3 முறை முதல்வர்... வெற்றியை மட்டுமே ருசித்த ஓபிஎஸ் மீண்டும் போடி தொகுதியில் போட்டி - பயோடேட்டா
சென்னை: தமிழகத்தின் துணை முதல்வராகவும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராகவும் உள்ள ஓ.பன்னீர் செல்வம் மீண்டும் போடி தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிடுகிறார். ஓபிஎஸ் என்று பரவலாக அனைவராலும் சொல்லப்படும் ஓ.பன்னீர் செல்வம் இதுவரை தான் போட்டியிட்ட தேர்தல்களில் வெற்றியை மட்டுமே சுவைத்துள்ளார். ஓபிஎஸ் இதுவரை ஒருமுறைக்கூட தோல்வியடைந்ததில்லை.
எம்ஜிஆர், என்டிஆர் வரிசையில் ஓபிஎஸ் என்ற மூன்றெழுத்தும் அதிகம் உச்சரிக்கப்பட்ட எழுத்துக்கள். ஓபிஎஸ் தனது 31வது வயதில் அரசியலில் அடியெடுத்து வைத்தார், 1982ல் நகர எம்.ஜி.ஆர் இளைஞரணி துணை செயலாளர் ஆனார். இப்போது அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராகவும் துணை முதல்வராகவும் பதவி வகிக்கிறார். போடி நாயக்கனூர் தொகுதியில் மீண்டும் வேட்பாளராக போட்டியிடுகிறார்.

தமிழக- கேரள எல்லையில் அமைந்துள்ளது போடி சட்டமன்ற தொகுதி. இங்கு போடிநாயக்கனூர் தாலுகா, தேனி தாலுகாவின் குறிப்பிட்ட சில பகுதிகள் கொடுவிலார்பட்டி, கோவிந்தநகரம், தாடிச்சேரி, தப்புக்குண்டு, உப்பார்பட்டி, கோட்டூர், சீலையம்பட்டி, பூமலைக்குண்டு மற்றும் ஜங்கால்பட்டி வருவாய் கிராமங்கள், பழனிசெட்டிபட்டி, வீரபாண்டி, குச்சனூர், மார்க்கையன்கோட்டை பேரூராட்சி, பொட்டிபுரம், சங்கராபுரம், பூலாநந்தபுரம், புலிக்குத்தி வருவாய் கிராமங்களின் குறிப்பிட்ட சில பகுதிகள் அடங்குகிறது.
ஓ.பன்னீர் செல்வம் பயோடேட்டா
ஓ.பன்னீர்செல்வம் 1951ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதி தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பிறந்தார். இவரது அப்பா ஓட்டக்காரத்தேவர். அம்மா பழனியம்மாள். ஓ.பன்னீர்செல்வம் உள்பட ஐந்து சகோதரர்கள், நான்கு சகோதரிகள்.
பன்னீர்செல்வத்திற்கு அவரது அப்பா தனது குல தெய்வமான பேச்சியம்மன் பெயரை நினைவில் கொண்டு 'பேச்சிமுத்து' என பெயரிட்டார். பின்னர் பன்னீர்செல்வம் என பெயர் மாற்றப்பட்டது. ஓ.பன்னீர்செல்வத்திற்கு தற்போது வயது 70.
தேனி மாவட்டம் உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் கல்லூரியில் பி.ஏ வரலாறு படித்தார். இவரது மனைவி பெயர் விஜயலட்சுமி. இவர்களுக்கு கவிதாபானு என்ற மகளும் ரவீந்திரநாத் குமார், ஜெயபிரதீப் என்ற மகன்களும் உள்ளனர்.
ஒருங்கிணைந்த திமுகவின் தொண்டராக 1969ல் தனது 18வயதில் அரசியல் வாழ்க்கையை துவங்கினார் பன்னீர்செல்வம்.
பி.ஏ.வரை படித்திருந்தாலும் பிழைப்பிற்காக பால் பண்ணை நடத்தினார். பின்னர், தனது நண்பருடன் சேர்ந்து பெரியகுளத்தில் டீக்கடை ஆரம்பித்தார்.
அது ஏன் 6 பேர் மட்டும்?.. ஸ்டார் வேட்பாளர்களை முதல் ஆளாக அறிவித்த அதிமுக.. ஜெ பாணியில் ராஜதந்திரம்!
- 1987ல் எம்ஜிஆர் இறந்தபிறகு, ஜெயலலிதா, ஜானகி என அதிமுக இரண்டானது. ஜானகி அணியில் புகழோடு இருந்த கம்பம் செல்வேந்திரன் புண்ணியத்தில் பெரியகுளம் ஜானகி அணிக்கு ஓபிஎஸ் நகர செயலாளரானார்.
1989ல் நடந்த சட்டசபைத் தேர்தலில் சிவாஜி கட்சியான தமிழக முன்னேற்ற முன்னணி சார்பில் போட்டியிட்ட வேட்பாளருக்கு ஆதரவாக பணிபுரிந்தார். 1991ல் அதிமுக ஒருங்கிணைந்தது. இதையடுத்து முதன்முதலில் பெரியகுளம் நகர கூட்டுறவு வங்கியின் இயக்குநரானார்.
பெரியகுளம் தொகுதியில் 2 முறை வெற்றி பெற்ற ஓ.பன்னீர் செல்வம் கடந்த 2011ஆம் ஆண்டு போடி நாயக்கனூர் தொகுதிக்கு மாறினார். போடி சட்டசபைத் தொகுதியில் தற்போது மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார் ஓ.பன்னீர் செல்வம். தான் போட்டியிட்ட தேர்தல்களில் ஒருமுறை கூட தோல்வியடையான ஓ.பன்னீர் செல்வம் இந்த முறை அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற நட்சத்திர அந்தஸ்துடன் களமிறங்குகிறார்.