சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வலுவான மருத்துவ கட்டமைப்பு.. திராவிட ஆட்சிகளின் சாதனை இதுதான்.. சாதிக்கும் தமிழகம்.. திணறும் குஜராத்

Google Oneindia Tamil News

சென்னை: குஜராத்துக்கு ஈடாக மக்கள்தொகை இருந்தபோதிலும், கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்துவதில், தமிழகம் மிகச்சிறந்த முன்னுதாரணமாக திகழ்கிறது. இதற்கு நமது மாநிலத்தில் உருவாக்கப்பட்ட சிறப்பான மருத்துவ கட்டமைப்பு வசதிதான் காரணம்.

தினமும் ஒருநாள் வீட்டு கதவை தட்டி, உங்களுக்கு காய்ச்சல், சளி இருக்கிறதா என்று விசாரிக்கும், மருத்துவ பணியாளர்கள் தமிழகத்திற்கு கிடைத்த வரம். வேறு மாநிலங்களில் கனவிலும் நினைத்து பார்க்க முடியாத கட்டமைப்பின் பலன் இது.

ஏப்ரல் இரண்டாவது வாரம், கொரோனா வைரஸ் பாதிப்பில், நாட்டிலேயே மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய மாநிலமாக மாறியது தமிழகம். மொத்தமுள்ள 38 மாநிலங்களில் 37 மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு பதிவாகி இருந்தது. ஆனால் அதன் பிறகுதான் எடுக்கப்பட்டது அதிரடி நடவடிக்கை.

தமிழகம் vs குஜராத்

தமிழகம் vs குஜராத்

இந்த நடவடிக்கைகளின் பலனாக, குஜராத்தைவிட கிட்டத்தட்ட பாதி அளவுக்கு நோயாளிகள் எண்ணிக்கையை குறைத்துள்ளது தமிழகம். அந்த மாநிலத்தை விடவும் எட்டில் ஒரு பங்கு மட்டுமே தமிழ்நாட்டில் இறப்பு பதிவாகியிருந்தது. குஜராத்தில், 4721 நோயாளிகள் உள்ளனர். 236 இறப்புகள் பதிவாகியுள்ளன. தமிழகத்தில், 2,526 நோயாளிகள் பதிவாகியுள்ளனர். பலி எண்ணிக்கை 28ஆக உள்ளது. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் மட்டும்தான் புதிதாக, கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு காலகட்டத்தில் மிக அதிக நோயாளிகள் எண்ணிக்கையைக் கொண்டிருந்த கோவை, கிட்டத்தட்ட கடந்த ஒரு வாரமாக புதிதாக ஒரு நோயாளிகளை கூட பதிவு செய்யாத சாதனையை நிகழ்த்தியுள்ளது.

திராவிட ஆட்சிகள்

திராவிட ஆட்சிகள்

கடந்த 3 நாட்களாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சற்று அதிகம் என்றபோதிலும், நாம் குறிப்பிட்ட பெரிய மாநிலங்களை விடவும் இன்று நிலைமை கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. 1950களிலேயே தமிழகத்தில், இதற்கான விதை ஊன்றப்பட்டு உள்ளது. 1967 முதல், திமுக மற்றும் அதிமுக ஆகிய இருபெரும் திராவிடக் கட்சிகள் இடையே ஆட்சி மாறி மாறிப் பயணித்து வந்துள்ளது. இருவருக்கு நடுவேயும் அரசியலில் ஏகப்பட்ட மாறுபட்ட கருத்துக்களும், மோதல்களும் இருந்தபோதிலும், மருத்துவ சுகாதார வசதி என்று வந்துவிட்டால் அந்த இரு கட்சிகளின் ஆட்சிகளிலும் சமரசம் செய்து கொண்டதே கிடையாது.

சிறப்பான சிகிச்சை

சிறப்பான சிகிச்சை

தமிழகத்தை ஆய்வு செய்ய வந்திருந்த கொரோனா தொடர்பான, மத்திய குழு, இந்த மாநிலத்தில் மிகச்சிறந்த மருத்துவ வசதி கொடுக்கப்படுவதாக நற்சான்றிதழ் கொடுத்து விட்டுச் சென்றுள்ளது. ஏனெனில் நோயாளிகளின் மீட்பு விகிதம் என்பது 54 சதவீதம் என்ற அளவுக்கு இருக்கிறது. கொரோனா வைரஸ் பாதிப்பால் இறப்பு விகிதம் என்பது 1.2 சதவீதமாக மட்டுமே உள்ளது. தேசிய சராசரியான 3% என்பதிலிருந்து இது பாதிக்கும் குறைவுதான்.

