• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

ஜூன் 13க்கு பிறகு.. ஆரம்பமாகும் புதிய 'அரசியல் ஆட்டம்' - மு.க.ஸ்டாலின் தயாரா?

|

சென்னை: நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், அதிமுக சந்தித்த தோல்வியின் எதிரொலியாக, சசிகலாவை அதிமுகவுடன் இணைக்கும் படலத்தை மணிக்கு 400 கி.மீ வேகத்தில் டெல்லி கையிலெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேர்தல் தோல்வி அதிமுகவை பத்தாண்டுகளுக்கு பிறகு சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியாக உட்கார வைத்திருக்கிறது. ஜெயலலிதா எனும் 'சென்ட்ரிக் ஃபோர்ஸ்' இல்லாத கட்சியாக தேர்தலை சந்தித்த அதிமுகவுக்கு, தோல்வியே கிடைக்கும் என்பதை தலைமையும் அறியாமல் இல்லை.

வேக்சின் காப்புரிமை.. மனித குல நன்மைக்காக சத்தமின்றி போராடும் இந்தியா.. ஆதரவாக களமிறங்கிய அமெரிக்கா!வேக்சின் காப்புரிமை.. மனித குல நன்மைக்காக சத்தமின்றி போராடும் இந்தியா.. ஆதரவாக களமிறங்கிய அமெரிக்கா!

'இவர்கள் எங்களை ஆள வேண்டும்' என்பதை விட, 'இவர்கள் எங்களை ஆள கூடாது' என்று பப்ளிக் மத்தியில் நிலவிய ;பொது மனப்பான்மை' இந்த தோல்வியின் முக்கிய காரணங்களில் ஒன்று என இரட்டைத் தலைமைக்கு தேர்தலுக்கு பிந்தைய ரிப்போர்ட்டாக கொடுக்கப்பட்டிருக்கிறது.

 பொங்கிய ஓ.பி.எஸ்

பொங்கிய ஓ.பி.எஸ்

எனினும், கட்சியின் இந்த தோல்வியால் ஆட்சியை இழந்தாலும், 'நாம் சேஃப்' என்ற மைண்ட்செட்டில் தான் எடப்பாடி தரப்பு இருக்கிறது. அதிமுக வெற்றிப் பெற்ற 65 இடங்களில் பாதிக்கு மேல் கொங்கு மண்டலத்திலிருந்து கிடைத்திருப்பது தான் இதற்கு காரணம். இந்த ஒரு பாஸிட்டிவ் காரணத்தை வைத்தே, எதிர்க்கட்சித் தலைவர் பதவி தங்களுக்கு தான் என ஈ.பி.எஸ் தரப்பு ஃபிக்ஸ் செய்துவிட்டது. அதேசமயம், 'முதல்வர் பதவியை விட்டுக் கொடுத்து, இத்தனை ஆண்டுகள் பொறுமையாக இருந்த நான், இப்போது எதிர்க்கட்சித் தலைவர் பதவியையும் விட்டுக் கொடுக்கணுமா?' என்று ஓ.பி.எஸ். தரப்பு பொங்க ராயப்பேட்டையில் டபுள் 'கத்திரி' வீசுவதாக தகவல்.

 மிஷன் 2026

மிஷன் 2026

ஒருபக்கம் எதிர்க்கட்சித் தலைவர் யார் என்ற போட்டி நிலவ, மறுபக்கம் 'அப்படி ஓரமா சண்டை போடுங்கப்பா' என்று 2026 ஃபோகஸை இப்போதே தொடங்கிவிட்டதாம் டெல்லி தரப்பு. மு.க.ஸ்டாலின் இன்னும் பதவி கூட ஏற்காத நிலையில், 'மிஷன் 2026'-க்கு இத்தனை அவசரம் காட்டுவதன் ஒரே காரணம் 'சசிகலா' தான் என்கின்றன டெல்லி வட்டாரங்கள். தேர்தலுக்கு முன்பே, சென்னையில் கிட்டத்தட்ட இரண்டு, மூன்று இரவுகள் தங்கியிருந்து, சசிகலா இணைப்புக்கு அமித் ஷா எவ்வளவோ பிரைன் வாஷ் செய்தும், எடப்பாடியார் அசைந்து கொடுக்கவில்லை. அதன் விளைவு, பல தொகுதிகளில் அதிமுகவின் வெற்றியை அமமுக தடுத்து, வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் திமுகவுக்கு அள்ளிக் கொடுத்தது. சசிகலா மட்டும் அதிமுகவுடன் இணைந்திருந்தால், திமுகவின் ரிசல்ட் எப்படி வேண்டுமானாலும் மாறியிருக்கும் என்ற தகவலும் டெல்லிக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

