சென்னை மட்டுமா! கோவை, ஓசூரில் குவிந்த "மாஸ்" முதலீடுகள்.. ரூ 1.25 லட்சம் கோடி.. இனி வேற லெவல்தான்!
சென்னை: சென்னையில் இன்று உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்று வருகிறது. முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் நடைபெறும் இந்த மாநாட்டில் பல்வேறு முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இந்த மாநாடு நடைபெற்று வருகிறது.
மொத்தம் 60 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இதில் கையெழுத்தாகி உள்ளன. இதன் மூலம் 1.25 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் செய்யப்பட்டு உள்ளன.
அரசு பொறியியல் கல்லூரிகளில் பகுதி நேர பி.இ., பிடெக் படிக்க விண்ணப்பிக்கலாம்
இதன் காரணமாக 99 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும். மொத்தமாக 93 நிறுவனங்கள் முதலீடுகளையும், திட்டங்களையும், புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும் இன்று மேற்கொண்டு உள்ளன.

சென்னை
முன்பெல்லாம் உலக முதலீட்டாளர்கள் மாநாடு என்றால் அதில் சென்னையில் மட்டுமே முதலீடுகள் மேற்கொள்ளப்படும். பெயருக்கு சில முதலீடுகள் தென் மாவட்டங்களிலும், கொங்கு மண்டலத்திலும் மேற்கொள்ளப்படும். ஆனால் தற்போது நடந்து வரும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கோவைக்கும், ஓசூருக்கும், சில தெற்கு மாவட்டங்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. உதாரணமாக கோவையில் டெக் மஹிந்திரா முறையாக தங்கள் கிளையை துவங்குகிறது.

வேலை
இதன் மூலம் அங்கு 1500 பேருக்கு வேலை கிடைக்கும். அதேபோல் ரோல்ஸ் ராய்ஸ், எச்ஏஎல் இணைந்து IAMPL என்று கூட்டு நிறுவனம் மூலம் விமான உதிரி பாகங்களை செய்ய உள்ளன. இந்த நிறுவனம் ஓசூரில் தொடங்கப்பட உள்ளது. எல் அண்ட் டி மூலம் 1500 கோடி ரூபாய்க்கு கோவையில் புதிய ஐடி பார்க்க தொடங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. சென்னையை சேர்ந்த டிரோன் நிறுவனமான கருடா நிறுவனம் 23 கோடி ரூபாய்க்கு தனது கிளையை கோவையில் தொடங்க ஒப்பந்தம் செய்துள்ளது.

ஓசூர்
அதேபோல் MWIVEN என்ற நிறுவனம் ஏவுகணை தயாரிப்பு உதிரி பாகங்களை உருவாக்கும் நிறுவனத்தை ஓசூரில் அமைக்க ஒப்பந்தம் செய்துள்ளது. ENES ஆடை மில் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், காஞ்சிபுரம், திருவள்ளூர் , செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அமைக்கப்பட உள்ளது. அதேபோல் ஓசூரில் weg நிறுவனத்தின் காற்றாலை உற்பத்தி மையம் அமைக்கப்பட உள்ளது.

கிருஷ்ணகிரி
மேலும் கிருஷ்ணகிரியில் கடல் சார்ந்த உணவுகளின் பதப்படுத்தும் மையம் ஒன்றும் அமைக்கப்பட உள்ளது. பாரத் பிரிட்ஸ் நிறுவனம் சார்பாக ஆட்டோமொபைல் உதிரி பாக உற்பத்தி மையம் ஓசூரில் அமைக்கப்பட உள்ளது. ஜெஏஸ் ஆட்டோ காஸ்ட் நிறுவனம் சார்பாக காஸ்டிங் தொழிற்சாலை கோவையில் அமைக்கப்பட உள்ளது. அவெண்டோஸ் நிறுவனம் சார்பாக இ பைக் உற்பத்தி மையம் ஓசூரில் அமைக்கப்பட உள்ளது. எல்ஜி சார் நிறுவனம் சார்பாக கப்பல்களுக்குகான பம்ப் தயாரிக்கும் நிறுவனம் கோவையில் அமைக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.