• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

"ஆன்மீக அரசியலை" நோக்கி நகர்கிறதா பாமக.. ரஜினி, திருமாவுடன் கை கோர்ப்பாரா டாக்டர் ராமதாஸ்?

|

சென்னை: டாக்டர் ராமதாஸ் அன்னைக்கு வாயை ஏன் திறக்கவில்லை என்று இப்போதுதான் புரிகிறது... வரும் சட்டசபை தேர்தலில், நடிகர் ரஜினியின் ஆன்மிக அரசியல் மாற்றத்திற்கு, பாமக ஆதரவு அளிக்க வாய்ப்பு உள்ளதாக சொல்கிறார்கள்.... அதனால்தான் ஒரு பக்கம் பாஜகவையும், இன்னொரு பக்கம் ரஜினியையும் விட்டுவிடாமல் ஜாக்கிரதையாக காய் நகர்த்தி வருவதாக பரபரப்பாக பேசப்படுகிறது.

டாக்டர் ராமதாஸை பொறுத்தவரை ஆரம்பத்தில் இருந்தே ரஜினியை எதிர்ப்பவர்.. குறிப்பாக நெய்வேலி போராட்டத்தில் ரஜினியை அதிகம் சீண்டியது ராமதாஸ்தான்... 2004 தேர்தலின்போது பாமக அப்போது திமுக கூட்டணியில் இருந்தது.

Tamil Nadu Assembly election: Will PMK allign with Rajinikanth

தேர்தல் நெருங்கும் நேரத்தில் திருவண்ணாமலையில் ராமதாஸ் பேசிய பேச்சு ஏகத்துக்கும் ரஜினியை மட்டுமல்ல அவரது ரசிகர்களையும் கொதிக்க வைத்தது. அப்போது ரஜினி, ராமதாசுக்கு எதிராக ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார்.

அதில் "ஒரு பெரியவருக்கு, ஒரு படித்தவருக்கு, ஒரு பெரும் கட்சித் தலைவருக்கு இதுதான் அழகா? நியாயமா? என்னையும் என் ரசிகர்களையும் கடுமையாக விமர்சிக்கலாமா? அரசியலில் எனக்குப் பிடிக்காதது இரண்டு. ஒன்று ஊழல், இன்னொன்று வன்முறை. டாக்டர் ராமதாஸ் வன்முறையின் ராஜாவாக திகழ்கிறார். அரசியல் என்ற பெயரில் இம்மாதிரியான ராட்சஸ செயல்களிலும், அராஜகங்களிலும், வன்முறைகளிலும் ஈடுபடும் டாக்டர் ராமதாசை என்னுடைய தனிப்பட்ட பாதிப்புக்காக நான் எதிர்க்கவில்லை. இப்படிப்பட்ட அரசியல்வாதிகள் இருப்பதால்தான் நல்லவர்களும் அரசியலுக்கு வர அஞ்சுகின்றனர்" என்று அந்த அறிக்கை நீளும்!

இப்போது இந்த அறிக்கைக்கும், தற்போதைய பாமகவின் அணுகுமுறைக்கும் நிறைய முரண்பாடுகள் உள்ளதாக தெரிகிறது.. இந்த சூழலில்தான் ரஜினியின் அரசியல் வருகை பரபரப்பாக சில மாதங்களுக்கு முன்பு பேசப்பட்டது.. ரஜினியுடன் கூட்டணி சேருகிறீர்களா என கேள்விக்கு, சிரித்த முகத்துடன், "அவர் கட்சி தொடங்கட்டும் யோசிக்கலாம்" என்று சொன்னாரே தவிர, கூட்டணியே கிடையாது என்று உறுதியாக சொல்லவில்லை.. அதனால், ரஜினியுடனான கூட்டணிக்கு பாமகவின் சமிஞ்கையாக இது இருக்கலாம் என்று கருதப்பட்டது,

தற்போது ரஜினி எப்படியும் நவம்பரில் கட்சி ஆரம்பித்துவிடுவார் என்ற தகவல் வெளியாகி வரும் நிலையில், மறுபடியும் ராமதாஸ் கூட்டணி குறித்த சில விஷயங்களும் கசிந்து வருகின்றன.. இந்த கொரோனா காலத்திற்கு முன்பு, ரஜினியும், அன்புமணியும் சந்தித்து பேசி கொண்டதாகவும் அவரது கட்சியுடன் பாமக கூட்டணி அமைக்கும் வாய்ப்பு உள்ளது என்ற தகவலும் வெளியானது.

