துபாய் சுற்றுப் பயண வெற்றி.. அமெரிக்கா, தென் கொரியா செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்? அமைச்சர் தகவல்
சென்னை: அமெரிக்கா, தென் கொரியா ஆகிய நாடுகள் முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்திருக்கின்றன, விரைவில் அவரது பயணம் குறித்து அறிவிக்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்று முதல் வெளிநாட்டு பயணமாக கடந்த வாரம் துபாய் சென்றிருந்தார். தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க அன்று செல்வதாக கூறியிருந்தார்.
4 நாட்கள் பயணமாக துபாய் சென்ற அவர், இரு நாட்கள் துபாயிலும் 2 நாட்கள் அபுதாபியிலும் இருந்தார். அங்கு தொழிலதிபர்கள், முதலீட்டாளர்களை சந்தித்தார். எதிர்க்கட்சிகளின் பல்வேறு விமர்சனங்களுக்கு இடையே துபாய் பயணம் முடிந்தது.
தொகுதி மாறணுமோ! எனக்கு பயமா இருக்கு! கிருத்திகா பற்றி திடீரென பேசிய உதயநிதி ஸ்டாலின்.. என்னாச்சு?

துபாய் பயணம்
துபாய் பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பிய முதல்வர் ஸ்டாலின் தமிழகத்தில் ரூ 6100 கோடி மதிப்பிலான முதலீடுகளை ஈர்த்தார். இதன் மூலம் 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்றும் முதல்வர் தெரிவித்தார்.

கடும் விமர்சனம்
துபாய் பயணம் இன்ப சுற்றுலா என்றும் தங்கள் பணத்தை முதலீடு செய்ய குடும்பத்தினருடன் முதல்வர் ஸ்டாலின் சென்றதாகவும் பாஜகவும் அதிமுகவும் கடுமையான குற்றச்சாட்டை முன் வைத்தன. அதற்கெல்லாம் முதல்வரும் அமைச்சர்களும் பதில் அளித்துவிட்டனர்.

முதல்வர் ஸ்டாலின்
இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் விரைவில் அமெரிக்கா, தென்கொரியா ஆகிய நாடுகளுக்கும் செல்ல இருக்கிறார். இதுகுறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், அமெரிக்கா, தென்கொரியா உள்ளிட்ட நாடுகள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்துள்ளன.

அமெரிக்கா சுற்றுப்பயணம்
அவரது அடுத்த கட்ட சுற்றுப் பயணம் தொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும். கடந்த 2021 ஏப்ரல் முதல் டிசம்பர் வரை அன்னிய நேரடி முதலீடு 41 சதவீதம் அதிகரித்திருப்பதாக மத்திய அரசின் புள்ளி விவரம் கூறுகிறது என்றார் தங்கம் தென்னரசு. துபாய்க்கு தொழில் துறை அமைச்சர் என்ற முறையில் தங்கம் தென்னரசுவும் சென்றிருந்தார்.