை உயர்த்தாமல் இருப்பதுதான் நியாயமானதாக இருக்கும். எனவே மத்திய அரசு கொரோனா கால பாதிப்பை கவனத்தில் கொண்டு சுங்கச்சாவடிகளில் வாகனங்களுக்கான சுங்கக்கட்டணத்தை உயர்த்தாமல் இருக்க உடனடி நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

எந்த சுங்கச்சாவடிகள்
திண்டிவனம் - உளுந்தூர்பேட்டை சாலையில் உள்ள விக்கிரவாண்டி சுங்கச் சாவடி, உளுந்தூர்பேட்டை - பாடலூர் சாலையில் உள்ள திருமாந்துறை சுங்கச் சாவடி, சென்னை - தடா சாலையில் உள்ள நல்லூர் சுங்கச் சாவடி, சேலம் - உளுந்தூர்பேட்டை சாலையில் உள்ள மேட்டுப்பட்டி சுங்கச் சாவடி, சேலம் - குமாரபாளையம் சாலையில் உள்ள வைகுந்தம் சுங்கச் சாவடி, திருச்சி - திண்டுக்கல் சாலையில் உள்ள பொன்னம்பலப்பட்டி சுங்கச் சாவடி, தஞ்சாவூர் - திருச்சி சாலையில் உள்ள வாழவந்தான்கோட்டை சுங்கச் சாவடி உள்ளிட்ட இந்த 14 சுங்க சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகின. அதேநேரம், 14 அல்ல, 23 சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயரப்போகிறது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

ராமதாஸ் அறிக்கை
"எந்தவிதமான வெளிப்படைத்தன்மையும் இல்லாமல் சுங்கக் கட்டணத்தை தொடர்ந்து உயர்த்துவது கண்டிக்கத்தக்கது. தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக 48 சுங்கச்சாவடிகள் உள்ளன. இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் சுங்கச்சாவடிகளைக் கொண்ட மாநிலங்களில் தமிழகமும் ஒன்றாகும். தமிழகத்திலுள்ள 48 சுங்கச்சாவடிகளில் கடந்த ஏப்ரல் மாதத்தில் 24 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டது," என்று பாமக நிறுவனர் ராமதாசும் ஏற்கனவே இந்த விவகாரம் தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.