"ராணுவம் எதுக்கு?.. அடம் பிடிக்காதீங்க".. எஸ்.பி வேலுமணி தர்ணா.. முதல்வர் ஸ்டாலின் தந்த பதிலடி!
சென்னை: கோயம்புத்தூரில் முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்பி வேலுமணி நேற்று நடத்திய தர்ணா போராட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை வாக்களித்தார். தேனாம்பேட்டை எஸ்.ஐ.இ.டி கல்லூரியில் முதல்வர் ஸ்டாலின் எளிமையாக வரிசையில் நின்று வாக்களித்தார். இதையடுத்து கோவையில் முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்பி வேலுமணி நடத்திய போராட்டம் குறித்து ஸ்டாலின் பேட்டி அளித்தார்.
கோவையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் முறைகேடு நடப்பதாக கூறி நேற்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தர்ணா போராட்டம் செய்தார். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் அமர்ந்து எஸ்.பி வேலுமணி மற்றும் அதிமுக நிர்வாகிகள் தர்ணா செய்தார்.
கூடங்குளம் அணுக்கழிவு மையம் அமைக்கும் முடிவை கைவிடுக.. பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

ஸ்டாலின் பேட்டி
இது குறித்து பேட்டி அளித்த முதல்வர் ஸ்டாலின், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மக்கள் வாக்களித்து தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றிட வேண்டும். உள்ளாட்சி என்பது ஒரு சிறு குடியரசு என்று மகாத்மா காந்தி அடிக்கடி சொல்லி இருக்கிறார். உள்ளாட்சி அமைப்புகளின் மூலமாகவே அரசு தீட்ட கூடிய திட்டங்கள், அரசு நிறைவேற்ற வேண்டிய பணிகளை செய்ய முடியும். அதை உணர்ந்து மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

ஸ்டாலின் வாக்கு
கோவையில் எந்த சம்பவமும், பிரச்சனையும் ஏற்படவில்லை. ஏற்கனவே அதிமுக ஆட்சியில் இருந்த போது அந்த பகுதியில் இருக்கும் ஒரு அமைச்சர் செய்திருக்கும் அடாவடி தனங்கள், அயோக்கியத்தனங்கள் எல்லாம் இப்போது கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது. அதிமுக ஆட்சியில் இருந்த அடாவடி தனங்கள் இப்போது இல்லை. ஏற்கனவே முன்னாள் அமைச்சர் வேலுமணி தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் போராட்டம் செய்தனர்.

எஸ் பி வேலுமணி ஸ்டாலின்
ராணுவம் வர வேண்டும். அதுவரை போராட்டம் நடக்கும் என்று அடம் பிடித்துள்ளனர். ராணுவம் வர வேண்டிய அளவிற்கு அங்கு எந்த சம்பவமும் நடக்கவில்லை. தோல்வி பயம் வந்துவிட்டது அவர்களுக்கு. தோல்வி பயம் அவர்களை சூழ்ந்துவிட்டது. இதை மூடி மறைப்பதற்கு அவர்கள் பொய்யான நாடகம் நடத்துகிறார்கள். அவர்கள் தோல்வி அடைந்த பின் காரணம் சொல்ல வேண்டும் என்று இப்போதே போரட்டம் செய்கின்றனர்.

ராணுவம் ஏன்?
தேர்தலில் முறைகேடு நடந்ததாக எந்த ஆதாரமும் இல்லை . இதற்கு முன் கொடுக்கப்பட்ட புகார்கள் மீதும் தேர்தல் ஆணையம் வழக்கு பதிவு செய்துள்ளது. நாங்கள் ஏதாவது தவறு செய்து, அதற்கு ஆதாரம் கொடுத்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுப்போம். அதில் நடவடிக்கை எடுக்கப்படும். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கண்டிப்பாக திமுக வெற்றிபெறும். திமுக அரசின் இத்தனை மாத ஆட்சிக்கு மதிப்பளிக்கும் வகையில் மக்கள் திமுகவிற்கு வாக்களிப்பார்கள்.

21 மாநகராட்சி வெற்றி
திமுகவிற்கு மக்கள் இடையே பெரிய அளவில் ஆதரவு இருக்கிறது. எங்களுக்கு வரும் செய்திகளின் படி 21 மாநகராட்சிகளிலும் திமுக கூட்டணிதான் வெற்றிபெறும். எங்களுக்கு வாக்களிக்காத மக்களும் கூட, மிஸ் செய்து விட்டோமே என்று கவலை அடையும் அளவிற்கு சிறப்பாக ஆட்சி செய்து வருகிறோம். மக்கள் பெயர்வாரியான் வெற்றியை திமுகவிற்கு வழங்குவார்கள் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.