9 மாவட்ட உள்ளாட்சி தலைவர் பதவி மறைமுக தேர்தல்.. பெரும்பாலான பதவிகளை மொத்தமாக அள்ளிய திமுக!
செனனை: 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலின் தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் இன்று நடந்து வருகிறது. மாவட்ட ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் தலைவர்கள், துணைத் தலைவர்கள் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடந்து வருகிறது.
மேலும் கிராம ஊராட்சிமன்ற துணைத் தலைவர் பதவிக்கும் இன்று மறைமுக வாக்கெடுப்பு முறையில் தேர்தல் நடந்து வருகிறது. இதுவரை வெளியான முடிவுகளின் படி திமுக கூட்டணி பெரும்பான்மை இடங்களில் மாவட்ட ஊராட்சி தலைவர் , ஒன்றிய ஊராட்சி தலைவர், ஊராட்சி மன்ற துணை தலைவர் பதவிகளை கைப்பற்றி உள்ளது.
நடந்து முடிந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்ற மாவட்ட, ஒன்றிய கவுன்சிலர்கள் மூலம் தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
பிரசிடெண்ட், கவுன்சிலர்கள் உட்பட.. ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் இன்று பதவிப் பிரமாணம்

வெற்றி நிலவரம்
நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் 9 மாவட்டங்களில் திமுக மாபெரும் வெற்றியை பெற்றது. காஞ்சீபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் இந்த ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்தது.140 மாவட்ட கவுன்சிலர்கள் பதவிக்கு நடந்த தேர்தலில் 138 இடங்களில் திமுக வென்றுள்ளது. 2 இடங்களில் மட்டுமே அதிமுக வெற்றி பெற்றுள்ளது. மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் பெரும்பான்மை இடங்களில் திமுகவே வென்று உள்ளது.

ஒன்றிய கவுன்சிலர் வெற்றி
இன்னொரு பக்கம் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கான தேர்தலிலும் திமுகதான் அதிக இடங்களில் வென்றுள்ளது. ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு தேர்தல் நடந்த 1,381 இடங்களில் 1,118 இடங்களை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பெற்றுள்ளன.ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் திமுக மட்டும் தனியாக 974 இடங்களை வென்றுள்ளது. அதிமுக கூட்டணி 220 ஒன்றிய இடங்களை வென்றுள்ளது. அதிமுக தனியாக 212 இடங்களை வென்றுள்ளது. பா.ம.க. 47 இடங்களை ஒன்றிய கவுன்சிலில் பெற்றுள்ளது.

மறைமுக தேர்தல்
இந்த கவுன்சிலர்கள் மூலம் ஊரக உள்ளாட்சி தேர்தலின் தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. கவுன்சிலர் பதவியை பெற்றவர்கள் இந்த தேர்தல்களில் வாக்களிக்க முடியும், போட்டியிட முடியும். அதன்படி மாவட்ட ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் தலைவர்கள், துணைத் தலைவர்கள், கிராம ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பதவிகளுக்கு இன்று தேர்தல் நடந்து கொண்டு இருக்கிறது. இந்த தேர்தல் மூலம் 74 ஊராட்சி ஒன்றிய தலைவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அதேபோல் 2900 கிராம ஊராட்சி மன்ற துணை தலைவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 9 மாவட்டங்களில் மாவட்ட ஊராட்சித் தலைவர்கள், துணைத் தலைவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

பதவி
இதனால் இதுவரை பதவி ஏற்காத கவுன்சிலர் இன்று தேர்தல் நடப்பதற்கு முன் பதவி ஏற்க வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்தது. அதன்படியே இன்று காலை பல்வேறு கவுன்சிலர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர். 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலோடு மேலும் சில மாவட்டங்களில் 130 ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான இடைத் தேர்தலும் நடைபெற்றதால், அதற்கான தலைவர் பதவிகளுக்கும் இன்று மறைமுக தேர்தல் நடந்தது.

திமுக
காஞ்சீபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களிலும் ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு தேர்தல் நடந்த 1,381 இடங்களில் 1,118 இடங்களை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பெற்றுள்ளன. இதனால் அனைத்து 74 ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவியையும் திமுக கூட்டணிதான் இன்று வெல்வது உறுதியாகி உள்ளது.

மாவட்ட ஊராட்சி தலைவர்
அதேபோல் மாவட்ட ஊராட்சி தலைவர் பதவியிலும் 138 மாவட்ட கவுன்சிலர் உள்ளதால் அனைத்து தலைவர் பதவிகளையும் திமுக கூட்டணி கைப்பற்ற உள்ளது குறிப்பிடத்தக்கது. இது போக மாவட்ட ஊராட்சி துணை தலைவர், ஒன்றிய ஊராட்சி துணை தலைவர், கிராம ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பதவிகளும் பெரும்பாலும் திமுக கூட்டணிக்கே கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான முடிவுகள் இன்னும் முழுமையாக வெளிவர இல்லை என்றாலும் திமுக வசம் 1,118 ஒன்றிய கவுன்சிலர்கள், 138 மாவட்ட கவுன்சிலர்கள் உள்ளதால் பெரும்பான்மையான இடங்களை அக்கூட்டணியே வெல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.