தமிழ்நாட்டில் சற்றே குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு! முடிவுக்கு வருகிறதா 3ஆம் அலை? முழு தகவல்
சென்னை: தமிழ்நாட்டில் நேற்று 30,580 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று அது 30,215ஆக குறைந்துள்ளது. அதேபோல பாசிட்டிவ் விகிதமும் சற்றே குறைந்துள்ளது.
ஓமிக்ரான் பரவலுக்குப் பின்னர் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. ஓமிக்ரான் சமூக பரவலாக ஏற்கனவே மாறிவிட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சென்னை குடியரசு தின விழாவில் கலைநிகழ்ச்சிகள் ரத்து 4 அலங்கார ஊர்திகளுக்கு மட்டும் அனுமதி
கொரோனா பரவலைத் தடுக்க தமிழக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் இரவு ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் வரும் ஜன. 31 வரை ஏற்கனவே நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டில் வைரஸ் பாதிப்பு நேற்றை விடச் சற்றே குறையத் தொடங்கியுள்ளது.

20 ஆயிரம் பேருக்கு பாதிப்பு
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1.51 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் வெளிமாநிலங்களில் இருந்து வந்த 7 பேர் உட்பட மொத்தம் 30,215 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இது நேற்று உறுதி செய்யப்பட்ட 30,580 உடன் ஒப்பிடுகையில் சற்றே குறைவாகும். தமிழ்நாட்டில் இதுவரை கொரோனா கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 31,64,205ஆக உயர்ந்துள்ளது,

உயிரிழப்பு
நேற்றைய தினம் 40 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், இன்று அது 46ஆக உயர்ந்துள்ளது. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 25 பேர், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 21 பேர் என 46 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாகச் சென்னையில் ஒரே நாளில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல செங்கல்பட்டு மற்றும் வேலூர் மாவட்டங்களில் தல 4 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் இதுவரை 37,264 கொரோனாவால் பலியாகியுள்ளனர்.

ஆக்டிவ் கேஸ்கள்
அதேநேரம் ஆக்டிவ் கேஸ்கள் அதிகரிக்கும் வேகம் சற்றே குறைந்துள்ளது. நேற்று 2,00,954 கொரோனா நோயாளிகள் மாநிலம் முழுவதும் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அது 2,06,484ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பரவல் 30 ஆயிரத்திற்கு மேல் உள்ள போதிலும், வைரஸ் தொற்றில் இருந்து குணமடைவோரின் விகிதம் அதிகமாக உள்ளதே இதற்கான காரணமாகப் பார்க்கப்படுகிறது. இன்று ஒரே நாளில் 24,639 பேர் கொரோனாவில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் இதுவரை கொரோனாவில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 29,20,457ஆக உயர்ந்துள்ளது.

பாசிட்டிவ் விகிதம்
தினசரி கேஸ்களை போலவே பாசிட்டிவ் விகிதமும் சற்றே குறைந்துள்ளது. தமிழகத்தின் ஒட்டுமொத்த பாசிட்டிவ் விகிதம் 19.8இல் இருந்து 19.4ஆக குறைந்துள்ளது. அதிகபட்சமாகக் கோவையில் பாசிட்டிவ் விகிதம் 28.1ஆக உள்ளது. தலைநகர் சென்னையில் பாசிட்டிவ் விகிதம் 30 வரை சென்ற போதிலும், கடந்த ஒரு வாரமாக அது குறைந்தே வருகிறது. இன்றைய தினம் தலைநகர் சென்னையில் பாசிட்டிவ் விகிதம் 23.6ஆக குறைந்துள்ளது.

மாவட்ட ரீதியாகப் பாதிப்பு
தலைநகர் சென்னையில் கடந்த ஒரு வாரமாகவே தினசரி கேஸ்கள் தொடர்ந்து குறைந்தே வருகிறது. இன்றைய தினம் சென்னையில் 6296 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து கோவை மாவட்டத்தில் ஒரே நாளில் 3786 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இது தவிரச் செங்கல்பட்டு, ஈரோடு, கன்னியாகுமரி, சேலம், தஞ்சை, திருப்பூர் மாவட்டங்களில் தினசரி கேஸ்கள் ஆயிரத்தைக் கடந்துள்ளது