சூடான டீ, மிளகாய் பஜ்ஜியுடன் ரெடியா இருங்க! இன்று இந்த 15 மாவட்டங்களில் கனமழை பெய்யுமாம்!
சென்னை : தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தமிழ்நாட்டில் கோடை காலம் முடிவடைந்துள்ள நிலையில் தற்போது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது இதன் காரணமாக நீர் நிலைகளும் நிரம்பி உள்ளது.
கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கனமழை பெய்து வரும் நிலையில் இன்றும் தமிழ்நாடு புதுவை மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் 15 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் இரவு முழுக்க பெய்த மழை.. பல பகுதிகளில் தேங்கிய நீர்.. இன்று மழை பெய்யுமா? ரிப்போர்ட்

இன்று மழைக்கு வாய்ப்பு
இதுகுறித்து தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளைய வானிலை
நாளை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 23,24, 25 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை வானிலை
சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான / கனமழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

பதிவான மழை அளவு
கடந்த 24 மணி நேரத்தில் ரெட் ஹில்ஸ் (திருவள்ளூர்) 8, திருவாலங்காடு (திருவள்ளூர்), அரக்கோணம் (இராணிப்பேட்டை), பொன்னை அணை (வேலூர்), மரக்காணம் (விழுப்புரம்), குட் வில் பள்ளி, வில்லிவாக்கம் (திருவள்ளூர்), பூண்டி (திருவள்ளூர்), தாம்பரம் (செங்கல்பட்டு), பந்தலூர் தாலுகா அலுவலகம். (நீலகிரி) தலா 7, ஸ்ரீபெரும்புதூர் (காஞ்சிபுரம்), தேவாலா (நீலகிரி), சோளிங்கர் (இராணிப்பேட்டை), எம்ஜிஆர் நகர் (சென்னை), சோழவரம் (திருவள்ளூர்), செருமுள்ளி (நீலகிரி) தலா 6 மழை பெய்துள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை
இன்று இலட்சத்தீவு பகுதி, வடக்கு கேரளா - கர்நாடக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு, தென் கிழக்கு அரபிக்கடல், வடக்கு ஆந்திரா கடலோரப்பகுதி மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடை இடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். நாளை மற்றும் நாளை மறுநாள் லட்சத்தீவு பகுதி, கர்நாடக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு, தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடை இடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்" என குறிப்பிடப்பட்டுள்ளது.