சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021: 1971இல் காமராஜரும், ராஜாஜியும் இணைந்தும் வெல்ல முடியாதது ஏன்?

By BBC News தமிழ்
|

1967ஆம் ஆண்டில் வெற்றி பெற்று, சி.என். அண்ணாதுரை தலைமையில் ஆட்சியை அமைத்திருந்த தி.மு.க., மூன்று முக்கியமான வாக்குறுதிகளை நிறைவேற்றியது.

சென்னை மாநிலத்தின் பெயர் "தமிழ்நாடு" என்று மாற்றப்பட்டது. சுயமரியாதைத் திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் வழங்கப்பட்டது. பள்ளிக்கூடங்களில் தமிழ் - ஆங்கிலம் படித்தால் போதும் என்ற இரு மொழித் திட்டம் கொண்டு வரப்பட்டது.

ஆனால், அதன் முக்கிய வாக்குறுதியான, படி அரிசி திட்டத்தை முழுமையாக நிறைவேற்ற முடியவில்லை. சென்னையிலும் கோயம்புத்தூரிலும் அறிமுகப்படுத்தப்பட்டு, சில நாட்கள் செயல்பட்ட இந்தத் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்துவதில் நிதிச் சிக்கல் ஏற்பட்டது. ஆகவே படிப்படியாக திட்டம் கைவிடப்பட்டது.

இதற்கு நடுவில் தி.மு.கவின் நிறுவனரும் முதலமைச்சருமான அண்ணாவின் உடல்நலம் சீர்கெடத் துவங்கியிருந்தது. மேலும் 1968ஆம் ஆண்டின் இறுதியில் நடந்த ஒரு சம்பவம், அப்போதுதான் ஆட்சிக்கு வந்திருந்த தி.மு.கவுக்கு அரசுக்கு ஒரு கரும்புள்ளியாக அமைந்தது. அந்த ஆண்டு டிசம்பர் 25ஆம் தேதி நாகப்பட்டினம் மாவட்டம் கீழ் வெண்மணியில் 44 விவசாயத் தொழிலாளர்கள் நிலவுடமையாளர்களால் உயிரோடு கொளுத்தப்பட்டனர்.

Click here to see the BBC interactive

அந்தச் சம்பவம் நடந்த சில நாட்களிலேயே, 1969 பிப்ரவரி 3ஆம் தேதி முதலமைச்சர் அண்ணா காலமானார். இதற்குப் பிறகு, கருணாநிதி முதலமைச்சரானார்.

தேசிய அளவிலும் சில முக்கியமான சம்பவங்கள் நடந்திருந்தன. குடியரசுத் தலைவர் தேர்தலை மையமாக வைத்து, காங்கிரஸ் கட்சி Requisitionists மற்றும் Organisation என இரண்டாகப் பிளந்தது.

Requisitionists பிரிவு இந்திரா காங்கிரஸ் என்று அழைக்கப்படலாயிற்று. ஆனால், தமிழ்நாட்டில் காமராஜர் தலைமையில் இருந்த Organisation காங்கிரசிற்கே ஆதரவு அதிகமாக இருந்தது.

1967 தேர்தலில் காங்கிரஸைத் தோற்கடித்து, ஆட்சியைக் கைப்பற்றிய தி.மு.க, காங்கிரஸ் கட்சி இரண்டாகப் பிளவுபட்ட பிறகு, இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரசுடன் நெருங்க ஆரம்பித்தது. இந்திய குடியரசு தலைவர் தேர்தலில் இந்திரா காந்தியின் ஆதரவைப் பெற்றிருந்த வி.வி. கிரிக்கு தி.மு.க. வாக்களித்தது. இதற்குப் பிறகு 1969ல் சென்னைக்கு வந்த இந்திரா காந்தி அரசினர் தோட்டத்தில் நடந்த (இப்போது ராஜாஜி ஹால்) பிரமாண்ட விழா ஒன்றில் மறைந்த முதலமைச்சர் சி.என். அண்ணாதுரையின் படத்தைத் திறந்து வைத்தார்.

இதற்குப் பிறகு, நாடாளுமன்றத்தில் பிரதமர் இந்திரா காந்தி கொண்டு வந்த மன்னர் மானிய ஒழிப்பு மசோதா தோல்வியடைந்ததையடுத்து, நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு, தேர்தலை சந்திக்க முடிவு செய்தார் இந்திரா காந்தி.

