ஓமிக்ரான் பரவுது.. நகர்புற உள்ளாட்சி தேர்தலை ஒத்திவைக்க வேண்டும்.. சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு
சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா மூன்றாவது அலை உச்சத்தில் இருப்பதால் தற்போதைய சூழலில் நகர்புற உள்ளாட்சி தேர்தலை நடத்தக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிந்துள்ள நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. முன்னதாக ஜனவரி இறுதியில் உள்ளாட்சி தேர்தல் நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
தாராபுரத்தில் சோகம்.. ஆற்றில் குளிக்க சென்ற 5 மாணவர்கள் உட்பட 6 பேர் பலி.. பரிதாப சம்பவம்
ஆனால் அதன்பின் ஓமிக்ரான் கொரோனா பரவல் காரணமாக இது தொடர்பான அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. ஓமிக்ரான் கொரோனா பரவல் அதிகரிப்பதால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரிக்கு தள்ளிப்போகலாம் என்று கூறப்பட்டது.

நகர்ப்புற உள்ளாட்சி கூட்டம்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதிகளை முடிவு செய்வது தொடர்பாக தமிழ்நாட்டில் இன்று அனைத்து கட்சி கூட்டம் நடக்கிறது. அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் மாநில தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை
செய்ய இருக்கிறார். கோயம்பேட்டில் மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் காலை 11.30 மணிக்கு கூட்டம் நடக்கிறது. ஓமிக்ரான் பரவலுக்கு இடையே எப்படி தேர்தல் நடத்துவது என்பது தொடர்பான ஆலோசனைகள் இதில் செய்யப்படும்.

தேர்தல்
இந்த நிலையில் தமிழ்நாட்டில் கொரோனா மூன்றாவது அலை உச்சத்தில் இருப்பதால் தற்போதைய சூழலில் நகர்புற உள்ளாட்சி தேர்தலை நடத்தக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசின் ஓய்வுபெற்ற மருத்துவர் நக்கீரன் என்பவர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் எஸ்.பிரபாகரன் பொறுப்பு தலைமை நீதிபதி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வு முன்பு முறையிட்டார். அப்போது, தற்போதைய சூழலில் தேர்தலை நடத்தினால் கொரோனா பாதிப்பு மிக மோசமான நிலையை எட்ட நேரிடும் என அவர் மனுவை குறிப்பிட்டார்.

மனுதாக்கல்
நகர்புற உள்ளாட்சி தேர்தலை நடத்துவது தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் இன்று நடைபெறும் நிலையில், தேர்தல் தொடர்பாக எந்த நேரத்திலும் அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாகவும் தனது முறையீட்டில் குறிப்பிட்டார். எனவே தேர்தலை தள்ளிவைக்க வேண்டுமென்ற கோரிக்கையுடன் தொடரப்பட்ட வழக்கை நாளை அல்லது நாளை மறுநாள் விசாரிக்க வேண்டும். இது முக்கியமான வழக்கு. எனவே இதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென பொறுப்புத் தலைமை நீதிபதி அமர்வில் கோரிக்கை வைத்தார்.

ஓமிக்ரான்
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் நாளை மறுதினம் (ஜனவரி 21) மனுவை விசாரிப்பதாக தெரிவித்தனர். ஏற்கனவே ஜனவரி 27ம் தேதிக்குள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அறிவிப்பு வெளியிட வேண்டுமென உச்ச நீதிமன்ற உத்தரவிட்டது. இந்த நிலையில் மேயர் உள்ளிட்ட பதவிகளுக்கான ஒதுக்கீடுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தேர்தலை தள்ளி வைக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது