சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

8 வருட அ.தி.மு.க அரசின் நிர்வாகச் சீர்குலைவே தண்ணீர் பஞ்சத்திற்கு காரணம்.. ஸ்டாலின் அறிக்கை

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சத்திற்கு எட்டு ஆண்டுகால அ.தி.மு.க அரசின் நிர்வாகச் சீர்குலைவே தலையாய காரணம் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகம் வழக்கமாகப் பெறும் மழையளவில் 69 சதவீதத்திற்கு மேல் பற்றாக்குறை ஏற்பட்டது என்பது தெரிந்த பிறகும், அ.தி.மு.க அரசின் அலட்சியத்தாலும் நிர்வாகப் படு தோல்வியாலும் இன்றைக்கு சென்னை மாநகரம் உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கடும் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது.

The administrative disruption of the AIADMK government is the cause of water Scarcity, Stalins Statement

ஒரு குடம் தண்ணீர் கூடக் கிடைக்காமல் தாய்மார்கள் குழாயடிகளில் காலிக்குடங்களுடன் "க்யூ" வரிசையில் கால் கடுக்கப் பல மணி நேரம் காத்து நிற்கும் அவல நிலைமையை, உதவாக்கரை முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிசாமியும், உள்ளாட்சித்துறை அமைச்சர் திரு. எஸ்.பி. வேலுமணியும் உருவாக்கியிருப்பதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை மாநகருக்குக் குடிநீர் வழங்கும் ஆதாரங்களாக உள்ள பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் உள்ளிட்ட அனைத்து ஏரிகளும் வறண்டு போய் கிடக்கின்றன. நாளொன்றுக்கு 200 மில்லியன் லிட்டர் சுத்திகரித்து, சென்னை மாநகருக்குக் குடிநீர் வழங்கும் மீஞ்சூர் மற்றும் நெம்மேலி கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டங்கள் மூலம் அ.தி.மு.க ஆட்சியில் முழு அளவு குடிநீரும் பெறப்படுகிறதா என்ற மிகப்பெரும் சந்தேகம் எழுந்திருக்கிறது.

"குடிநீர் ஆதாரங்களாகத் திகழும் ஏரிகளை ஆழப்படுத்தி, நீர்தேக்கக் கொள்ளளவை உயர்த்தப் போகிறோம்" என்று நிதி நிலை அறிக்கையிலும், மான்யக் கோரிக்கைகளிலும் அ.தி.மு.க அரசு வெளியிட்ட அறிவிப்புகளும், ஒதுக்கப்பட்ட நிதிகளும் பதுக்கப்பட்ட நிதிகளாகி அதோ கதியாகி விட்டன.சென்னை, ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் அ.தி.மு.க அரசு அறிவித்த "கடல்நீரைக் குடிநீராக்கும்" திட்டங்கள் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளன.

"கூட்டுக் குடிநீர் திட்டங்களையோ" "கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டங்களையோ" நிறைவேற்றி சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் குடிநீர்த் தேவைகளைப் பூர்த்தி செய்யும் தொலைநோக்கு சிந்தனைக்கு அ.தி.மு.க அரசில் மிகப்பெரும் "பற்றாக்குறை"யும் வறட்சியும் ஏற்பட்டு விட்டது.எட்டு ஆண்டுகால அ.தி.மு.க அரசின் நிர்வாகச் சீர்குலைவே இப்போது ஏற்பட்டுள்ள தண்ணீர்ப் பஞ்சத்திற்கு தலையாய காரணம் என்பது ஒருபுறமிருக்க, "ஆன்லைன்" மற்றும் "போன் புக்கிங்" மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது என்று சென்னைப் பெருநகர் குடிநீர் வடிகால் வாரியம் கூறுகிறது.

ஆனால் "புக்கிங்" செய்யப்படும் ஒரு லோடு லாரித்தண்ணீர் சப்ளை ஆவதற்கு குறைந்தபட்சம் 10 நாட்களும் - அதிகபட்சமாக 15 நாட்களும் ஆகிறது. சென்னைக்கு ஏற்பட்டுள்ள குடிநீர்ப் பஞ்சத்தைப் போக்க சென்னை பெருநகர குடிநீர் வடிகால் வாரியமும் நடவடிக்கை எடுக்கவில்லை. தமிழ்நாட்டில் உள்ள ஏனைய மாவட்டங்களின் குடிநீர்ப் பிரச்னையைத் தீர்க்க தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியமும் கண்டுகொள்ளவில்லை. இரு வாரியங்களும் செயலிழக்க வைக்கப்பட்டு- "கமிஷனிலும்" "கலெக்ஷனிலும்" முற்றிலும் மூழ்கடிக்கப்பட்டு- உள்ளாட்சித் துறை அமைச்சர் திரு எஸ்.பி. வேலுமணியின் சொந்த கஜானாவை நிரப்பும் பணியைச் செய்வதற்கே அ.தி.மு.க ஆட்சியில் முழுமையாக பயன்படுத்தப்பட்டுள்ளன என்பது வெட்கக்கேடானது.

கிராமப்புற மக்களின் குடிநீர்த் தேவையை நிறைவேற்ற கழக ஆட்சியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் அமைக்கப்பட்டது. மீஞ்சூர், நெம்மேலி கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. "ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம்" உள்ளிட்ட தமிழகம் முழுவதும் செயல்பாட்டில் உள்ள அனைத்துக் கூட்டுக் குடிநீர்த் திட்டங்களும் தலைவர் கலைஞர் அவர்கள் தலைமையிலான கழக ஆட்சியில்தான் நிறைவேற்றப்பட்டன. ஆனால் அ.தி.மு.க ஆட்சியோ "வெற்று அறிவிப்பு" அல்லது "வெற்று வேட்டு" அரசாகவே எட்டு வருடங்களைக் கழித்து தமிழக மக்களை பெருமளவுக்கு வஞ்சித்து விட்டது.

எவ்வித கூட்டுக் குடிநீர்த் திட்டங்களையும் நிறைவேற்றாமல் குறட்டை விட்டு தூங்கி விட்டது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நான் ஏரி குளங்களை தூர் வாரத் தொடங்கியவுடன் "குடிமராமத்து" என்று ஒரு திட்டத்தை "பகட்டாக" அறிவித்து- இதுவரை 1000 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்துள்ளதாக "கணக்கு" காட்டியுள்ளது அ.தி.மு.க அரசு. ஆனால் தமிழகத்தில் உள்ள எந்த ஏரிகளும், குளங்களும் தூர்வாரப்படவில்லை என்பது இப்போது ஏற்பட்டுள்ள தண்ணீர் பற்றாக்குறை மூலம் பட்டவர்த்தனமாகத் தெரிகிறது. தாண்டவமாடும் தண்ணீர்ப் பஞ்சம் முதலமைச்சர் திரு பழனிசாமி அறிவித்த குடிமராமத்துத் திட்டத்திற்கு ஏற்பட்ட படு தோல்வி. ஆட்சிகள் மாறும். ஆனால் அரசு நிர்வாகம் நிலையானது.

ஆகவே சென்னை மாநகரம் உள்பட தமிழகம் முழுவதும் தலைவிரித்தாடும் தண்ணீர்ப் பஞ்சத்தைத் தீர்க்க தமிழக அரசின் தலைமைச் செயலாளரும், துறைச் செயலாளர்களும் மற்றும் குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக இயக்குநர்களும் போர்க்கால நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும், சென்னை மாநகர மக்களுக்குக் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் குடிநீர் விநியோகம் செய்ய மாற்று ஏற்பாடுகளை எவ்வித காலதாமதமும் இன்றி செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன்.

மீஞ்சூர் மற்றும் நெம்மேலி கடல் நீரைக்குடிநீராக்கும் நிலையங்களில் நாளொன்றுக்கு 200 மில்லியன் லிட்டர் (எம்.எல்.டி) தண்ணீரும் சுத்திகரிக்கப்படுகிறதா என்பதை உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும் எனவும், நிலுவையில் உள்ள கடல்நீரை குடிநீராக்கும் திட்டங்கள் மற்றும் கூட்டுக் குடிநீர்த் திட்டங்களை விரைந்து செயல்படுத்திடவும்- ஆழ்குழாய் கிணறுகள் அமைப்பது உள்ளிட்ட குடிநீர்த் திட்டப் பராமரிப்புப் பணிகளில் அதிக கவனம் செலுத்திடவும் நடவடிக்கைகளை மேற்கொண்டிட வேண்டும் எனவும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

English summary
Stalin's Statement That administrative disruption of the AIADMK government is the cause of water Scarcity
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X