நயினார் பேச்சுக்கு இடையே.. பரபர உள்ளாட்சித் தேர்தல் ஆலோசனை.. பாஜகவிற்கு ஜெர்க் கொடுக்குமா அதிமுக ?
சென்னை: நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோரிடம் நேர்காணல் நிறைவடைந்த நிலையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பணிகள், வியூகம் மற்றும் பிரசார திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. இந்த தேர்தலில் அதிமுக வெற்றி வாகை சூட வேண்டும் என்ற முனைப்போடு களம் இறங்க உள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 2011ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக அடுத்த 6 மாதங்களில் நடந்த 2011ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து நகராட்சிகள், மாநகராட்சிகள், பெரும்பாலான ஊரக மற்றும் பிற நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளை வென்றது.
நகராட்சி பகுதிகளில் உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் 2016ஆம் ஆண்டில் முடிவடைந்தபோதும், பல்வேறு வழக்குகள் காரணமாக இதுவரை தேர்தல் நடத்த முடியவில்லை. இந்த உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தல் முதலில் அக்டோபர் 2016-ல் திட்டமிடப்பட்டது. ஆனால், அதை எதிர்த்து அப்போதைய எதிர்க்கட்சியான திமுக தாக்கல் செய்த மனு உட்பட பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதையடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தால் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. சட்டம்-ஒழுங்கு பிரச்னை, பழங்குடியினருக்கு போதிய இடஒதுக்கீடு வழங்கவில்லை என்பன உள்ளிட்ட பிரச்னைகள் காரணமாக தேர்தல் நடைபெறவில்லை.

ஊரக உள்ளாட்சித் தேர்தல்
இந்த நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு எதிர்கட்சிகள் தயாராக போதிய அவகாசம் கொடுக்காமல் அவசர அவசரமாக உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டது. 2019 டிசம்பர் இறுதியில் மாநிலத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. திமுகவும் அதிமுகவும் பெரும்பாலான இடங்களை வென்றன. இதையடுத்து கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, கடந்த அக்டோபர் மாதம் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இதில் திமுக அமோக வெற்றி பெற்றது. அதிமுக தோல்வியை சந்தித்தது.

நகர்புற உள்ளாட்சித் தேர்தல்
ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி நடைபெற உள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பிப்ரவர் 22 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மார்ச் 3ஆம் தேதி வெற்றி பெற்றவர்கள் பதவி ஏற்றுக்கொண்ட பின்னர் மார்ச் 4ஆம் தேதி மறைமுக தேர்தல் நடைபெற உள்ளது.

தேர்தலை சந்திக்க தயாராகும் அரசியல் கட்சிகள்
நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியுள்ள நிலையில் திமுக, அதிமுக போன்ற பிரதான கட்சிகள் தேர்தலை சந்திக்க தயாராகவே உள்ளன. இந்த தேர்தலில் பலமுனைப் போட்டி நிலவுகிறது. உள்ளாட்சித் தேர்தல் குறித்து திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நேற்றைய தினம் காணொலி மூலம் நடைபெற்றது. இன்று கூட்டணி கட்சி தலைவர்கள் நேரில் சென்று தங்களின் கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர்.

அதிமுகவின் வியூகம் எப்படி
அதே போல அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்றைய தினம் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. மாநகராட்சி கவுன்சிலருக்கான இடங்களில் எத்தனை இடங்களில் போட்டியிடுவது என்பது பற்றியும் கூட்டணி கட்சிக்கு எத்தனை இடங்களை தருவது எந்தெந்த மாநகராட்சிகளை தருவது, எத்தனை நகராட்சி, பேரூராட்சிகளைத் தருவது என்பது பற்றியும் அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய அம்சமாக இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெற்றி வாகை சூடுமா அதிமுக?
வேட்பாளர் தேர்வு, தேர்தல் வியூகம், கூட்டணி கட்சிகளுக்கு வார்டு ஒதுக்கீடு என்பது குறித்தும் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோன்று அதிமுகவுடன் வார்டு பங்கீடு மற்றும் வேட்பாளர் தேர்வு குறித்து பாஜக இன்று ஆலோசனை மேற்கொண்டுள்ளது. கூட்டணி கட்சியினர் கேட்பதை அதிமுக கொடுக்க தயாராக இருக்குமா? ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தோல்வியை சந்தித்த அதிமுக நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி வாகை சூடுமா? மார்ச் 4ஆம் தேதி தெரியவரும்.

நயினார் ஆப்சென்ட்
இதனிடையே பாஜக தலைமையகம் கமலாலயத்தில் நடைபெற்று வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் நயினார் நாகேந்திரன் பங்கேற்கவில்லை. சட்டசபை பாஜக குழு தலைவராக இருந்த போதிலும் அவர் தனது சொந்த ஊரான திருநெல்வேலியில் இருக்கிறார். இடப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையின்போது நயினார் நாகேந்திரன் கூட இருக்கக் கூடாது என்பது அதிமுக தலைமையிடம் இருந்து பாஜகவுக்கு வந்த கறார் கோரிக்கை என்று கூறப்படுகிறது. இதனால்தான் நயினார் நாகேந்திரன் நெல்லையிலேயே, இருப்பதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.