வரப்போகும் தேர்தலை பொறுத்தவரை, திமுக, அதிமுக 2 கட்சிகளையுமே ராமதாஸ் சீண்டியே வருகிறார்.. டாஸ்மாக், இட ஒதுக்கீடு, நீட் தேர்வு போன்ற பிரச்சனைகளை கூட்டணியில் உள்ள அதிமுக மீது எழுப்பி வரும் ராமதாஸ், ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக செயல்பட தவறிவிட்டார் என்று திமுகவைம் சாடி வருகிறார். அதாவது, திமுக, அதிமுக 2 கட்சிகளுமே அதிருப்திக்கு ஆளானவை என்பதே பாமகவின் சாராம்சமாக பார்க்கப்படுகிறது. மேலும், மக்கள் புதிய சக்தியை எதிர்பார்ப்பதாகவும், அந்த சக்தி ரஜினி தான் என்றும் ராமதாஸ் கருதுவதாக தெரிகிறது.. குறிப்பாக ரஜினியின் ஆன்மீக அரசியலை ராமதாசும் ஆதரிக்கிறார் என்று சொல்கிறார்கள்.

பாமக அதிமுகவுடன் நீடிக்கலாம் அல்லது ரஜினியுடன் இணைந்து தேர்தலை சந்திக்கலாம் என்று யூகிக்கப்படுகிறது.. தேர்தலுக்கு பின்னரும் பாஜகவுக்கு ஆதரவாக இவர்கள் செயல்படுவார்கள் என்றாலும், தேர்தல் சமயத்தில் பாஜக ஆதரவு போல காட்டிக் கொள்ள மாட்டார்கள்.. காரணம் ஓட்டு விழாது என்பது பாமக நன்கு அறிந்து வைத்திருக்கும் உண்மையாகும். பாஜகவும் கூட இந்த திட்டத்திற்கு உடன்படும். காரணம், அதற்கும் தேர்தலுக்கு பிந்தைய ஆதரவுதான் தேவை.

நீட் தேர்வு: தமிழகத்தில் தொடரும் மாணவர்களின் தற்கொலைகள்.. ரஜினிகாந்த் மவுனம் காப்பது ஏன்?

ஆனால் எப்போதுமே பாஜகவுடன் ஒரு இணக்கமான போக்கை பாமக கையாண்டு வருகிறது.. தமிழக நலன் சார்ந்த சில விஷயங்களில் ராமதாஸ் விட்டுத்தருவது கிடையாது என்றாலும், அன்புமணியை முதல்வராக்குவது என்ற நீண்ட கால இலக்குடன் பாமக உள்ளது.. ஒவ்வொரு முறை தேர்தலின்போதும், இதற்கான முயற்சியிலும், இலக்கிலும் அது மிக மிக தெளிவாகவே உள்ளது. அதனால்தான் பெரிய அளவிலான வெறுப்பினை பாஜக பக்கம் உமிழாமல் உள்ளது.. பாஜகவுக்கு நெருக்கமான ரஜினியின் வருகை, தங்கள் நீண்ட நாள் கனவை நனவாக்கும் என்றும் பாமக நம்புகிறதாகவே தெரிகிறது.. ரஜினியின் வாயாலேயே அன்புமணியை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வைக்கவும் வாய்ப்புகள் உள்ளன என்பதையும் மறுக்க முடியாது.

இதில் இன்னொன்றையும் சொல்ல வேண்டி உள்ளது... திருமாவளவன் எங்களுக்கு எதிரி அல்ல என்று ராமதாஸ் ஒரு தனியார் டிவிக்கு அளித்த பேட்டியில் சொல்லி உள்ளார்.. அப்படி என்றால், இவ்வளவு காலமாக இழுத்து பிடித்து கொண்டு வந்த ஜாதி வெறுப்பு அரசியலையும், ராமதாஸ் கைவிட்டுள்ளதாகவும் தெரிகிறது... ஏன் ராமதாஸ் இப்படி சொன்னார் என்ற அர்த்தம் எளிதாக புரியவில்லை என்றாலும், பாமகவின் கடந்த கால நிலைப்பாடுகள் ஒவ்வொன்றாக மாறி வருவது அனைவரையும் கவனிக்க வைத்து வருகிறது. மேலும் ரஜினியுடன் திருமாவளவன் பேசியதாக முன்பு செய்திகள் வெளியானதும் நினைவிருக்கலாம்.

எல்லாம் சரி.. ரஜினி ரசிகர்களும், பாமக தொண்டர்களும் இணக்கமாக, எல்லாவற்றையும் மறந்துவிட்டு களவேலைகளில் இறங்குவார்களா? அல்லது விசிகவினரும் வன்னியர்களும் பகைமையை மறந்து நட்பு பாராட்டுவார்களா என்பதுதான் தெரியவில்லை.. அதை விட முக்கியமாக இந்த திடீர் கூட்டணியை மக்கள் ஏற்று வாக்களிப்பார்களா என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 
 
 
English summary
Tamil Nadu Assembly election: Will PMK allign with Rajinikanth
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X