• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

அறிவுபூட்டின் திறவுகோல்.. அடிமை விலங்கை நொறுக்கியவர்.. சமூக நீதி தந்தை.. வெண்தாடி புயல்.. பெரியார்

|

சென்னை: தமிழகம் தந்த தவப்புதல்வன்.. தந்தை பெரியாரின் நினைவு நாள் இன்று.. காலத்தால் அழிக்க முடியாத, அவரது அருமை பெருமைகளை "ஒன் இந்தியா தமிழ்" நினைவுகூர்வதில் மிக்க மகிழ்ச்சி கொள்கிறது!

1944-1949 = தமிழகத்தின் பொற்காலம் என்றுதான் சொல்ல வேண்டும்.. இந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தை திராவிடர் கழகம் தலைகீழாக புரட்டி போட்டது. பல அதிரடி மாற்றங்களை ஏற்படுத்தியது. தந்தை பெரியாரின் ஆழ்ந்த சிந்தனைக்குரிய எளிய தமிழும், அண்ணாவின் அடுக்கு மொழியும் மயக்கும் வார்த்தைகளையும் கொண்ட அழகு தமிழும் தமிழக மக்களை கட்டி போட்டன.

பல மூத்த தமிழ் சான்றோர்களும், சமுதாய நல விரும்பிகளும், புதுமையிலும் புரட்சியிலும் நாட்டம் கொண்ட சிந்தனையாளர்களும், பெண் உரிமைக்கு பாடுபட்ட - மாதர்குல முன்னேற்றத்திற்கும் விடுதலைக்கும் தங்களை அர்ப்பணிக்க கொண்ட அறிவார்ந்த மங்கையர் கூட்டமும் பெரியாரை போற்றி புகழ்ந்து அவரது பாதையில் பயணிக்க தொடங்கியது சத்தியமான உண்மை!

பிராமண ஆதிக்கமும், சனாதன தர்மமும், பழமைவாதமும், இளமையிலேயே தன்னை முற்றுகையிட்டிருந்த சமூக சூழல்கள், மூடநம்பிக்கைகள், வடமொழியின் தாக்கங்கள் போன்றவற்றால் பெரியாரின் சிந்தனை ஓட்டம் எதிர்மறையாக வளர்ந்தது.. எனவே பழமைவாதத்திற்கு எதிரான பகுத்தறிவும், வடமொழிக்கு எதிரான தமிழ்ப்பற்றும், ஆத்திகத்திற்கு எதிரான நாத்திகமும் அவருக்குள் தானாகவே உருவாகி வளர்ந்தன.

3 சான்றோர்கள்

3 சான்றோர்கள்

நாகரீகம், பண்பாடு, கலாச்சாரம், வாழ்க்கை முறை, வழிபாட்டு நெறி, உணவு, பழக்கவழக்கம் போன்றவற்றில் ஆரியர்களுக்கும் திராவிடர்களுக்கும் அடிப்படையில் நிறைய வித்தியாசங்கள் இருந்தன. இந்த நிலையில், மூட நம்பிக்கைகளுக்கும், பழமைவாதங்களுக்கும் எதிராக 3 சான்றோர்கள் உருவானார்கள். மராட்டியத்தில் ஜோதிபாபூலே, கேரளத்தில் நாராயணகுரு, தமிழ்நாட்டில் தந்தை பெரியார் ஆகியோர் தோன்றினார்கள். இந்த 3 பேரில் பெரியாரை தவிர மற்ற இருவரும் சமூக சீர்திருத்தத்தோடு பணியை நிறைவு கொண்டார்கள். ஆனால் தமிழ்நாட்டில் நிலைமையோ வேறு.. மூடநம்பிக்கை, பழமைவாதம் போன்றவற்றுக்கு ஆரியர்களே காரணம் என்றும், இதற்கு மூலக் காரணம் இதிகாசங்கள், புராணங்கள், பலியிடுதல் போன்றவற்றை உள்ளடக்கிய இந்து மதம்தான் காரணம் என்று இந்து கடவுள்களுக்கு எதிராக போராடுவது என்ற முடிவுக்கு பெரியார் வந்தார்.

நீதி கட்சி

நீதி கட்சி

அதேபோல அரசியல் பிரச்சினையையும் கையில் எடுத்தார் பெரியார். பிரிட்டிஷ் ஆட்சியில் சுமார் 90 சதவீதம் உயர்பதவியும், பொறுப்புகளும் பிராமணர்கள் வசம் இருப்பதாகவும், இதர பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் வெறும் கூலிகளாகவும், அடிமைகளாகவும், அன்றாடங் காய்ச்சிகளாகவும் வாழ்வதாகவும், அதற்கு முடிவு கட்ட வேண்டும் என்றும் உறுதி ஏற்றார். இந்த நோக்கத்திற்காகத்தான், அப்போது ஏற்கனவே நீதிக்கட்சி போராடிக் கொண்டிருந்தது. இட ஒதுக்கீட்டு கொள்கையும் அது வகுத்திருந்தது. எனவே அதற்கு பிரச்சாரம் தேவைப்பட்டது. அதற்காக அவருக்கு ஒரு இயக்கம் தேவைப்பட்டது. அதனால் அவர் நீதிக்கட்சியையும், பின்னர் சுயமரியாதை இயக்கத்தையும் ஆதரித்து அவற்றின் முக்கிய தூணாக விளங்கினார்.