மருத்துவ கல்லூரிகள் அதிகம்

மருத்துவ கல்லூரிகள் அதிகம்

தமிழகத்தில் 25 அரசு மருத்துவக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. 11 புதிய மருத்துவ கல்லூரிகள் கட்டப்பட்டு கொண்டிருக்கின்றன. பிரசவத்தின்போது தாய்மார்கள் இறக்கும் விகிதம் என்பது, தமிழகத்தில் 16 என்ற அளவில் உள்ளது. இது அண்டை மாநிலமான ஆந்திராவில் 32, குஜராத்தில் 30. குழந்தைகள் இறப்பு விகிதம் என்பது தமிழகத்தில் 2, ஆந்திராவில் 13, குஜராத்தில் 11. இது போன்ற முக்கியமான புள்ளிவிவரங்களில், அண்டை மாநிலமான கேரளா மட்டுமே தமிழகத்தை விட சற்று முந்தி நிற்கிறது. மற்றபடி தமிழகம்தான் டாப். கேரளமும், தமிழகத்தை விட மக்கள் தொகை குறைந்த மாநிலம் என்பது இதில் கவனத்தில் எடுக்க வேண்டிய மற்றொரு அம்சம்.

வெளிநாடுகள்

வெளிநாடுகள்

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் மற்றும் அரபு நாடுகளில் பணியாற்றும் தொழிலாளர்களில் கணிசமானோர் கேரளா மற்றும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். இதனால்தான் ஜனவரி மாதம் கடைசி வாரத்தில் இருந்தே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்தது தமிழக அரசு. விமான நிலையங்களில் கடும் பரிசோதனைகள் நடத்தப்பட்டு, நோயாளிகள் மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டனர். நோய் அறிகுறி உள்ளவர்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டனர்.

உழைப்பு

உழைப்பு

மார்ச் 7ம்தேதி ஓமன் நாட்டிலிருந்து தமிழகம் திரும்பிய ஒருவருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. இதுதான் மாநிலத்தில் பதிவான முதல் கேஸ். மார்ச் 18ஆம் தேதி உத்தர பிரதேச மாநிலத்தில் இருந்து தமிழகம் வருகை தந்த ஒரு புலம்பெயர் தொழிலாளிக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. அப்போது முதலே நோயாளிகள் யார் யாரை தொடர்பு கொண்டனர் என்பதில் தொடங்கி உரிய மருத்துவ சிகிச்சைகள் வழங்குவதிலிருந்து தொடர்ச்சியாக மருத்துவ ஊழியர்கள் அயராது பாடுபட்டு வருகிறார்கள்.

இரு விஷயங்கள்

இரு விஷயங்கள்

தமிழகத்தில் இத்தனை நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட பிறகும், ஓரளவுக்கு வைரஸ் பாதிப்பு அதிகரிக்க முக்கிய காரணம் என்பது டெல்லி மாநாட்டில் பங்கேற்று திரும்பியவர்கள் அதிகம் பேர் பாதிக்கப்பட்டதும், சென்னை கோயம்பேடு காய்கறி சந்தை மூலமாக வைரஸ் பாதிப்பு பரவியிருப்பதும்தான். இவை இரண்டும்தான் முக்கிய காரணமே தவிர, மற்ற இடங்களில் கண்டைன்மெண்ட் எனப்படும் பணிகள் சுகாதாரத் துறையால் மிகச்சிறப்பாக முன்னெடுக்கப்படுகிறது.

தொடர்பு அறிதல்

தொடர்பு அறிதல்

தமிழக சுகாதாரத் துறையின் அதிகாரி ஒருவர் இதுபற்றி கூறுகையில், கேரளாவில் தொடர்புகளை கண்டறிவதற்கு பொதுமக்கள் உதவி நாடப்பட்டது. ஆனால் தமிழகத்தில் அந்த தொல்லை கூட செய்யப்படவில்லை. நேரடியாக அதிகாரிகளே அந்த பணியை செய்து திறமையாக கையாண்டனர். மத தலைவர்களை தொடர்பு கொண்டு அவர்கள் உதவியுடன் அறிகுறி உள்ளவர்கள், உடனடியாக கண்டு பிடிக்கப்பட்டனர். அவர்கள் தொடர்புகளும் தனிமைப்படுத்தப்பட்டனர். இவ்வாறு அவர் தெரிவிக்கிறார்.

உணவு வினியோகம்

உணவு வினியோகம்

தலைமைச் செயலகத்தில் உள்ள ஒரு மூத்த அதிகாரி இதுபற்றி கூறுகையில், வெளிமாநிலத்தில் இருந்து வருகைதந்த புலம்பெயர் தொழிலாளர்கள் உணவு கிடைக்காமல் பாதிக்கப்பட்டு விடக்கூடாது. அவர்கள் கூட்டமாக சேர்ந்து விடக் கூடாது என்பதில் மிகவும் கவனம் செலுத்தப்பட்டது. உள்ளாட்சி நிர்வாகத்தின் சார்பில் உடனடியாக புலம்பெயர்ந்து தொழிலாளர்களுக்கு குடியிருப்பு வசதி ஏற்படுத்தி தரப்பட்டது. உணவு வழங்கப்பட்டது. இதுவும் நோய் பரவலை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றியது. தமிழகத்தில் இப்போது 576 கம்யூனிட்டி சமையலறைகள் செயல்பட்டு வருகின்றன. 1.18 லட்சம் பேருக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது. 245 அம்மா உணவகங்கள் மூலமாக தினமும் 3 லட்சத்து 12 ஆயிரம் மக்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது என்று தெரிவிக்கிறார் அந்த அதிகாரி.

English summary
Thanks to Dravidian party rulers, Tamilnadu is handling coronavirus outbreak very well, compared to similar population state Gujarat and Andhra Pradesh.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X