தமிழகத்தில் இன்றும் 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்- அடுத்த 3 நாட்களுக்கு கனமழை தொடரும்!
சென்னை: தமிழகத்தில் இன்றும் கனமழை தொடர்பாக 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் டிசம்பர் 2-ந் தேதி வரை ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஜெருசலேம் புனித யாத்திரை செல்லும் கன்னியாஸ்திரிகளுக்கு நிதியுதவி ரூ.60,000ஆக உயர்வு
தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் இடைவிடாது கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. சென்னையில் 200 ஆண்டுகளில் 4-வது முறையாக 1000மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

சென்னை மழை வெள்ளம்
சென்னைக்கு குடிநீர் வழங்கும் அனைத்து ஏரிகளும் நிரம்பிவிட்டன. இதனால் ஏரிகளில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் அடையாறு, கூவம், கொசஸ்தலை ஆற்றின் கரையோர பகுதிகள் வெள்ள நீரால் சூழப்பட்டுள்ளன. இதேபோல் பல மாவட்டங்களில் நேற்று இரவு முதல் விடிய விடிய மழை கொட்டித் தீர்த்து வருகிறது. மழை பாதித்த பகுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார்.

12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்
இந்நிலையில் குமரி கடல் மற்றும் இலங்கை கடற்பகுதி இடையே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகி உள்ளது. இதனால் இன்றும் கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக வட கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் மிக அதிக கனமழைக்கு வாய்ப்புள்ளது என்கிறது வானிலை ஆய்வு மையம்.

நாளையும் கனமழைக்கு வாய்ப்பு
மேலும் திங்கட்கிழமையன்று கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது; பெரும்பாலான மாவட்டங்களில் கனமான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது எனவும் வானிலை மையம் கூறியுள்ளது. தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழையானது இயல்பை விட பல மடங்கு பதிவாகி உள்ளது. பொதுவாக 74% அளவுக்கு கூடுதலாக மழை கொட்டியிருக்கிறது.

புதிய காற்றழுத்த தாழ்வு நிலை
இதனிடையே அந்தமான் கடல்பகுதியில் ஒரு புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகி வருகிறது. இது அடுத்த சில நாட்களில் தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகும். இருப்பினும் இந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி நகரும் திசையைப் பொறுத்தே தமிழகத்துக்கு மழை வாய்ப்புகள் குறித்து கூற முடியும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் விளக்கம் அளித்திருக்கிறது.