தமிழகத்தில் 'இயற்கை வளத்துறை' என்ற புதிய துறை உருவாக்கம்.. உருவாக்கப்பட்ட காரணம் தெரியுமா?
சென்னை: தமிழகத்தில் 'இயற்கை வளத்துறை' என்ற புதிய துறையை உருவாக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதேபோல் 3 அமைச்சர்கள் வசம் இருந்த சில துறைகளையும் அரசு மாற்றியமைத்துள்ளது.
அதாவது தொழில் துறையில் இருந்து சுரங்கங்கள் மற்றும் கனிம வளங்கள் துறை பிரிக்கப்பட்டு, இயற்கை வளத்துறை என்ற புதிய துறை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த துறையை நீர் வளத்துறை அமைச்சரான துரைமுருகன் கவனிப்பார் என்று கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சிக்கு வந்து பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. முதல்வர் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த குறுகிய காலத்திலேயே இந்தியாவில் சிறந்த முதல்வர் என்னும் அளவுக்கு பெயெரெடுத்து விட்டனர்.

'இயற்கை வளத்துறை'
இதேபோல் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் செயல்பாடுகளும் சிறப்பாக இருப்பதாக மக்கள் கூறுகின்றனர். இதனால் தமிழக அமைச்சரவையில் எந்த மாற்றமும் செய்யப்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில்தான் இயற்கை வளத்துறை என்னும் புதிய துறையை அரசு உருவாக்கி உள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் கூறி இருப்பதாவது:-

அரசின் வருவாயைப் பெருக்க..
தொழில் துறையில் இருந்து சுரங்கங்கள் மற்றும் கனிம வளங்கள் துறை பிரிக்கப்பட்டு, இயற்கை வளத்துறை என்ற புதிய துறை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த துறையை நீர் வளத்துறை அமைச்சரான துரைமுருகன் கவனிப்பார் . அரசின் வருவாயைப் பெருக்கும் வகையில் இந்த துறை உருவாக்கப்பட்டுள்ளது. புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குநகரகம், தமிழ்நாடு கனிமவள நிறுவனம் மற்றும் தமிழ்நாடு மேக்னசைட் நிறுவனம் ஆகிய 3 துறைகள் இந்த புதிய இயற்கை வளத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்படுகிறது.

சர்க்கரை ஆலைகள்
இந்தத் துறைக்கு தேவையான விதிகள் மற்றும் அறிவுறுத்தல்கள் மனித வளத்துறை உருவாக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் சில துறைகளை மாற்றியமைத்து வெளியிடப்பட்ட அரசாணையில், ' தொழில்துறை அமைச்சரிடமிருந்த சர்க்கரை ஆலைகள் துறையானது உழவர் நலத்துறை அமைச்சகத்துக்கும், போக்குவரத்துத் துறை அமைச்சரிடமிருந்த விமானப் போக்குவரத்து துறையானது தொழில்துறை அமைச்சகத்துக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சிறுபான்மை நலத்துறை
அதேபோல், சிறுபான்மை நலத்துறையிடம் இருந்த அயலக பணியாளர் கழகமானது தொழிலாளர் நலத்துறை அமைச்சகத்துக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.