ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையம் அன்று அதிகார மையம் இன்று நினைவு இல்லம் - என்னென்ன சிறப்பம்சம்
சென்னை: ஜெயலலிதா வாழ்ந்த வீடான வேதா நிலையம் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தின் அதிகார மையமாக இருந்தது. வேதா நிலையத்தில்தான் அதிமுகவினரின் தலையெழுத்து தீர்மானிக்கப்படும். ஜெயலலிதா உயிரோடு இருந்த வரை இரும்புக்கோட்டையாக இருந்த இடம் அவரது மறைவுக்குப் பிறகு இப்போது மக்கள் பார்வையிடும் நினைவு இல்லமாக மாறியுள்ளது.
ஜெயலலிதா தமிழக அரசியலுக்கு அறிமுகமான காலம் முதல் பிரபலமானது அவருடைய போயஸ் கார்டன் வீடு. அரசு ஆவணங்களில் உள்ளபடி கடந்த 15 ஜூலை 1967ல், சென்னை, போயஸ் தோட்டத்தை ஜெயலலிதாவின் தாயார் சந்தியா, தன் பெயரில் வாங்கினார்.

24 ஆயிரம் சதுர அடி பரப்பளவிலான அந்த நிலத்தில், 21 ஆயிரத்து 662 சதுர அடிக்கு, கட்டடம் கட்டப்பட்டுள்ளது. அந்த இடத்தின் சர்வே எண்: 15/67. வருவாய் ஆவணங்களின் அடிப்படையில், போயஸ் தோட்டம் இல்லம், சென்னை, தேனாம்பேட்டை கிராமத்தை சேர்ந்தது.
வேதா நிலையம் வீட்டிற்குள் சென்றவர்களுக்கு அந்த மாளிகையின் பிரம்மாண்டம் தெரியும் வாசலில் மிகப்பெரிய பலா மரம், அழகிய பூந்தோட்டம், மிகப்பெரிய நீச்சல் குளம், 20க்கும் மேற்பட்ட அறைகள் அவற்றில் ஒவ்வொரு அறையிலும் ஏசி என காண்போரை மிரள வைக்கும்.
வேதாநிலையம் கிரகப்பிரவேசம் 49 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 1972ஆம் ஆண்டு மே 15ஆம் தேதி நடந்துள்ளது. தனது தாயாரின் நினைவாகவே வேதாநிலையம் என்று பெயர் சூட்டினார் ஜெயலலிதா. தமிழக அரசியலின் தவிர்க்க முடியாத தலைவியாக வாழ்ந்து மறைந்த ஜெயலலிதாவின் வீடு அவர் இருந்தவரைக்கும் தமிழகத்தின் அதிகார மையமாக இருந்தது. வேதா நிலையத்தில்தான் அதிமுகவினரின் தலையெழுத்து தீர்மானிக்கப்படும். இரும்புக்கோட்டையாக இருந்த இடம் இப்போது நினைவு இல்லமாக மாறியுள்ளது.
ஜெயலலிதாவின் வீட்டில் உள்ள அசையும் சொத்துகளான 32,721 பொருட்களில் 8,376 புத்தகங்களும் அடக்கம். திருக்குறள் முதற்கொண்டு ஜவஹர்லால் நேருவின் டிஸ்கவரி ஆஃப் இந்தியாவும், சுயசரிதை புத்தகங்களும், ஜெர்னல்களும் அதில் அடக்கம்.
அங்குள்ள புத்தகங்களில் 75% புத்தகங்கள் ஆங்கில நூல்கள் தான். அங்கிருக்கும் தமிழ் புத்தகங்கள் பலவும் பெரியார் மற்றும் முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் படைப்புகள். அதைத் தவிர, திருக்குறள் மொழி பெயர்ப்பு, ஆதி சங்கராச்சாரியாவின் புத்தகங்கள், கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்து மதம் ஆகியவையும் உள்ளன. தி டிஸ்கவரி ஆஃப் இந்தியா புத்தகம் சிறப்பான முறையில் பாதுகாக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவின் புத்தகங்களின் சட்டம் குறித்த சில புத்தகங்களும், முன்னாள் முதல்வர்கள் அண்ணாதுரை, எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர்கள் குறித்து எழுதப்பட்ட ஆராய்ச்சி கட்டுரைகள், அகத்தா கிறிஸ்ட்டியின் திகில் நாவல்கள் மற்றும் குஷ்வந்த் சிங்கின் நாவல்களும் உள்ளன.
வேதா நிலையத்தில் இருக்கும் முதல் மாடியில் வெகு நேரம் அமர்ந்து புத்தகங்கள் படிப்பதை வாடிக்கையாக கொண்டிருந்தார் ஜெயலலிதா. அந்த நூலகத்தை மக்கள் பார்வையிட அரசு அனுமதிக்க உள்ளது. சென்னைக்கு சென்று வரும் அதிமுகவினர் அதிகம் பார்த்து செல்வது அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலிதா நினைவிடம், எம்ஜிஆர் வாழ்ந்த ராமாவரம் தோட்டவீடு, தி.நகரில் உள்ள எம்ஜிஆர் நினைவு இல்லம். இப்போது ஜெயலலிதா வாழ்ந்த வீடும் நினைவு இல்லமாக மாறியுள்ளதால் மக்கள் அதிகம் வந்து பார்த்து செல்லும் வீடாக போயஸ்கார்டன் வீடு மாறும் என்பது நிச்சயம்.