 கண்ட்ரோல் போயிடும்

கண்ட்ரோல் போயிடும்

இந்த அனைத்து தகவல்களையும் கையில் வைத்துக் கொண்டு டெல்லிக்கு பேசிய ஓ.பி.எஸ். டீம், "வன்னியர்கள் இட ஒதுக்கீடு, தேவேந்திர குல வேளாளர் பெயர் பிரச்சனை-னு தென் மாவட்டங்கள்-ல கட்சியின் மீது நிலவிய பலத்த எதிர்ப்பையும் மீறி அங்கு 20 தொகுதிகளில் ஜெயிச்சிருக்கோம். இந்த எதிர்ப்புகளுக்கு ஒரே காரணம் எடப்பாடி பழனிசாமி தான். அவர் தேவையில்லாத விவகாரங்கள கையில எடுத்து, அதிமுக கோட்டையாக இருந்த தென் மாவட்டங்கள்-ல பெரும் சரிவை கொடுத்துட்டார். ஆனால், கொங்கு மண்டலத்தில் தனக்கிருந்த ஆதரவை காட்டி கட்சியை ஒட்டுமொத்தமாக தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க முயற்சிக்கிறார். எதிர்க்கட்சித் தலைவர் பதவியும் அவருட்ட போயிடும் போல இருக்கு. கட்சி மொத்தமா அவர் கண்ட்ரோல்ல போச்சுன்னா அடுத்த தேர்தலையும், கொங்கு தாண்டி எங்கயும் ஜெயிக்க முடியாது" என்று வேதனையை கொட்டித் தீர்த்திருக்கிறது ஓ.பி.எஸ் தரப்பு.

 சசிகலா தலைமை

சசிகலா தலைமை

இந்த சூழலில் தான் டிடிவி தினகரன் மகள் ஜெயஹரிணிக்கும், தஞ்சை மாநகரின் முக்கிய 'தலைக்கட்டு'களில் ஒருவரான காங்கிரஸ் முன்னாள் எம்.பி. துளசி வாண்டையார் பேரனும், கிருஷ்ணசாமி வாண்டையார் மகனுமான ராமநாதன் துளசிக்கும் வரும் ஜூன் 13ம் தேதி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் திருமணம் நடைபெறுகிறது. தலைமை தாங்கப் போவது சசிகலா. இதற்கான பணிகளில் மிகத் தீவிரமாக ஈடுபட்டுள்ளது மன்னார்குடி குடும்பம். கொரோனா காலம் என்பதால், துளி களேபரம் இன்றி திருமணத்தை நடத்த வேண்டும் என்று, தேர்தல் களத்தை விட திருமண களத்தில் சூறாவளியாக சுழன்று வருகிறாராம் டிடிவி. அதுவும், சசிகலா மேற்பார்வையில். ஸோ, ஒட்டுமொத்த குடும்பமும் திருமண வேளைகளில் மூழ்கியிருக்க, ஓ.பி.எஸ். தரப்புக்கு டெல்லியில் இருந்து முக்கிய தகவல்கள் சில பறந்துள்ளனவாம்.

 சூடு பிடிக்கும்

சூடு பிடிக்கும்

அதில், ஜூன் 13ம் தேதி வரை அமைதி காக்கும் படி இன்ஸ்ட்ரக்ஷன் கொடுக்கப்பட, அமைதியாக ஓ.பி.எஸ். ஆமோதித்திருக்கிறாராம். அதுமட்டுமின்றி, எதிர்க்கட்சித் தலைவர் போஸ்ட் குறித்தெல்லாம் பெரிதாக அலட்டிக் கொள்ளத் தேவையில்லை என்றும், '2026' டார்கெட்டே முக்கியம் என்பதால், அனைவரும் ஒற்றுமையுடன் இருப்பது அவசியம் என்பது அழுத்தம் திருத்தமாக சொல்லப்பட்டுள்ளதாம். குறிப்பாக, சசிகலாவை அதிமுகவில் இணைப்பதே முதல் பணி என்றும், இதற்கான 'கன்வின்ஸ்' படலம் விரைவில் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாம். எனவே, ஜூன் 13ம் தேதிக்கு பிறகு, சசிகலாவை மையப்படுத்திய அரசியல் ஆட்டங்கள் தமிழகத்தில் சூடு பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Tamil nadu to face new politics after june 13 - வி.கே.சசிகலா
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X