தமிழகத்தில் 5 நாட்களுக்குப் பின் கோவில்கள் திறப்பு - பழனியில் சாமி தரிசனம் செய்ய குவிந்த பக்தர்கள்
சென்னை: தைப்பொங்கல் முதல் தைப்பூசம் வரை 5 நாட்கள் வரை பக்தர்களுக்கு சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டிருந்தது. 5 நாட்களுக்குப் பிறகு இன்று வழக்கம் போல பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டதால் அதிகாலை முதலே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஆலயங்களில் குவிந்து வருகின்றனர். பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாடுகள் கடுமையாக விதிக்கப்பட்டுள்ளதால். ஊரடங்கு விதிமுறைகளும் கடுமையாக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் வழிபாட்டு தலங்களுக்கும் முக்கிய கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. 31ஆம் தேதிவரை கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன.
இமேஜ் முக்கியமில்ல! ரஜினி தந்த அட்வைஸ்.. கடைசி வரை கஷ்டப்பட்ட ஐஸ்வர்யா.. தனுஷுக்கு இது பெரிய ரிஸ்க்
கடந்த 14ஆம் தேதி தைப்பொங்கல் பண்டிகை முதல் 18ஆம் தேதி தைப்பூசம் வரை அனைத்து வழிபாட்டுத்தலங்களும் மூடப்படுவதாகவும் தமிழக அரசு அறிவித்தது. இதனையடுத்து பக்தர்கள் பண்டிகை நாட்களில் சாமி தரிசனம் செய்ய முடியாமல் கோபுர வாசல்களில் கற்பூரம் வைத்து வழிபட்டனர்.

கூடிய கூட்டம்
வழிபாட்டுத்தலங்கள் மூடப்பட்டாலும் ஆகம விதிமுறைப்படி ஆலயங்களில் பூஜைகள் நடைபெற்றன. தைப்பூசத்தை முன்னிட்டு நேற்று அனைத்து ஆலயங்களிலும் சிறப்பு பூஜைகள் தேரோட்டம், தெப்பத்திருவிழாக்கள் எளிமையாக நடைபெற்றன. கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளையும் மீறி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பழனி, திருச்செந்தூரில் குவிந்தனர்.

அதிகாலை முதலே பக்தர்கள் தரிசனம்
தமிழகத்தில் 5 நாட்களுக்கு பின் வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில், பழனியில் பக்தர்கள் குவிந்துள்ளனர். காவடிகளை சுமந்து கொண்டு பாதயாத்திரையாக வந்த பக்தர்கள் அதிகாலை முதலே மலையேறி முருகப்பெருமானை தரிசனம் செய்தனர். கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பாத யாத்திரையாக வந்து காத்திருந்து முருகனை தரிசனம் செய்கின்றனர்.

தெப்ப உற்சவம்
பழனி முருகன் கோயிலில் இன்று முதல் வருகிற 21ஆம் தேதி வரை தைப்பூச திருவிழா நடைபெறுகிறது. கொரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால், அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி திருவிழா நடத்தப்பட உள்ளது. 21ஆம் தேதி கோவில் வளாகத்தில் தெப்ப உற்சவம் நடைபெறும். அதிலும் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. மேலும் தைப்பூச திருவிழா நிகழ்ச்சிகள் கோவில் வலைத்தளம், யூ-டியூப் சேனல் மூலம் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அரோகரா முழக்கம்
தமிழகம் முழுவதும் முருகப்பெருமான் ஆலயங்களில் மட்டுமல்லாது சிவ ஆலயங்களிலும் பெருமாள் ஆலயங்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. ராமேஸ்வரம் ராமநாத சாமி கோவிலில் ஏராளமானோர் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர். தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 25ஆயிரம் பேரை நெருங்கியுள்ள நிலையில் இன்றைய தினம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாட்டுத்தலங்களில் குவிந்துள்ளதால் கொரோனா பரவல் அதிகரிக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது.