ராஜகண்ணப்பன் அவுட்.. சிவசங்கர் இன்.. நல்லா இருக்கே.. போக்குவரத்து துறையில் "எஸ்எஸ்" போட்ட 2 உத்தரவு!
சென்னை: தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சராக எஸ்எஸ் சிவசங்கர் நியமிக்கப்பட்ட நிலையில் இரண்டு முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கிறார். இரண்டு அறிவிப்புகளும் மக்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.
தமிழ்நாடு போக்குவரத்து துறையின் அமைச்சராக எஸ்எஸ் சிவசங்கர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். முதுகுளத்தூரில் ஒன்றிய நிர்வாகியாக இருப்பவர் ராஜேந்திரன். இவரை "எஸ்சி" என்று கூறி ஜாதி ரீதியாக திட்டியதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் மீது புகார் வைக்கப்பட்டுள்ளது .
இதையடுத்து ராஜகண்ணப்பன் அமைச்சரவை இலாக்கா மாற்றப்பட்டது.
விஷயமே இதுதான்.. திமுக போட்ட கணக்கு.. லாஸ்ட் சான்ஸையும் ராஜகண்ணப்பன் விட்டுவிடுவாரா?

ராஜகண்ணப்பன்
போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன் பிறப்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டு உள்ளார். அந்த துறையில் பிறப்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த எஸ்எஸ் சிவசங்கர் நியமிக்கப்பட்டார். ஏற்கனவே போக்குவரத்து துறையில் லஞ்ச புகார் இருந்தது குறிப்பிடத்தக்கது. போக்குவரத்து துறை நஷ்டத்தில் இயங்கி வருகிறது.

எஸ்எஸ் சிவசங்கர்
முன்னதாக போக்குவரத்துத்துறையின் துணை ஆணையர் நடராஜன் மீது லஞ்ச ஒழிப்புத்துறை புகார் வைக்கப்பட்டு ரெய்டும் நடத்தப்பட்டது. எழிலகத்தில் உள்ள அவரின் அலுவலகத்தில் இருந்து பல லட்சம் பணம் கட்டு கட்டாக மீட்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் போக்குவரத்து துறை அமைச்சராக சிவசங்கர் நியமிக்கப்பட்ட நிலையில் துறையில் பல்வேறு மாற்றங்கள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக அவர் பல்வேறு ஆலோசனைகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

விசாரணை
என்ன பிரச்சனை, லஞ்ச புகார் வந்தது எப்படி, அதிகாரிகள் யாருக்கு எல்லாம் தொடர்பு என்று சிவசங்கர் துறை ரீதியாக பல்வேறு ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறாராம். அதோடு நான் இருக்கும் போது இப்படி புகார்கள் எதுவும் வர கூடாது. எல்லாம் வெளிப்படையாக நடக்க வேண்டும் என்று துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இருக்கிறாராம். மேலும் நஷ்டத்தில் இயக்கம் போக்குவரத்து துறையை.. கொரோனா காலம் முடிந்துவிட்டதால் எப்படி லாபத்திற்கு கொண்டு செல்வது என்றும் ஆலோசனை செய்துள்ளாராம்.

போக்குவரத்து துறை
போக்குவரத்து துறை அமைச்சராக எஸ்எஸ் சிவசங்கர் நியமிக்கப்பட்ட நிலையில்தான் கடந்த ஒரு வாரத்தில் இரண்டு முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கிறார். இரண்டு அறிவிப்புகளும் மக்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. அதில் முதல் அறிவிப்பு.. அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் இயக்கப்படும் பேருந்துகளில் பெண்களுக்கு படுக்கை வசதி ஏற்படுத்தி கொடுப்பது.

படுக்கைவசதி பேருந்து
படுக்கைவசதி கொண்ட குளிர்சாதனம், குளிர்சாதனம் இல்லா அரசு பேருந்துகளில் முன்பு பெண்களுக்கு என்று தனியாக படுக்கை கிடையாது. தனியார் பேருந்துகளில் டிக்கெட் புக் செய்யும் போது பெண்களுக்கு என்று தனி இருக்கைகள் ஒதுக்கப்பட்டு இருக்கும். ஆனால் அரசு பேருந்துகளில் இந்த வசதி இல்லாமல் இருந்தது. ஆனால் தற்போது அரசு பேருந்துகளிலும் பெண்களுக்கு தனியாக படுக்கை ஒதுக்கப்பட வேண்டும் என்று போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது. இதற்காக, சீட் எண் 1 மற்றும் 4 ஆகியவை ஒதுக்கப்பட்டுள்ளன.

முன்பதிவு
மக்கள் இடையே இந்த அறிவிப்பு வரவேற்பை பெற்றுள்ளது. முன்பதிவு செய்யும்போது இணையதளத்திலேயே இந்த இருக்கைகளை தேர்வு செய்ய முடியும். இது போக தமிழ்நாட்டில் அரசு பேருந்துகளில் பேனிக் பட்டன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதல் கட்டமாக சென்னையில் இருக்கும் மாநகர பேருந்துகளில் இந்த பட்டன் அமலுக்கு வந்துள்ளது. பேருந்தில் ஒரு பிரச்சனை என்றால் இந்த பட்டனை அழுத்தினால் போதும். உடனே இந்த தகவல் பல்லவன் சாலையில் உள்ள MTC தலைமையகத்திற்கு செல்லும்.

பேனிக் பட்டன்
பேருந்தில் இருக்கும் சிசிடிவி மற்றும் ஜிபிஎஸ் மூலம் பேருந்தில் என்ன நடக்கிறது? பேருந்து எங்கே இருக்கிறது? என்று கண்டுபிடிக்கப்பட்டு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்படும். பெண்களுக்கு ஏதாவது பாதிப்பு என்றால் இந்த பேனிக் பட்டன் மூலம் எளிதாக புகார்களை தெரிவித்துக்கொள்ள முடியும். பெண்களின் பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து துறையின் அமைச்சராக ராஜகண்ணப்பன் இருந்த போதே இதற்கான முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டன.

அமைச்சர் எஸ்எஸ் சிவசங்கர்
இருப்பினும் அமைச்சர் எஸ்எஸ் சிவசங்கர் வந்ததும் பணிகள் வேகமாக முடிக்கப்பட்டு உடனடியாக சென்னையில் இந்த திட்டம் அமலுக்கு வந்துள்ளது. சென்னையில் மாநகராட்சி பஸ்களில் மொத்தம் 510 பஸ்களில் முதல் கட்டமாக இந்த வசதி கொண்டு வரப்பட்டு இருக்கிறது. நிர்பயா கார்ப்பஸ் நிதியிலிருந்து இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இரண்டு அறிவிப்பும் பெண்கள் தொடர்பானது என்பதால் அமைச்சர் எஸ்எஸ் சிவசங்கருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.