பெண்ணடிமைத்தனம்

பெண்ணடிமைத்தனம்

ஆக, தந்தை பெரியாருக்கு ஒரே சமயத்தில் பல கடமைகள் வந்து சேர்ந்தன. மூடநம்பிக்கை, பழமைவாதம் ஆகியவற்றை ஒழிப்பது, அதன் ஊற்று கண்ணாக விளங்கும் இந்த கடவுள்களையும், வேதங்கள், உபநிஷதங்கள், போன்றவற்றை எதிர்ப்பது, அரசின் உத்தியோக துறையில் பிராமணர்களின் ஆதிக்கத்தை குறைப்பது, இடஒதுக்கீட்டின் மூலம் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் மேம்பாட்டிற்கு பாடுபடுவது, தீண்டாமை, பெண்ணடிமைத்தனம் ஆகிய சமூக அவலங்களுக்கு முடிவு கட்டுவது என்ற எதிர்கால கடமைகள் அவரை அரசியல் கட்சியை துவங்க வித்திட்டன.. மேற்கண்ட இந்த கொள்கைகளே திராவிட இயக்கத்தின் கொள்கைகளாகவும் உருவாயிற்று.

இந்து கடவுள்கள்

இந்து கடவுள்கள்

திராவிடர் கழகத்தை துவக்கி தீவிர பிரச்சாரத்தின் மூலம் தனது கொள்கைகளை மக்கள் மத்தியில் கொண்டு சென்றார்.. இந்து மதத்தையும், இந்து கடவுள்களையும் முரட்டு தனமாக விமர்சித்தார்.. விநாயகர் சிலைகளை வீதிகளில் உடைத்தார்.. ராமரையும், கிருஷ்ணரையும், இந்திரனையும் கிண்டல் செய்தார்.

தமிழ் முழக்கம்

தமிழ் முழக்கம்

பெண்ணுரிமைக்கு முழுமையான ஆதரவை முதன்முதலாக அளித்தது தந்தை பெரியாரே... பெண்களுக்கு ஆதவாக அவரை போல எழுதியவர்கள், அவரை போல் பேசியவர்கள் எவருமே இல்லை.. தன் கடைசி மூச்சு வரை கடவுள் மறுப்பு கொள்கையை அவர் கைவிடவே இல்லை.. தமிழகம் தலை நிமிர்ந்தது.. தமிழக மக்கள் விழித்தெழுந்தார்கள்.. மூட நம்பிக்கைகளுக்கும், பழமைவாதத்திற்கும், தீண்டாமைக்கும், ஜாதிவெறிக்கும் எதிராக மக்களே வெகுண்டார்கள்.. கல்தோன்றி மண் தோன்றா காலத்து முன்தோன்றி மூத்த மொழி தமிழ் என்று மூலை முடுக்குகளில் எல்லாம் அவர் எழுப்பிய முழக்கம் தமிழன்னையை நெகிழ வைத்தது.. தமிழே எங்கள் மூச்சு என்று ஒவ்வொரு தமிழனையும் கர்ஜிக்க வைத்தது.

புரட்சி பூமி

புரட்சி பூமி

ஒரே சமயத்தில் பல்வேறு லட்சியங்களை ஒன்றிணைத்து இயக்கம் நடத்தி, தமிழக மக்களை தட்டி எழுப்பிய முதல் சமூக பேராராளி தந்தை பெரியார் மட்டுமே என்பதை உரக்க சொல்லலாம்.. தந்தை பெரியாரின் பின்னால் லட்சக்கணக்கான இளைஞர்கள் திரண்டார்கள்.. பூச்சி புழுவை போல புரண்டு நெளிந்து கொண்டிருந்த பாமர மக்கள் போர்க்கோலம் பூண்டார்கள்.. புரட்சியை அரங்கேற்றும் புதிய பூமியாக தமிழகம் மாறியது.. பகுத்தறிவு பூமியாக சீர்திருத்தங்களின் விளைநிலமாக தமிழகம் திகழ தொடங்கியது.. மிக பெரும் சமூக இயக்கமாய் அரசியல் ஸ்தாபனமாக திராவிடர் இயக்கம் விஸ்வரூபம் எடுத்தது.. இந்தியாவின் முதல் பொதுத்தேர்தல் வந்தது.. முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டத்திற்குத் தள்ளப்பட்டது திராவிடர் கழகம்.

சீர்திருத்தங்கள்

சீர்திருத்தங்கள்

திராவிடர் கழகத்தில் அண்ணாவை போன்ற இளைஞர்கள் தேர்தலில் போட்டியிட விரும்பினார்கள்.. திராவிட இயக்க கொள்கைகளையும், சமூக சீர்திருத்தங்களையும் சட்டமாக்கி அமலாக்க வேண்டுமானால் நாம் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று ஆட்சி கட்டிலில் அமர்ந்தால்தான் முடியும் என்று அண்ணாவும், அவரது முக்கிய தம்பிகளும் வாதாடினார்கள்.

திட்டங்கள்

திட்டங்கள்

தந்தை பெரியார் இந்த யோசனையை நிராகரித்தார்.. மக்களுக்கு நல்ல திட்டங்களை வகுக்கவும், நன்மைகள் புரியவும் ஆட்சியில் இருந்தால்தான் என்பது இல்லை.. நமது இயக்கத்தாலும் மக்களின் எழுச்சிமிகு போராட்டங்களாலும் யார் ஆட்சியில் இருந்தாலும் நமது லட்சியங்களையும், கொள்கைகளையும் நிறைவேற்ற முடியும் என்றார் தந்தை பெரியார்.

அண்ணா & கோ

அண்ணா & கோ

தேர்தலில் போட்டியிட்டால் எல்லாரிடமும் போய் ஓட்டு கேட்க வேண்டும்.. அதற்காக பல சமரசங்களை செய்து கொள்ள நேரும்.. இதன் விளைவாக நமது கொள்கைகள் நீர்த்து போகும் என்றும் அவர் விவரித்தார்.. இந்த நேரத்தில்தான் அன்னை மணியம்மையை திராவிடர் கழக சொத்துக்களின் பாதுகாப்பிற்காக திருமணம் செய்து கொண்டார் பெரியார்.. இதையே ஒரு காரணம் காட்டி, அண்ணா குழுவினர் (ANNA TEAM) திராவிடர் கழகத்திலிருந்து வெளியேறி திராவிடர் முன்னேற்ற கழகத்தை உருவாக்கி.. தேர்தலில் போட்டியிட்டு.. வெற்றியும் பெற்று.. ஆட்சியையும் பிடித்தது வேறு கதை!

போர்க்குணம்

போர்க்குணம்

ஆனால் பெரியாரின் சமூக ஆவேசம், அநீதிக்கு எதிரான ஆக்ரோஷம், ஒடுக்கப்பட்ட மக்கள் மீதான அபரிமிதமான பாசம், அவர்களின் விடிவிற்காக உள்ளத்தில் கனன்று கொண்டிருந்த போர்க்குணம் போன்றவற்றுக்கு முன்னால் பட்டம், பதவிகளும், அரசு அதிகாரங்களும் அவருக்கு துச்சமாகவே தெரிந்தன.

இந்தி எதிர்ப்பு

இந்தி எதிர்ப்பு

அதேசமயம், நிதர்சனமான ஒரு உண்மையை தந்தை பெரியார் 70 ஆண்டுகளுக்கு முன்பே எடுத்து சொன்னதை மறுத்துவிட முடியாது.. பெரியாரின் அடிப்படை இலட்சியங்களில் ஒன்றாக இந்தி எதிர்ப்பு விளங்கியது.. அதேபோல, புத்தர் காலத்துக்கு பிறகு - பௌத்தர்களின் போராட்டத்திற்கு அதாவது 2 ஆயிரம் ஆண்டுகள் கழித்தும் அதே சமஸ்கிருதத்தை எதிர்த்து போர்க்கோலம் பூண்ட 2-வது தலைவர் தமிழக வரலாற்றில் தந்தை பெரியார் மட்டுமே.. இப்போதும் இதே நிலைமைதான்.. அப்படியென்றால், பெரியார் உண்மையிலேயே ஒரு தீர்க்கதரிசி அல்லவா?

பெரியார் புகழ்

பெரியார் புகழ்

திராவிட இயக்கத்தின் உறுதி வாய்ந்த பிரம்மாண்டமான இந்த தூணை தவிர்த்துவிட்டு தமிழக வரலாற்றை யாருமே எழுத முடியாது.. பெரியார் - அறிவுபூட்டின் திறவுகோல்.. அடிமை விலங்கை நொறுக்கியவர்.. சாதி சாட்டையை சுழட்டியடித்த வெண்தாடி கிழவன்.. யுகங்கள் கழிந்தாலும், பூமிப்பந்து சுழன்று சுழன்று காலத்தை உருட்டினாலும் பெரியாரின் புகழும் சேர்ந்தே பயணிக்கும் என்பதுதான் நிதர்சனமான உண்மை!

விருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,
இன்றே பதிவு செய்யுங்கள்
- பதிவு இலவசம்!

 
 
 
English summary
thanthai periyar's 46th death anniversary today
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more