கொரோனா பரவலுக்கு மத்தியில் பள்ளி, கல்லூரிகள் இன்று திறப்பு - வழிகாட்டு நெறிமுறைகள் என்னென்ன
சென்னை: கொரோனா பரவல் காரணமாக கடந்த மாதம் மூடப்பட்ட பள்ளி, கல்லூரிகள் இன்று முதல் மீண்டும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. மாணவர்கள் உற்சாகமாக பள்ளி, கல்லூரிகளுக்கு கிளம்பத் தொடங்கியுள்ளனர். மாணவ, மாணவியர்களின் வரவை எதிர்பார்த்து பள்ளிகள் சுத்தம் செய்யப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.பள்ளிகளுக்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை, தமிழக பொது சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.
ஆசிரியர்களுக்கும், 15 முதல் 18 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கும் தடுப்பூசி கட்டாயம் செலுத்தியிருக்க வேண்டும். பள்ளிகளில் முகக்கவசம், தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்.

அனைத்து மாணவர்களும், ஆசிரியர்களும், பணியாளர்களும் பள்ளி வளாகத்தின் உள்ளேயும், வெளியேயும் முகக்கவசங்களை கட்டாயம் அணிய வேண்டும்.
உடல் வெப்ப பரிசோதனை கருவிகள், கிருமி நாசினிகள், சோப்புகள், பல்ஸ் ஆக்ஸிமீட்டர்கள் போன்ற பொருட்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் உடனே அவர்கள் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தப்பட வேண்டும்.
அனைத்து வேலை நாட்களிலும் பள்ளி நுழைவு வாயிலிலும், பள்ளி வளாகத்திலும் கூட்டம் கூடுவதை தவிர்க்க சமூக இடைவெளிக்கான விதிமுறைகள் முறையாக பின்பற்றப்பட வேண்டும்.
பள்ளியில் மாணவர்கள் வகுப்பறைக்கு வெளியே சுற்றி திரிய அனுமதிக்கக் கூடாது. நுழைவாயில் மற்றும் பள்ளிக்குள் வரிசையில் நிற்கும் போது குறைந்தபட்சம் 6 அடி சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும்.
இறைவணக்க கூட்டம், விளையாட்டு நிகழ்ச்சிகள், கலாசார நிகழ்வுகளை தவிர்க்க வேண்டும். நீச்சல் குளங்களை மூட வேண்டும். உடற்கல்வி மற்றும் விளையாட்டுகளுக்கான பாட வேளைகள் அனுமதிக்கப்படாது. கழிப்பறைகள் முறையாக சுத்தம் செய்யப்பட்டு பராமரிக்கப்பட வேண்டும்.
வெவ்வேறு வகுப்பு மாணவர்கள் பள்ளிகளுக்கு வருதல், வெளியேறுதல் ஆகியவற்றுக்கு வெவ்வேறு நேரத்தை நிர்ணயிக்கலாம். வருவதற்கும், செல்வதற்கும் பள்ளிகளில் வெவ்வேறு பாதைகளை பயன்படுத்த வேண்டும்.
புதுச்சேரியில் வரும் பிப். 4 முதல் பள்ளி & கல்லூரிகள் திறப்பு.. பல்வேறு தளர்வுகளும் அறிவிப்பு
வரிசையில் செல்லும்போது சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில் தேவையான இடங்களில் வட்டம், கட்டம் போன்ற குறியீடுகளை தரையில் வரைந்து வைக்க வேண்டும். வகுப்பறையில் இருக்கை ஏற்பாடு செய்யும்போது குறைந்தபட்சம் 6 அடி இடைவெளியை பின்பற்ற வேண்டும்.
ஆசிரியர் அறைகள், அலுவலக பகுதிகள் மற்றும் பிற இடங்களிலும் முறையான சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட வேண்டும். வெவ்வேறு வகுப்புகளுக்கு இடையே இடைவேளை நேரம் வழங்கப்பட வேண்டும். மாணவர்களுக்கு இடையே உணவு பகிர்வை அனுமதிக்கக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் கல்லூரிகளும் இன்று திறக்கப்படுகின்றன. கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் செமஸ்டர் தேர்வுகள் இன்று முதல் தொடங்குகின்றனர்.

பள்ளிகளே முடிவு செய்யலாம்
இன்று திறக்கப்படும் அனைத்து வகை பள்ளிகளிலும் அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, அனைத்து மாணவர்களுக்கும் 100 சதவிகித நேரடி வகுப்புகளுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும், மாணவர்களின் கல்வித்தரம் பெரும் அளவில் பாதிக்கப்பட்டு இருப்பதால், அதில் தீவிர கவனம் செலுத்தவேண்டும் என்றும் கல்வித்துறை அனைத்து பள்ளிகளுக்கும் தெரிவித்திருக்கிறது.
தனியார் பள்ளிகளை பொறுத்தவரையில், ஆன்லைன் வகுப்புகளுக்கு ஏற்கனவே அவர்கள் முக்கியத்துவம் கொடுக்காமல், நேரடி வகுப்புகளுக்குத்தான் அதிக முக்கியத்துவம் தருகின்றனர். அரசு பள்ளிகளை பார்க்கும்போது, ஆன்லைன் வகுப்பு என்பது கல்வி தொலைக்காட்சி வாயிலாக மட்டுமே நடந்து வருகிறது. சில அரசு பள்ளிகளில் ஆசிரியர்களின் முயற்சியின் காரணமாக வாட்ஸ்-அப் மூலமாகவும் வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

ஆன்லைன் வகுப்புகள்
அந்த வகையில் கல்வித் துறையின் உத்தரவுப்படி, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் நேரடி வகுப்புகளுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கொரோனா தொற்று பாதிப்பு அதிக அளவில் இருக்கும் பகுதிகளில் மட்டும் சூழ்நிலைக்கு ஏற்ப நேரடி வகுப்புகளை குறைத்து, ஆன்லைன் முறையில் வகுப்புகளை நடத்தவும் கூறி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேபோல், கல்லூரிகளிலும் மாணவர்கள் நேரடி வகுப்புகளுக்கு வரவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. மாணவர்களின் பாதுகாப்பில் மிகுந்த கவனம் செலுத்த பள்ளிகள், கல்லூரிகளுக்கு கல்வித்துறை தரப்பில் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.