குடும்பத்தில் ஒருவருக்கு வந்தாலே அவ்வளவு தான்! தமிழகத்தில் பரவும் புது வகை கொரோனா.. மா.சு எச்சரிக்கை
சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் உயரத் தொடங்கி உள்ள நிலையில், அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறி உள்ளக் கருத்துகள் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
செங்கல்பட்டு மாவட்டம் ஓஎம்ஆர் சாலை ஏகாட்டூரில் உள்ள தனியார் அடுக்குமாடிக் குடியிருப்பு பகுதியில் 6 பேருக்கு புதிய வகை கொரோனா தொற்று பரவியதால் அவர்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டனர் .
இதனிடையே அவர்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சந்தித்து உடல்நிலை குறித்துக் கேட்டறிந்தார்.
இந்தியாவில் 15,940 பேருக்கு புதியதாக கொரோனா; 20 பேர் பலி

கொரோனா
அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கும் முறை குறித்தும் அமைச்சர் மா. சுப்பிரமணியன் கேட்டறிந்தார். மேலும், கொரோனா நெகடிவ் என முடிவுகள் வரும் வரை வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், "கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்குநாள் உயர்ந்து வருகிறது. உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் 24 மணி நேரத்தில் ஒரு லட்சத்தையும் தாண்டி பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தியா
இந்தியாவைப் பொறுத்தவரை 7,8 மாநிலங்களில் ஆயிரத்திலிருந்து 5000 வரை வைரஸ் பாதிப்பு உள்ளது. நேற்றைய ஒரே நாளில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு 17 ஆயிரத்தைக் கடந்தது. கடந்த 4 மாதங்களில் பதிவான வைரஸ் பாதிப்பில் இது தான் அதிகம். அந்த வகையில் தமிழகத்திலும் நேற்று ஒரே நாளில் 1359 நபர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ஏகாட்டூர்
இங்கு ஏகாட்டூரில் ஒரே வீட்டில் 6 பேருக்கு புதிய வகை கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. தொற்று பாதிக்கப்பட்டுள்ளவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். வெளியில் வரக் கூடாது. இங்கு ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் உள்ள காரணத்தினால் குடியிருப்பு பராமரிப்பு பணியில் ஈடுபடக்கூடிய தொழிலாளர்கள் அனைவருக்குமே ஆர்டி.பி.ஆர். பரிசோதனை செய்து வருகிறோம்.

வேக்சின்
மேலும், இந்த குடியிருப்பு வளாகத்தில் தடுப்பூசி போடாதவர்களுக்காகத் தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைப் பொருத்தவரை நேற்று 1359 பேருக்கு நேற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல தற்போது 5912 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் சுமார் 92 சதவீதம் பேர் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். வெறும் எட்டு சதவீதம் பேருக்கு மட்டுமே மருத்துவ உதவி தேவைப்படும் வகையில் உள்ளது. அவர்களுக்கும் லேசான பாதிப்பே ஏற்பட்டுள்ளது. செயற்கை சுவாசம் கூட யாருக்கும் தேவைப்படவில்லை.

குடும்பத்தில் அனைவருக்கும்
இப்போது பரவ தொடங்கி உள்ள கொரோனா வேகமாகப் பரவும் தன்மை கொண்டது. ஒருவருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால் அந்த குடும்பத்தில் உள்ள ஒட்டுமொத்த உறுப்பினருக்கும் பரவக்கூடிய வீரியம் கொண்டதாக இந்த கொரோனா வகை உள்ளது. மேலும் பொது இடங்களில் அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும். மாஸ்க் அணிவதே கொரோனா தொற்றில் இருந்து நம்மைக் காக்கும்.

வேகன்சின் மையங்கள்
24 மணி நேரமும் தடுப்பூசி போடக் கூடிய வகையில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் மையங்கள் செயல்பட்டு வருகிறது. தடுப்பூசி போட்டுக்கொள்ளத் தயக்கம் காட்டாமல் அரசு மருத்துவமனை நிர்வாகிகளை அணுகி, பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். வேக்சின் போடாதவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் வகையில், வரும் 10ஆம் தேதி தமிழக முதல்வர் அறிவுறுத்தலின் பேரில் ஒரு லட்சம் இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெறும்.

செங்கல்பட்டு
சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு மாவட்டத்தில்தான் தினமும் தொற்று பாதிப்பு அதிகமாக உள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் மட்டும் நேற்று 266 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்களில் அரசு மருத்துவமனையில் 10 பேர், தனியார் மருத்துவமனையில் 32 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.

வழிகாட்டுதல்கள்
ஒவ்வொரு முறையும் இந்த வைரஸ் மாற்றம் அடையும்போதும் அது சமூகத்தில் திட்டவட்டமாகத் தெரிகிறது. வேகமாகப் பரவும் கொரோனா வைரசால் இப்போது பாதிப்பு ஏற்படுகிறது. குடும்பத்தில் இருக்கும் அனைவருக்கும் இந்த பாதிப்பு ஏற்படலாம். இந்த விவகாரத்தில் அரசு அரசு சொல்வதை ஏன் கேட்க வேண்டும் என இல்லாமல் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். மாஸ்க், சமூக இடைவெளி, கைகளைக் கழுவிக் கொள்வது போன்ற விதிகளை முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.

வேக்சின்
12 வயதைக் கடந்த அனைவருக்கும் முதல் மற்றும் இரண்டாவது தவணை தடுப்பூசி ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசு சார்பில் இலவசமாகச் செலுத்தப்பட்டு வருகிறது. பூஸ்டர் தடுப்பூசியைப் பொருத்தவரை 60 வயதைக் கடந்தவர்களுக்கும், முன்கள பணியாளர்களுக்கும் இலவசமாகப் போடப்பட்டு வருகிறது. 18 வயது முதல் 59 வயது வரை உள்ளவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி தனியார் மருத்துவமனையில் போடப்பட்டு வருகிறது" என்றார்.