விஜயலட்சுமிக்கு மிரட்டல்.. பெங்களூர் சிறையில் இருந்த ஹரிநாடாரை தூக்கிய திருவான்மியூர் போலீஸ்.. கைது
சென்னை: பெங்களூர் சிறையில் உள்ள ஹரிநாடாரை நடிகை விஜயலட்சுமி தற்கொலை முயற்சி வழக்கில் திருவான்மியூர் போலீசார் கைது செய்துள்ளனர்.
பனங்காட்டுப் படை கட்சி தலைவர் ஹரி நாடார் நடமாடும் நகைக்கடையாக வலம் வருபவர் . கழுத்து, கை என்று உடல் முழுக்க பல கிலோவிற்கு தங்க நகை அணிந்து வலம் வருவது ஹரி நாடார் வழக்கம். அரசியல் தாண்டி சினிமா தயாரிப்பு, சினிமா படங்களில் நடிப்பது போன்ற பணிகளையும் இவர் செய்து வருகிறார்.
தமிழகத்தில் கொரோனா தீவிரம் - ஐசியூ நோயாளிகள், ஆக்சிஜன் தேவைப்படுவோர் எண்ணிக்கை 4 மடங்கு அதிகரிப்பு
நாங்குநேரி இடைத்தேர்தல், ஆலங்குளம் சட்டசபை தேர்தல்களில் அதிக வாக்குகள் பெற்று இவர் கவனம் ஈர்த்தார். இந்த நிலையில் கடந்த வருடம் மோசடி வழக்கில் ஹரி நாடார் பெங்களூரில் கைது செய்யப்பட்டார்.

பெங்களூர் வழக்கு ஹரி நாடார்
பெங்களூரில் இருக்கும் வெங்கட்ராமன் என்பவரிடம் இவர் ரூ. 7.2 கோடி ரூபாய் வாங்கி மோசடி செய்து இருக்கிறார். அவருக்கு கடன் வாங்கி தருவதாக கூறி ஹரி நாடார் கடைசியில் கடன் வாங்கி தராமல் கமிஷன் மட்டும் பெற்று ஏமாற்றி உள்ளார். இந்த வழக்கில்தான் கர்நாடக போலீசார் ஹரி நாடாரை கைது செய்தனர். இந்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட ஹரி நாடார் தற்போது பரப்பன அக்ரஹார சிறையில் காலம் கழித்து வருகிறார்.

கைது
இந்த நிலையில் பெங்களூர் சிறையில் உள்ள ஹரிநாடாரை நடிகை விஜயலட்சுமி தற்கொலை முயற்சி வழக்கில் திருவான்மியூர் போலீசார் கைது செய்துள்ளனர். ஹரிநாடாரை தமிழ்நாடு போலீஸ் கைது செய்ய வாய்ப்பு உள்ளதாக முன்பே தகவல்கள் வந்தன. இது தொடர்பாக திருவான்மியூர் போலீசார் பெங்களூர் போலீசாருக்கு கடிதம் எழுதி இருந்ததாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில்தான் இன்று பிற்பகல் ஹரிநாடார் கைது செய்யப்பட்டார்.

என்ன புகார்
கடந்த சில வருடங்களுக்கு முன் தமிழ்நாட்டை சேர்ந்த அரசியல் கட்சி தலைவர் ஒருவர் தன்னை நம்ப வைத்து ஏமாற்றிவிட்டதாக விஜயலட்சுமி குறிப்பிட்டு இருந்தார். தன்னை அந்த அரசியல்வாதி ஏமாற்றிவிட்டதாக விஜயலட்சுமி கூறி வீடியோவும் வெளியிட்டார். இந்த நிலையில் அந்த அரசியல்வாதிக்கு ஆதரவாக செயல்படும் வகையில் விஜயலட்சுமியை ஹரி நாடார் மிரட்டியதாக புகார் வைக்கப்பட்டது. இந்த மிரட்டலை தொடர்ந்து விஜயலட்சுமி தற்கொலைக்கு முயன்றார்.

தற்கொலை முயற்சி
இதையடுத்து உடனே சென்னை மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட விஜயலட்சுமி காப்பாற்றப்பட்டார். இது தொடர்பாக விஜயலட்சுமி ஹரி நாடாருக்கு எதிராக திருவான்மியூர் போலீசில் புகார் அளித்தார். இந்த சம்பவம் நடந்தது 2020ல். இதில் எழும்பூர் மாஜிஸ்திரேட் நடிகை விஜயலட்சுமியிடம் வாக்குமூலமும் பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கில் இத்தனை வருடமாக நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்த நிலையில் தற்போது ஹரிநாடார் கைது செய்யப்பட்டுள்ளார்.