திருப்தியா இல்லை! தமிழ்நாட்டில் எதிர்க்கட்சிகள் சரியில்லயாம்.. போட்டுடைத்த ஐஏஎன்எஸ் சி வோட்டர் சர்வே
சென்னை: தமிழ்நாட்டில் எதிர்க்கட்சிகளின் செயல்பாடு திருப்தி அளிக்கவில்லை என்று ஐஏஎன்எஸ் மற்றும் சி வோட்டர் சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐஏஎன்எஸ் மற்றும் சி வோட்டர் இணைந்து 5 மாநில சர்வே முடிவுகளை வெளியிட்டுள்ளன. 2021ல் ஆட்சிக்கு வந்த அசாம், கேரளா, தமிழ்நாடு, புதுச்சேரி, மேற்கு வங்கத்தில் ஆட்சி எப்படி இருக்கிறது என்று இவர்கள் சர்வே செய்துள்ளனர்.
இங்கு மக்களின் மனநிலை என்ன? ஆட்சி தொடர்பாக இவர்கள் என்ன கருத்துக்களை கொண்டு இருக்கிறார்கள், அங்கு முதல்வர்களின் செயல்பாடு எப்படி என்று ஐஏஎன்எஸ் மற்றும் சி வோட்டர் சர்வே நடத்தி உள்ளது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் ஓராண்டு செயல்பாடுகள்- 85% பேர் ஆதரவு- ஐ.ஏ.என்.எஸ்.- சிவோட்டர் சர்வே

எதிர்க்கட்சிகள்
அதன்படி தமிழ்நாட்டில் எதிர்க்கட்சிகள் சரியாக செயல்படவில்லை.. அவர்களின் செயல்பாட்டில் திருப்தி இல்லை என்று 35 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளார். அதேபோல் 10 சதவிகிதம் பேர் எதிர்க்கட்சிகளின் செயல்பாட்டில் திருப்தி இருப்பதாகவும், அவர்கள் நன்றாக செயல்படுவதாகவும் கூறியுள்ளனர். 42 சதவிகிதம் பேர் எதிர்க்கட்சிகள் ஓரளவிற்கு நன்றாக செயல்படுவதாக கூறியுள்ளனர்.

மோடி
அதேபோல் பிரதமர் மோடிக்கு எதிராகவும் இங்கு கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமராக மோடியின் செயல்பாடு சரியாக இல்லை என்று 40 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். ஓரளவிற்கு சரியாக இருப்பதாக 40 சதவிகிதம் தெரிவித்து உள்ளனர். 17 சதவிகிதம் பேர் பிரதமர் மோடியின் செயல்பாடு நன்றாக இருப்பதாகவும், தாங்கள் திருப்தி அடைந்து உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

ராகுல் காந்தி
அதே சமயம் ராகுல் காந்தி பிரதமராக தகுதி உள்ளவர் என்று 54 சதவிகிதம் பேர் பதில் அளித்துள்ளனர். 32 சதவிகிதம் பேர் இப்போது இருக்கும் பிரதமர் மோடியே ராகுலுடன் ஒப்பிடுகையில் ஓகே என்று பதில் அளித்துள்ளனர். ஆனால் திமுக எம்பிக்களுக்கு எதிராக இந்த கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 19 சதவிகிதம் பேர் மட்டுமே தங்கள் எம்பிக்கள் நன்றாக செயல்படுவதாக கூறியுள்ளனர்.

ஸ்டாலின்
34 சதவிகிதம் பேர் தங்கள் எம்பிக்கள் சுத்தமாக நன்றாக செயல்படவில்லை என்று கூறியுள்ளனர். 31 சதவிகிதம் பேர் தங்கள் எம்எல்ஏக்கள் நன்றாக செயல்படவில்லை என்றும், 25 சதவிகிதம் பேர் தங்கள் எம்எல்ஏக்கள் நன்றாக செயல்படுகிறார்கள் என்றும் தெரிவித்துள்ளனர். மொத்தத்தில் தமிழ்நாட்டில் திமுக ஆட்சி திருப்தியாக இருப்பதாக 30 சதவிகிதம், ஓரளவிற்கு திருப்தியாக இருப்பதாக 51 சதவிகிதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

முதல்வர் எப்படி?
17 சதவிகிதம் பேர் சுத்தமாக திருப்தியாக இல்லை என்று தெரிவித்துள்ளனர். அதேபோல் முதல்வர் ஸ்டாலினின் செயல் திருப்தியாக இருப்பதாக 41 சதவிகிதம் பேர், ஓரளவு திருப்தியாக இருப்பதாக 44 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். 13 சதவிகிதம் பேர் முதல்வர் ஸ்டாலினின் செயல்பாடு நன்றாக இல்லை என்று தெரிவித்துள்ளனர். பெரும்பாலானோர் ஆட்சி மற்றும் முதல்வரின் செயல்பாடு திருப்தியாக இருப்பதாகவே தெரிவித்துள்ளனர்.