1970 டிசம்பர் 8ஆம் தேதி இதற்கான அறிவிப்பு வெளியானது. ஸ்தாபன காங்கிரசும் எதிர்க்கட்சிகளும் இந்த திடீர் அறிவிப்பை எதிர்பார்த்திருக்கவில்லை. இந்திரா காந்திக்கு எதிரான எதிர்ப்பை முன்னெடுத்துச் செல்வதற்கான அகில இந்திய தலைவர்கள் யாரும் உருவாகியிருக்காத தருணத்தில், தேர்தல் அறிவிப்பை வெளியிட்டார் இந்திரா.

தமிழ்நாட்டில் 1967ல்தான் தேர்தல் நடந்திருந்த நிலையில், அடுத்த சட்டமன்றத் தேர்தல் 1972ல்தான் நடந்திருக்க வேண்டும். ஆனால், நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்த்து தமிழக சட்டமன்றத் தேர்தலையும் நடத்த முடிவுசெய்தது தி.மு.க. "சோஷலிச - மதச்சார்பற்ற கொள்கைகளை - செயல்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு மக்களிடமிருந்து புதிய கட்டளைகளைப் பெற" சட்டமன்றத்தைக் கலைப்பதாக தி.மு.க. ஆளுநரிடம் தெரிவித்தது. 1971 ஜனவரி ஐந்தாம் தேதி தமிழக சட்டமன்றம் கலைக்கப்பட்டது.

இதையடுத்து தி.மு.க. - இந்திரா காங்கிரஸ் கூட்டணி உருவானது. தி.மு.க. கூட்டணியில் இருந்த சுதந்திரா கட்சி, சி.பி.எம். ஆகியவை வெளியேறின. பிரஜா சோஷலிஸ்ட், ஐயுஎம்எல், தமிழரசுக் கழகம், ஃபார்வர்ட் பிளாக் ஆகிய கட்சிகள் தி.மு.க. கூட்டணியில் நீடித்தன. புதிதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இந்தக் கூட்டணியில் இணைந்தது.

பத்தாண்டுகளாக தொடர்ந்து தி.மு.கவை ஆதரித்துவந்த சுதந்திராவுக்கு தி.மு.கவைப் பிரிவதில் விருப்பமில்லைதான். ஆனால், இந்திராவின் இடதுசாரிக் கொள்கைகள் ராஜாஜியை எரிச்சலூட்டியிருந்தன. ஆகவே அவர், ஸ்தாபன காங்கிரசை ஆதரிக்கத் துவங்கினார். காமராஜர் தலைமையிலான ஸ்தாபன காங்கிரஸ் கூட்டணியில், சுதந்திரா கட்சி, குடியரசுக் கட்சி, சம்யுக்த சோஷலிஸ்ட், தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி, கோயம்புத்தூர் மாவட்ட விவசாயிகள் சங்கம் ஆகியவை இடம்பெற்றிருந்தன.

தி.மு.க. கூட்டணியைப் பொறுத்தவரை இ. காங்கிரசிற்கு சட்டமன்றத்தில் தி.மு.க. இடங்கள் எதையும் ஒதுக்கவில்லை. இ. காங்கிரசுடன் நடந்த முதல்கட்டப் பேச்சுவார்த்தைக்குப் பிறகுப் பேட்டியளித்த மு. கருணாநிதி, காங்கிரசிற்கு 5-7 நாடாளுமன்றத் தொகுதிகளையும் சட்டமன்றத்தில் 15 தொகுதிகள் வரை கொடுக்க முன்வந்ததாகவும் ஆனால் இதில் இ.காங்கிரஸ் தலைவர்களுக்குத் திருப்தியில்லையென்றும் தெரிவித்தார். அதற்குப் பிறகு முன்னாள் முதல்வர் பக்தவத்சலம் தி.மு.கவுடன் பேச்சுவார்த்தை நடத்தியபோது, காங்கிரசிற்கு 80க்கும் மேற்பட்ட இடங்களும் நாடாளுமன்றத்தில் 20க்கும் மேற்பட்ட இடங்களையும் தர வேண்டுமென வலியுறுத்தினார். பேச்சு வார்த்தை நின்றுபோனது.

இ. காங்கிரஸ் சார்பில் வேட்பாளர் பட்டியலும் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தி.மு.கவும் தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. கிட்டத்தட்ட தி.மு.க. - இ. காங்கிரஸ் கூட்டணி முறிந்தேவிட்ட நிலை ஏற்பட்டது.

அப்போது குறுக்கிட்ட இந்திரா காந்தி, காங்கிரசிற்கு 20 சட்டமன்றத் தொகுதிகளும் 10 நாடாளுமன்ற தொகுதிகளும் ஒதுக்க முடியுமா என கருணாநிதியிடம் கேட்டார். ஆனால், சட்டமன்றத்தில் தொகுதிகளை ஒதுக்க மறுத்த கருணாநிதி, நாடாளுமன்றத்தில் மட்டும் 10 தொகுதிகளை (புதுச்சேரி உட்பட) ஒதுக்கிக்கொடுத்தார்.

தி.மு.க 203 தொகுதிகளில் போட்டியிட்டது. சி.பி.ஐ பத்து தொகுதிகளிலும் ஃபார்வர்ட் பிளாக் ஒன்பது தொகுதிகளிலும் ஐயுஎம்எல் 8 தொகுதிகளிலும் பிரஜா சோஷலிஸ்ட் 4 தொகுதிகளிலும் தமிழரசுக் கழகம் 2 தொகுதிகளிலும் போட்டியிட்டன.

முதலமைச்சர் கருணாநிதி மீண்டும் சைதாப்பேட்டை தொகுதியிலும் எம்.ஜி.ஆர். மீண்டும் பரங்கிமலை தொகுதியிலும் ம.பொ.சி. மயிலாப்பூர் தொகுதியிலும் போட்டியிட்டனர். ஸ்தாபன காங்கிரசின் தலைவராக இருந்த காமராஜர், சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை. நாகர்கோவில் மக்களவைத் தொகுதியிலிருந்து அவர் போட்டியிட்டார்.

இதற்கிடையில், 1971ஆம் ஆண்டு ஜனவரியில் திராவிடர் கழகம் சார்பில் நடந்த மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டில் நடந்த ஒரு சம்பவம் தி.மு.க. கூட்டணிக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியது. இந்த ஊர்வலத்தில் ராமர் படம் அவமதிக்கப்பட்டதாகக் கூறி, எதிர்க்கட்சிகள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தின. திராவிடர் கழகம் ராமர் படத்தை அவமதிப்பதை தி.மு.க. தடுக்கவில்லையென குற்றம்சாட்டினார் ராஜாஜி.

இந்த விவகாரம் தேர்தல் பிரச்சாரத்தில் முக்கியமான சர்ச்சையாக உருவெடுத்தது. இதையடுத்து காமராஜர், ராஜாஜி கலந்துகொண்ட ஊர்வலங்களுக்கு பெரும் எண்ணிக்கையில் கூட்டம் திரண்டது. காங்கிரஸ் கட்சியில் ஒன்றாக இருந்தபோதுகூட காமராஜரும் ராஜாஜியும் ஒன்றாக பிரச்சாரத்தில் ஈடுபட்டதில்லை. ஆனால், இப்போது ஈடுபட்டனர். சென்னை கடற்கரையில் நடந்த பிரம்மாண்டமான கூட்டத்தில் காமராஜருக்கு திலகமிட்டு ஆசி வழங்கினார் ராஜாஜி.

ஒரு கட்டத்தில், 'ராஜாஜி மீண்டும் முதல்வராகத் தயாராக இருக்க வேண்டும்' என வேடிக்கையாகச் சொன்னார் காமரஜார். ஆனால், இந்தத் தேர்தலில் ஸ்தாபன காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெற்றிருந்தால், காமராஜரின் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த ஆர். வெங்கட்ராமன்தான் முதல்வராக இருக்க வேண்டுமென ராஜாஜியும் காமராஜரும் முடிவுசெய்திருந்ததாக தனது Modern South India நூலில் குறிப்பிடுகிறார் ராஜ்மோகன் காந்தி.

நடிகர் சிவாஜி கணேசன் ஸ்தாபன காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவாக திருத்தணி முருகன் கோவிலுக்குச் சென்றுவிட்டு, கையில் வேலுடன் பிரச்சாரத்தைத் துவக்கினார். தி.மு.க. கூட்டணியை பெரியார் ஆதரித்தாலும், இந்த விவாரத்தைவைத்து பிரச்சனை ஏற்படக்கூடும் என்பதால் பிரச்சாரத்திலிருந்து பெரியார் ஒதுங்கிக் கொண்டார். இந்தத் தேர்தலில் தி.மு.க. வெற்றிக்காக தீவிரமாக பிரச்சாரத்தில் களமிறங்கினார் எம்.ஜி.ஆர்.

தேர்தல் களம் ஸ்தாபன காங்கிரஸின் ஜனநாயக முன்னணிக்கே சாதகமாக இருப்பதைப் போன்ற தோற்றம் உருவானது. மத்தியில் இந்திராவின் தோல்வியும் தமிழ்நாட்டில் தி.மு.கவின் தோல்வியும் உறுதியென கணிப்புகள் வெளியாகின.

சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையில் மாற்றமிருக்கவில்லை. மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 190 தொகுதிகள் பொதுத் தொகுதிகளாகவும் 42 தொகுதிகள் பட்டியலினத்தினருக்கென்றும் 2 தொகுதிகள் பழங்குடியினருக்கென்றும் ஒதுக்கீடு செய்யப்பட்டன. மொத்தமாக 1406 பேர் களத்தில் இருந்தனர். பெரும்பாலான தொகுதிகளில், அதாவது 157 தொகுதிகளில் அதிகபட்சமாக 3 பேரே போட்டியில் இருந்தனர். மொத்தம் பத்துத் தொகுதிகளில் மட்டுமே ஆறு முதல் எட்டு வேட்பாளர்கள் களத்தில் இருந்தார்கள். அதிக எண்ணிக்கையாக செங்கல்பட்டிலும் ஸ்ரீவைகுண்டத்திலும் 8 பேர் போட்டியிட்டனர்.

1971ஆம் ஆண்டு மார்ச் 1, மார்ச் 4, மார்ச் 7 என மூன்று கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. மார்ச் 10 மற்றும் 11 தேதிகளில் வாக்குகள் எண்ணப்பட்டன. தேர்தல் முடிவுகள் வெளிவந்தபோது தி.மு.க. - இ. காங்கரஸ் கூட்டணி அபார வெற்றிபெற்றிருந்தது. சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. மட்டும் 184 இடங்களில் வெற்றிபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 8 இடங்களிலும் ஃபார்வர்ட் பிளாக் 7 இடங்களிலும் பிரஜா சோஷலிஸ்ட் கட்சி 4 இடங்களிலும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 6 இடங்களிலும் தமிழரசுக் கழகம் ஒரு இடத்திலும் வெற்றிபெற்றது.

ஸ்தாபன காங்கிரஸ் கூட்டணியைப் பொறுத்தவரை, ஸ்தாபன காங்கிரசிற்கு 15 இடங்களிலும் சுதந்திரா கட்சிக்கு 6 இடங்களிலுமே வெற்றி கிடைத்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஜனசங்கம் ஆகியவை போட்டியிட்ட எல்லா இடங்களிலும் தோல்வியடைந்தன. நாடாளுமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை, காமராஜர் போட்டியிட்ட நாகர்கோவில் தொகுதியைத் தவிர, அனைத்துத் தொகுதிகளிலும் இந்திரா காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணி வெற்றிபெற்றிருந்தது.

ராமர் படம் அவமதிக்கப்பட்ட விவகாரம் தேர்தல் பிரச்னையாக உருவெடுத்திருந்ததால், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு கருணாநிதிக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பிய பெரியார், "என் மீதிருந்த பழி நீங்கியது. உங்களுக்குப் புகழ் கிடைத்தது" என்று குறிப்பிட்டார்.

மார்ச் 15ஆம் தேதி இரண்டாவது முறையாக தமிழக முதல்வராகப் பதவியேற்றார் மு. கருணாநிதி. தி.மு.கவின் வெற்றிக்காக கடுமையாக உழைத்த எம்.ஜி.ஆர். இந்த அமைச்சரவையில் தனக்கு சுகாதாரத்துறை அமைச்சராக இடம்தர வேண்டுமென கோரினார். ஆனால், எம்.ஜி.ஆர். நடிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டுமென குறிப்பிட்டார் கருணாநிதி. இதனால், அவரது பெயர் அமைச்சரவையில் இடம்பெறவில்லை.

புதிய அமைச்சரவையில் மு. கருணாநிதி தவிர, 13 பேர் இடம்பெற்றனர். எம்.ஜி.ஆர். கோரிய சுகாதாரத்துறை என்.வி. நடராசனுக்கு ஒதுக்கப்பட்டது. எம்.ஜி.ஆரின் விரோதியாகக் கருதப்பட்ட சி.பா. ஆதித்தனாருக்கு கூட்டுறவுத் துறை ஒதுக்கப்பட்டது.

இதுவரை நடந்த தேர்தல்களில் தி.மு.க. அதிக இடங்களைப் பிடித்தது இந்தத் தேர்தலில்தான். ஆனால், தி.மு.க. உடைவதற்கான வித்தும் இந்த வெற்றியில் இருந்தது.

BBC Indian Sports Woman of the Year
BBC
BBC Indian Sports Woman of the Year

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

BBC Tamil
English summary
முதலமைச்சர் சி.என். அண்ணாதுரையின் மறைவுக்குப் பிறகு 1971ல் நடந்த சட்டமன்ற தேர்தல், தி.மு.கவுக்கு அதீத பலத்தைக் கொடுத்தது. பிறகு தி.மு.க. உடையவும் காரணமாக இருந்தது. இந்தத் தேர்தலின்போது நடந்தது என்ன?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X